மேட்டுப்பாளையம் – உதகை இடையிலான மலை ரயில் சேவை தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டதா?

அரசியல் | Politics சமூக ஊடகம் | Social தமிழ்நாடு | Tamilnadu

‘’ஊட்டி – மேட்டுப்பாளையம் இடையிலான மலை ரயில் சேவை தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டது,’’ என்று கூறி ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் ஒரு செய்தி வைரலாகப் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.

தகவலின் விவரம்: 

Facebook Claim LinkArchived Link

இந்த ஃபேஸ்புக் பதிவில், செய்தித்தாள் ஒன்றில் வெளியான செய்தியின் ஸ்கிரின்ஷாட்டை இணைத்துள்ளனர். அந்த செய்தியில், ‘’மேட்டுப்பாளையம் – உதகை இடையே 8 மாதங்களுக்குப் பிறகு மலை ரயில் சேவை சனிக்கிழமை தொடங்கியது. ரயில் பராமரிப்பு தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டு, பயணக் கட்டணம் ரூ.3,000 வசூலிக்கப்பட்டது,’’ என விரிவாக எழுதப்பட்டுள்ளது.

இதனை பார்ப்பவர்கள், மேட்டுப்பாளையம் – உதகை இடையிலான மலை ரயில் சேவை தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டது எனக் கருதுகின்றனர். இதனால், குறிப்பிட்ட செய்தி சமூக வலைதளங்களில் மட்டுமின்றி முன்னணி ஊடகங்களிலும் வைரலாகப் பகிரப்பட்டு வருகிறது.

Facebook Claim Link 1Archived Link 1
Facebook Claim Link 2Archived Link 2
Facebook Claim Link 3Archived Link 3

  உண்மை அறிவோம்:
Nilgiri Mountain Railway என்ற பெயரில் மேட்டுப்பாளையம் முதல் உதகமண்டலம் வரை நீராவியில் இயக்கப்படும் மலை ரயில் சேவை மிகவும் பிரபலமான ஒன்றாகும். கடந்த 1908ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த ரயில் சேவை, தமிழ்நாட்டின் பாரம்பரிய அடையாளங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இது யுனெஸ்கோ அங்கீகாரம் பெற்றதாகும்.

TamilNadu Govt Tourism Portal Link

இந்நிலையில், இந்த ரயில் சேவையை நிர்வகிக்கும் பொறுப்பு தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டு விட்டதாக, ஊடகங்களிலும் பரபரப்புடன் செய்தி வெளியிடப்பட்டது.

Samayam Tamil News LinkArchived Link
Dinakaran News LinkArchived Link
Maalaimalar News LinkArchived Link

ஊடகங்களில் இவ்வாறு செய்தி வெளியானதும், இந்த விவகாரம் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. அரசியல் கட்சித் தலைவர்களும், சமூக ஆர்வலர்களும் இதுபற்றி ஆளுக்கு ஒரு கருத்தை வெளியிட, அரசு (ரயில்வே நிர்வாகம்) தரப்பில் உரிய விளக்கம் தர வேண்டும் என எதிர்பார்ப்பு எழுந்தது.

Archived Link

இதையடுத்து, சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, ரயில்வே தரப்பில் ஒரு விளக்கம் தரப்பட்டுள்ளது. சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தியறிக்கை கீழே இணைக்கப்பட்டுள்ளது.

Archived Link

இதன்படி, ‘’கொரோனா வைரஸ் தொற்று பரவல் காலம் என்பதால், தற்போதைய சூழலில் மலை ரயில் சேவை பொதுமக்கள் சேவைக்கு இன்னமும் திறந்துவிடப்படவில்லை. 2020 டிசம்பர் 5, 6 ஆகிய நாட்களில் ஒரு தனியார் நிகழ்விற்காக, சுற்றுலாப் பயணிகளுக்காக சிறப்பு சேவையை உதகை மலை ரயில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. இதுபோன்ற சேவைகள் கடந்த காலத்திலும் நிகழ்ந்துள்ளன. எதிர்காலத்திலும் நடைபெறும். மற்றபடி, மலை ரயில் சேவை ஒட்டுமொத்தமாக தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டுவிட்டதாக, பரவும் செய்திகள் எதுவும் உண்மையானது இல்லை. அதேபோல, கொரோனா தடை முடிந்த பின்னர் விரைவில் மலை ரயில் சேவை அதிகாரப்பூர்வமாக தேதி அறிவிக்கப்பட்டு, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரும்’’ என தெளிவாகிறது.

அதேசமயம், இந்திய ரயில்வே துறையை தனியார் மயமாக்கும் திட்டம் மத்திய அரசிடம் உள்ளதாக, ஏற்கனவே ஊடகங்களில் செய்தி வெளியாகி வருகிறது.

முதல்கட்டமாக, ஊட்டி, டார்ஜிலிங் போன்ற பகுதிகளில் இயங்கும் மலை ரயில் சேவையை தனியார் பொறுப்பில் ஒப்படைத்து, அது வெற்றிகரமாக இயக்கப்பட்டால், பிறகு ஒட்டுமொத்த ரயில்வே துறையையும் தனியார் பொறுப்பில் ஒப்படைக்கவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதுபற்றி தினமலர் ஊடகம் 2019ம் ஆண்டு வெளியிட்ட செய்தி லிங்க் கீழே தரப்பட்டுள்ளது. 

Dinamalar News LinkArchived Link

இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் நமக்கு தெரியவரும் உண்மையின் விவரம்,

1) தனியார் நிகழ்வு ஒன்றிற்காக, சிறப்பு ரயில் சேவையை ஊட்டி மலை ரயில் நிர்வாகம் கடந்த டிசம்பர் 5, 6 ஆகிய தேதிகளில் செய்திருக்கிறது. இதன்போது நிர்ணயிக்கப்பட்டிருந்த டிக்கெட் விலையை தவறாகப் புரிந்துகொண்டு, ஊடகங்கள் உள்பட பலரும் செய்தி பகிர்ந்து வருகின்றனர்.

2) தற்சமயம் வரையிலும், ஊட்டி மலை ரயில் தனியார் மயமாக்கப்படவில்லை. இதுபற்றி சேலம் ரயில்வே கோட்டம் விளக்கமும் அளித்துள்ளது.

3) ரயில்வே துறையை தனியார் மயமாக்கும் திட்டம் மத்திய அரசின் பரிசீலனையில் உள்ளது. அதற்காக, முதலில் ஊட்டி, டார்ஜிலிங் மலை ரயில் சேவையை தனியார் வசம் ஒப்படைத்து சோதனை ஓட்டம் நடத்தி, தனியார் செயல்பாடு திருப்திகரமாக இருந்தால், இதர ரயில்வே சேவைகளையும் தனியார் வசம் ஒப்படைக்கவும் அரசு ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது. அதையும் மறுப்பதற்கில்லை.

முடிவு:

தகுந்த ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் தவறானது என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:மேட்டுப்பாளையம் – உதகை இடையிலான மலை ரயில் சேவை தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டதா?

Fact Check By: Pankaj Iyer 

Result: False