FactCheck: இது தயாநிதி மாறனின் கார் அல்ல!
‘’தயாநிதி மாறனின் காரை பாமகவினர் சேலத்தில் தாக்கிய புகைப்படம்,’’ எனக் கூறி பகிரப்பட்டு வரும் தகவல் ஒன்றை சமூக வலைதளங்களில் காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.
தகவலின் விவரம்:
இந்த ஃபேஸ்புக் பதிவில், தயாநிதி மாறனின் புகைப்படங்களையும், கார் ஒன்று தாக்கப்பட்டது போன்ற புகைப்படத்தையும் இணைத்து, அதன் மேலே, ‘’ தரமான சம்பவம் 🔥🔥 1 1/2கோடி பென்ஸ் காரை உடைத்து… ரயில் ஏற்றி சென்னைக்கு ஓமலூரிலிருந்து துரத்திவிட்டனர் கேபிள் திருடனை… தமிழ் வாழ்க,’’ என்று எழுதியுள்ளனர்.
இதனைப் பலரும் உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
சமீபத்தில் சேலத்திற்கு தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள சென்றிருந்த, திமுக எம்பி., தயாநிதி மாறனுக்கு பாமக.,வினர் கறுப்புக் கொடி காட்டியதால், இரு தரப்பிற்கும் வாக்குவாதம் முற்றி மோதல் ஏற்பட்டது. இதன்போது, தயாநிதி மாறனின் கார் மீது பாமக.,வினர் கல் வீசி தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, பாமகவினர் தாக்கிய தயாநிதி மாறனின் கார் என்று கூறி குறிப்பிட்ட புகைப்படத்தை, சமூக வலைதளங்களில் பலரும் ஷேர் செய்து வருகின்றனர். ஆனால், அது தவறான ஒன்றாகும்.
இதனைக் குறிப்பிட்டு, தயாநிதி மாறன், அவரது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதன்படி, வியட்நாம் நாட்டில் உள்ள ஹனோய் நகரில் நிகழ்ந்த கார் விபத்து தொடர்பான புகைப்படத்தை எடுத்து, தயாநிதி மாறனின் கார் என்று கூறி தகவல் பகிர்ந்துள்ளனர் என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் தவறானது என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.