FACT CHECK: இந்துக்கள் தமது நாய்களை பாதுகாத்திட வேண்டும் என்று எச்.ராஜா கூறினாரா?
மார்கழி மாதம் இந்துக்கள் தங்கள் நாய்களை பத்திரமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று பா.ஜ.க முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியதாக பரவும் ஒரு நியூஸ் கார்டு பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
அசல் பதிவைக் காண: Facebook I Archive
எச்.ராஜா புகைப்படத்துடன் கூடிய புதிய தலைமுறை நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், "மார்கழி மாதம் இந்துக்கள் தங்களது தெரு நாய்களை பத்திரமாகப் பார்த்துக்கொள்ளுங்கள். மாற்று மத தெருவில் உள்ள தெருநாய்கள் மதமாற்றம் செய்யக்கூடும் - ஹெச்.ராஜா, பாஜக" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த பதிவை ஆண்டி-இந்தியன் என்ற ஃபேஸ்புக் பக்கம் 2020 டிசம்பர் 20 அன்று பகிர்ந்துள்ளது. பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
புதிய தலைமுறை தொலைக்காட்சி வெளியிட்ட நியூஸ் கார்டை எடிட் செய்து நாய் இனப்பெருக்கத்தில் ஈடுபடும் காட்சி வைத்து போலியான நியூஸ் கார்டை வெளியிட்டிருப்பது தெளிவாக தெரிகிறது. இருப்பினும் இதை ஏராளமானவர்கள் ஷேர் செய்து வருகின்றனர். எனவே, இது எடிட் செய்யப்பட்டது என்பதை உறுதி செய்வதற்கான ஆய்வை நடத்தினோம்.
முதலில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட நியூஸ் கார்டில் குறிப்பிடப்பட்டுள்ள 2020 டிசம்பர் 19ம் தேதி வெளியான எச்.ராஜா தொடர்பான அசல் நியூஸ் கார்டை தேடி எடுத்தோம்.
அதில், "போலி விவசாயிகளை வைத்து டெல்லியில் போராட்டம்; யாரெல்லாம் விவசாயம் செய்யவில்லையோ அவர்கள்தான் போராடுகின்றனர் - ஹெச்.ராஜா. பாஜக" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதைத்தான் மாற்றியிருக்கிறார்கள் என்பது தெரிந்தது.
அசல் பதிவைக் காண: Facebook I Archive
இது தொடர்பாக புதிய தலைமுறை தொலைக்காட்சி டிஜிட்டல் பிரிவு ஹெட் மனோஜ் குமாரிடம் பேசினோம். அவரும் "இது பற்றி எங்களிடம் பலரும் கேட்டனர். இது போலியானதுதான்" என்றார்.
இதன் அடிப்படையில் டெல்லி விவசாயிகள் போராட்டத்தை விமர்சித்து எச்.ராஜா பேசியது தொடர்பான நியூஸ் கார்டை எடுத்து எடிட் செய்து, விஷமத்தனமான தகவலை சேர்த்து சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருவது உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
இந்துக்கள் தங்கள் நாய்களை பத்திரமாக பார்த்துக்கொள்ள வேண்டும் என்று எச்.ராஜா கூறியதாக பகிரப்படும் நியூஸ் கார்டு போலியானது என்பதை ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
Title:இந்துக்கள் தமது நாய்களை பாதுகாத்திட வேண்டும் என்று எச்.ராஜா கூறினாரா?
Fact Check By: Chendur PandianResult: Altered