FACT CHECK: திருப்பதியில் எடைக்கு எடை பணக் கட்டுகளை துலாபாரம் கொடுத்த ரஜினி?

அரசியல் | Politics சமூக ஊடகம் | Social தமிழ்நாடு | Tamilnadu

திருப்பதியில் நடிகர் ரஜினிகாந்த் எடைக்கு எடை பணக் கட்டுகளை துலாபாரம் கொடுத்தார் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive 1 I Archive 2

நம்முடைய வாசகர் ஒருவர் ரஜினிகாந்த் தொடர்பான வீடியோ ஒன்றை அனுப்பி அது உண்மையா என்று கேள்வி எழுப்பியிருந்தார். அதே போன்ற வீடியோ சமூக ஊடகங்களில் பல ஆண்டுகளாக பகிரப்பட்டு வருவதைக் காண முடிந்தது.

திருப்பதியில் நடிகர் ரஜினிகாந்த் துலாபாரம் நேர்த்திக்கடன் செலுத்தும் வீடியோ அது. நிலைத் தகவலில், “*திருப்பதியில் எடைக்கு எடை பணக்கட்டுகளை துலாபரம் கொடுத்தார் ரஜினிகாந்த்” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

K. Narayanan என்பவர் 2020 அக்டோபர் 5ம் தேதி பகிர்ந்துள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

ஃபேக்ட் கிரஸண்டோ வாட்ஸ் அப் சாட் பாட் (+91 9049053770) எண்ணுக்கு வாசகர் ஒருவர் ரஜினிகாந்த் துலாபாரம் செலுத்திய வீடியோவை அனுப்பியிருந்தார். அவருடைய எடைக்கு எடை ரூபாய் நோட்டுக்கள் துலாபாரம் செலுத்தப்பட்டதாக பகிரப்பட்டு வரும் அந்த தகவல் உண்மையா என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

இது தொடர்பாக ஆய்வு மேற்கொண்ட போது 2011ம் ஆண்டு ரஜினிகாந்த் துலாபாரம் நேர்த்திக்கடன் செலுத்தியதும், அப்போது இருந்து கட்டுக்கட்டாக பணம் செலுத்திய ரஜினிகாந்த் என்று சமூக ஊடகங்களில் பலரும் தகவல் பரப்பி வருவது தெரிந்தது.

2011ம் ஆண்டு ரஜினிக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டது. இதனால் சிங்கப்பூரில் உள்ள மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இதைத் தொடர்ந்து திருப்பதிக்கு சென்று அவர் நேர்த்திக்கடன் செலுத்தினார். துலாபாரம் பொருளை அட்டைப் பெட்டியில் வைத்து செலுத்தியதால் வதந்தி பரவியிருப்பது தெரிந்தது. 2011ம் ஆண்டில் இருந்து இப்போது 2020ம் ஆண்டு வரை ஃபேஸ்புக்கில் அந்த வதந்தி பரவி வருகிறது. 

திருப்பதி தேவஸ்தானத்தில் எடைக்கு எடை ரூபாய் நோட்டுக்களை வழங்க முடியுமா என்ற கேள்வி எழுந்தது. எனவே, முதலில் துலாபாரம் நடைமுறை என்ன என்று தெரிந்துகொள்ள கோவில் இணையதளத்தை பார்வையிட்டோம். அப்போது ஒன்று, இரண்டு, ஐந்து ரூபாய் நாணயங்கள், அரிசி, வெள்ளம், கற்கண்டு, சர்க்கரை உள்ளிட்டவைகளை மட்டுமே துலாபாரம் நேர்த்திக்கடன் செலுத்த முடியும் என்று குறிப்பிட்டிருந்தனர். 

அசல் பதிவைக் காண: tirumalatirupationline.com I Archive

2011ம் ஆண்டு நடிகர் ரஜினிகாந்த் நேர்த்திக்கடன் செலுத்தியது பற்றி செய்தி ஏதும் வெளியாகி உள்ளதா என்று பார்த்தோம். 2011ம் ஆண்டு வெளியான செய்திகள் சில கிடைத்தன. குறிப்பாக நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட ஃபேஸ்புக் பதிவில் உள்ள வீடியோவின் அசல் நமக்கு கிடைத்தது. அதில் எந்த இடத்திலும் ரஜினிகாந்த் துலாபாரத்தில் எடைக்கு எடை ரூபாய் நோட்டுக்களை செலுத்தினார் என்று கூறப்படவில்லை.

2011ல் வெளியான பல செய்திகள் நமக்கு கிடைத்தன. அதில் நடிகர் ரஜினிகாந்த் உடல் எடைக்கு ஈடாக கற்கண்டுகள் செலுத்தப்பட்டது என்று குறிப்பிட்டிருந்தனர். 

அசல் பதிவைக் காண: andhrawishesh.com I Archive 1 I thinakaran.lk I Archive 2 

இது தொடர்பாக அப்போது வெளியான சன் தொலைக்காட்சி வீடியோவும் நமக்குக் கிடைத்தது. அதிலும் ரஜினிகாந்த் கற்கண்டுகளை துலாபாரம் வழங்கினார் என்றே குறிப்பிட்டு இருந்தனர்.

நேர்த்திக்கடன் என்பது அவரவர் சொந்த விஷயம். 2011ம் ஆண்டு துலாபாரம் வழங்கியபோதே ரஜினிகாந்த் கற்கண்டு வழங்கினார் என்று செய்தி வெளியாகி உள்ளது. அப்படி இருக்கும்போது கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுக்களை வழங்கினார் என்று எந்த ஒரு ஆதாரமும் இன்றி வதந்தி பரப்பி வருவது தவறானது.

நம்முடைய ஆய்வில், ரூபாய் நோட்டுக்களை துலாபாரமாக திருப்பதி தேவஸ்தானம் வாங்குவது இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் கற்கண்டுகளை துலாபாரமாக வழங்கினார் என்று 2011ம் ஆண்டு செய்தி வெளியாகி இருப்பது நமக்கு கிடைத்துள்ளது.

இதன் அடிப்படையில் திருப்பதியில் எடைக்கு எடை பணக் கட்டுக்களை ரஜினிகாந்த் வழங்கினார் என்று பகிரப்படும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், ரஜினிகாந்த் திருப்பதியில் எடைக்கு எடை பணம் செலுத்தினார் என்று பகிரப்படும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:திருப்பதியில் எடைக்கு எடை பணக் கட்டுகளை துலாபாரம் கொடுத்த ரஜினி?

Fact Check By: Chendur Pandian 

Result: False