ஜெயேந்திரரை விமர்சித்து தகவல் பகிர்ந்தாரா கே.டி.ராகவன்?
‘’ஜெயேந்திரரை விமர்சித்து தகவல் பகிர்ந்த கே.டி.ராகவன்,’’ என்று கூறி பகிரப்படும் தகவல் ஒன்றை கண்டோம். இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
குறிப்பிட்ட ஃபேஸ்புக் பதிவில், பாஜக தமிழ்நாடு பொதுச் செயலாளர் கே.டி.ராகவன் பெயரில் வெளியான ட்வீட் ஒன்றின் ஸ்கிரின்ஷாட்டை இணைத்துள்ளனர். அந்த ட்வீட்டில், பொன்.ராதாகிருஷ்ணன், காலஞ்சென்ற காஞ்சி ஜெயேந்திரரை சந்தித்தபோது எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து, அதன் மேலே, ‘’மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு தலைவரை சாதியை காரணம் காட்டி தரையில் அமர செய்வது எந்த விதத்தில் நியாயம்?,’’ என்று எழுதப்பட்டுள்ளது.
இதனை பார்ப்பதற்கு, கே.டி.ராகவன், ஜெயந்திரரை விமர்சித்தது போல உள்ளது என்பதால், பலரும் இதனை உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
காஞ்சி ஜெயேந்திரர் கடந்த 2018ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 28ம் தேதியன்று உயிரிழந்துவிட்டார். தொடர்புடைய செய்தி விவரம் கீழே தரப்பட்டுள்ளது.
அதேபோல, பொன்.ராதாகிருஷ்ணன் தற்போது மக்கள் பிரதிநிதியாக இல்லை. அவர் கடந்த மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு தோற்றுவிட்டார். அதற்கு முன்பாக, கடந்த 2014 -19 வரையான மத்திய அமைச்சரவையில்தான் அவர் மத்திய இணையமைச்சராக பதவி வகித்திருந்தார்.
இவர்கள் பகிர்ந்துள்ள ஸ்கிரின்ஷாட்டில் இடம்பெற்றுள்ள பொன்.ராதாகிருஷ்ணன், காஞ்சி ஜெயேந்திரர் சந்திப்பு என்பது சில ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த ஒன்று என தெரிகிறது.
எனவே, பழைய புகைப்படத்தை தற்போது பகிர்ந்து, அவர் விமர்சித்திருக்க வாய்ப்பில்லை. ஒருவேளை சில ஆண்டுகளுக்கு முன் இவ்வாறு பதிவிட்டிருக்கலாம் என தோன்றியது.
இதன்பேரில், கே.டி.ராகவனை தொடர்பு கொண்டு, நமது குழுவினர் விளக்கம் கேட்டனர். அதற்கு அவர், ‘’இது வேண்டுமென்றே என் பெயரில் எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் தயாரித்து வெளியிட்ட போலிச் செய்தி. இப்படி நான் எந்த பதிவும் சமூக வலைதளங்களில் வெளியிடவில்லை. இதுபற்றி ஏற்கனவே விளக்கம் அளித்து, ஃபேஸ்புக்கில் தகவல் பகிர்ந்துள்ளேன்,’’ எனக் குறிப்பிட்டார்.
அந்த ஃபேஸ்புக் பதிவின் லிங்கை அவரது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கம் சென்று கண்டுபிடித்தோம்.
மேலும், காஞ்சி சங்கராச்சாரியார் சாதி பார்த்து இவ்வாறு செய்தார் என்று முழுதாகச் சொல்லிவிட முடியாது. ஏனெனில், இளையராஜா போன்றோர் அவரை சந்திக்கையில், சமமான இருக்கையில் அமர்ந்தே சந்தித்துள்ளனர். சிலர் பக்தி காரணமாக இவ்வாறு கீழே அமர்வதாகவும் கூறப்படுகிறது.
ஆதார வீடியோ லிங்க் ஒன்றை கீழே இணைத்துள்ளோம்.
இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் நமக்கு தெரியவந்த உண்மையின் விவரம்,
1) பொன்.ராதாகிருஷ்ணன், காஞ்சி சங்கராச்சாரியார் சந்திப்பு தற்போதைய நிகழ்வு இல்லை. இந்த புகைப்படம் பழையதாகும்.
2) இந்த சந்திப்பு பற்றி கே.டி.ராகவன் எதுவும் விமர்சித்து தகவல் பகிரவில்லை. அவரது பெயரில் தயாரிக்கப்பட்ட போலியான செய்தி இது.
3) இதனை கே.டி.ராகவன் மறுத்துள்ளதோடு, தனது ஃபேஸ்புக் பக்கத்திலும் விளக்கம் அளித்துள்ளார்.
4) அவரது பெயரில், ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டதைப் போல, இந்த வதந்தியை 2 விதமாக தயாரித்து பகிர்ந்துள்ளனர்.
முடிவு:
தகுந்த ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் உள்ள தகவல் தவறானது என்று ஃபேக்ட்கிரஸண்டோ நிறுவனம் உறுதி செய்துள்ளது. இதுபோன்ற தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், +91 9049053770 என்ற வாட்ஸ்ஆப் எண்ணில் தகவல் தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம்.
Title:ஜெயேந்திரரை விமர்சித்து தகவல் பகிர்ந்தாரா கே.டி.ராகவன்?
Fact Check By: Pankaj IyerResult: False