FACT CHECK: தி.மு.க அரசு ஆரம்பித்த பெண்களுக்கான மதுக்கடை என்று பரவும் படம் உண்மையா?
விடியல் அரசின் பெண்களுக்கான மதுக் கடை என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
நம்முடைய வாசகர் ஒருவர் நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ சாட்பாட் வாட்ஸ் அப் எண்ணுக்கு புகைப்படம் ஒன்றை அனுப்பி அது உண்மையா என்று கேள்வி எழுப்பியிருந்தார். மதுக்கடை ஒன்றில் பெண் ஒருவர் அமர்ந்திருக்கும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. அதன் மேல், "விடியல் அரசின் மம்மி மதுக் கடை" என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
அசல் பதிவைக் காண: Facebook I Archive
இந்த பதிவை ஃபேஸ்புக்கில் யாராவது பகிர்ந்து வருகிறார்களா என்று பார்த்தோம். இந்த புகைப்பட பதிவை Muruga Muruga என்ற ஃபேஸ்புக் ஐடி-யைக் கொண்ட நபர் 2021 டிசம்பர் 17ம் தேதி பதிவிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
தமிழ்நாட்டில் மதுரையில் முதன் முதலாக பெண்களுக்கு டாஸ்மாக் மதுக்கடை, பாரை தி.மு.க அரசு தொடங்கியுள்ளது என்று சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டது. மதுரையில் அப்படி மதுக்கடை எதுவும் திறக்கப்படவில்லை, 2017ம் ஆண்டிலிருந்து பரவும் வதந்தியைப் புதிது போல 2021ம் ஆண்டில் பரப்பி வருகின்றனர் என்று நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோவில் ஆய்வுக் கட்டுரை வெளியிட்டிருந்தோம்.
இந்த சூழலில் விடியல் (தி.மு.க ஸ்டாலின்) அரசின், மம்மி (பெண்கள்) மதுக் கடை என்று பெண் ஒருவர் ஒயின் ஷாப்பில் அமர்ந்திருக்கும் படத்தை பகிர்ந்துள்ளனர். இதன் மூலம் மதுரையில் அல்லது தமிழ்நாட்டில் ஏதோ ஒரு பகுதியில் தி.மு.க அரசு திறந்த மது பானக் கடையில் அமர்ந்திருக்கும் என்று குறிப்பிட்டிருப்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. மேலும், இந்த பதிவைப் பார்க்கும் சிலர் இதுதான் மதுரையில் தி.மு.க அரசு திறந்த பெண்களுக்கான பிரத்தியேக டாஸ்மாக் பார் என்று கருத்துக்களைப் பதிவிட்டு வருவதைக் காண முடிந்தது. கமெண்ட் பகுதியில் ஒருவர் "இது தான் மதுரையில் திறக்கப்பட்ட பெண்களுக்கான மதுபான கடையா ...?" என்று கேட்டுள்ளதன் மூலம் இதைத் தெளிவாக அறிய முடிகிறது. எனவே, இந்த புகைப்பட பதிவு பற்றி ஆய்வு செய்தோம்.
அசல் பதிவைக் காண: Facebook
ஏற்கனவே, மதுரையில் பெண்களுக்கான பிரத்தியேகமான டாஸ்மாக் பார் எதுவும் திறக்கப்படவில்லை என்று ஏற்கனவே உறுதி செய்து அது தொடர்பான ஆய்வுக் கட்டுரையை நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோவில் வெளியிட்டுள்ளோம். எனவே, இந்த புகைப்படம் எங்கு எப்போது எடுக்கப்பட்டது என்று மட்டுமே ஆய்வு செய்தோம்.
இந்த புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது 2017ம் ஆண்டிலிருந்து இந்த புகைப்படத்தை சமூக ஊடகங்களில் பலரும் பகிர்ந்து வருவதைக் காண முடிந்தது. பலரும் தங்களின் கனவு மாமியார், இப்படி ஒரு மாமியார் கிடைத்தால் காலம் முழுக்க அடிமையாக இருப்போம் என்று நையாண்டி பதிவிட்டு வந்திருப்பதைக் காண முடிந்தது.
பல்வேறு ரிவர்ஸ் இமேஜ் தேடல்களில் பதிவேற்றித் தேடிய போது, 2017ல் தமிழில் வெளியான ட்வீட் பதிவு ஒன்று கிடைத்தது. அதில், "பாண்டிசேரி wine shop owner ஆம் நாங்கூட லாயர் ஆபீஸோன்னு நினச்சேன்" என்று குறிப்பிட்டிருந்தனர். உண்மையில் இந்த புகைப்படம் புதுச்சேரியில் எடுக்கப்பட்டதுதானா என்பதை உறுதி செய்ய முடியவில்லை.
அதே நேரத்தில் 2017ம் ஆண்டிலேயே இந்த புகைப்படம் சமூக ஊடகங்களில் பதிவிடப்பட்டிருப்பதன் மூலம், மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு முதலமைச்சராகப் பதவியேற்ற பிறகு எடுக்கப்பட்டது இல்லை என்பதை உறுதி செய்ய முடிகிறது. ஏனெனில் தமிழ்நாட்டில் 2011 மே மாதம் முதல் 2021 மே முதல் வாரம் வரை அ.தி.மு.க தான் ஆட்சி செய்து வந்தது. ஸ்டாலின் 2021 மே மாதம்தான் முதலமைச்சராக பொறுப்பேற்றார்.
மதுரையில் பெண்களுக்கு என்று பிரத்தியேகமாக டாஸ்மாக் பார் எதுவும் திறக்கப்படவில்லை என்று ஏற்கனவே உறுதி செய்துள்ளோம். இந்த புகைப்படம் 2017ம் ஆண்டில் இருந்து சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவதையும் உறுதி செய்துள்ளோம். இந்த ஆதாரங்கள் அடிப்படையில் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் பெண்களுக்கான மதுக் கடை என்று பகிரப்படும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
ஸ்டாலின் ஆட்சியில் தொடங்கப்பட்டுள்ள பெண்களுக்கான மதுக்கடை என்று பகிரப்படும் ஸ்டாலின் ஆட்சிக்கு வருவதற்கு சில ஆண்டுகக்கு முன்பு இருந்தே சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel
Title:தி.மு.க அரசு ஆரம்பித்த பெண்களுக்கான மதுக்கடை என்று பரவும் படம் உண்மையா?
Fact Check By: Chendur PandianResult: False