பா.ஜ.க உள்ளிட்ட இந்து விரோத சக்திகளுக்கு வாக்களிக்கக் கூடாது என்று 11 மடாதிபதிகள் கூட்டறிக்கை வெளியிட்டார்கள், எனக் கூறி ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive

மடாதிபதிகள் ஒன்றாக இருக்கும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், "இந்து_விரோத_சக்திகளுக்கு_வாக்களிக்க_கூடாது. தமிழகத்தை சார்ந்த 11 மடாதிபதிகள் கூட்டறிக்கை

மோடியின் பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் இறந்த 240 பேரில் 230 பேர் இந்துக்கள்.

மோடியின் விவாயிகள் விரோத நடவடிக்கையால் இறந்த 14 ஆயிரம் விவசாயிகளில் 13800 பேர் இந்து விவசாயிகள்.

மோடியின் சமையல் எரிவாயு உருளை விலை உயர்வால் பதிக்கப்படும் மக்களில் 80 சதவீதம் மக்கள் இந்துக்கள்

மோடியின் பெட்ரோல், டீசல் விலை உயர்வால் பாதிக்கப்படும் மக்களில் 80 சதவீதம் பேர் இந்துக்கள்.

மோடியின் GST மூலம் ஏற்பட்ட உணவு பொருள் விலை உயர்வால் பாதிக்கப்படும் மக்களில் 80 சதவீதம் பேர் இந்துக்கள்.

மோடியின் ரயில் கட்டணம், பிளாட்பார டிக்கட் கட்டண உயர்வால் பாதிக்கப்படும் மக்களில் 80 சதவீதம் மக்கள் இந்துக்கள்.

எனவே மடாதிபதிகளின் கோரிக்கையை ஏற்று இந்து விரோத சக்திகளான பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளை இந்துக்கள் புறக்கணிக்க வேண்டும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அசல் பதிவைக் காண: Facebook I Archive

இந்த ச.ர.பா என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் 2021 ஜனவரி 7ம் தேதி பகிர்ந்துள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

பதிவைப் பார்க்கும்போது பா.ஜ.க இந்து விரோத கட்சி என்றும், அதனால் பா.ஜ.க மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு யாரும் வாக்களிக்க வேண்டாம் என்று மடாதிபதிகள் கூறுவது போல் உள்ளது. கொஞ்சம் ஆழமாக படித்துப் பார்த்தால் இந்து விரோத சக்திகளுக்கு வாக்களிக்கக் கூடாது என்று மட்டும் மடாதிபதிகள் கூறியிருப்பதும், யார் இந்து விரோதிகள் என்று சமூக ஊடக பதிவர் விளக்கம் அளித்திருப்பதும் தெளிவாகத் தெரிகிறது. ஆனால், மடாதிபதிகள் பா.ஜ.க-வுக்கு வாக்களிக்க வேண்டாம் என்று கூறிவிட்டதாக நினைத்து பலரும் இதை ஷேர் செய்து வருவதை காண முடிகிறது.

முதலில் மடாதிபதிகள் கூட்டறிக்கை எதுவும் வெளியிட்டார்களா, இந்த புகைப்படம் எங்கு எப்போது எடுக்கப்பட்டது என்று ஆய்வு செய்தோம். படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடியபோது, 2019ம் ஆண்டு ஏப்ரல் 14ம் தேதி 11 மடாதிபதிகள் ஒன்றாக நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது எடுக்கப்பட்டது என்று தெரியவந்தது.

அதில் எந்த ஒரு கட்சிப் பெயரையும் குறிப்பிட்டு அவர்கள் கூறவில்லை. "இந்து விரோத சக்திகளுக்கு வாக்களிக்க கூடாது. யாரெல்லாம் நம்மை மதிக்கிறார்கள், மதமாற்றம் செய்ய அனுமதிக்க மாட்டோம் என்று யார் சொல்லுகிறார்கள் என்பதை பார்க்க வேண்டும். இந்துக்களை யார் புறக்கணிக்கிறார்கள் என்பதை அடையாளம் காணுங்கள். குறிப்பிட்ட கட்சிக்கு வாக்களியுங்கள், என்று சொல்லவில்லை.

அசல் பதிவைக் காண: dailythanthi.com I Archive 1 I dinamalar.com I Archive 2

இந்துக்களுக்காக யார் பேசுவார்கள், யார் குரல் கொடுக்கிறார்கள் என்பதை அறிந்து செயல்பட வேண்டும் என்பது தான் எங்கள் கோரிக்கை. இந்துக்களின் ஒற்றுமையை இந்த தேர்தலில் காட்ட வேண்டும்" என்று கூறியதாக தெரியவந்தது.

இந்த பேட்டியில் மிகத் தெளிவாக எந்த ஒரு கட்சிக்கும் வாக்களியுங்கள் என்று கூறவில்லை, இந்துக்களுக்காக குரல் கொடுப்பவர்கள் யார் என்று அறிந்து செயல்படுங்கள் என்று மட்டுமே கூறியுள்ளனர். தொடர்ந்து வேறு ஏதாவது அறிக்கை, பேட்டி வெளியாகி உள்ளதா என்று தேடியபோது, 2020ம் ஆண்டு தினமலருக்கு பேரூர் ஆதினம் சாந்தலிங்க மருதாசல அடிகளார் அளித்த பேட்டியில் இந்து மதத்தை விமர்சிப்பவர்களுக்கு கண்டனம் என்று கூறியிருந்தார். அப்போதும் கூட எந்த ஒரு கட்சியின் பெயரையும் குறிப்பிடவில்லை.

மேலும் இது தொடர்பாக மடாதிபதிகள் கருத்தை அறிய பேரூர் ஆதீனத்தை தொடர்புகொண்டோம். விவரத்தைக் கேட்டுக் கொண்ட உதவியாளர், சுவாமிகள் தியானத்தில் இருப்பதாகவும் அவரிடம் விவரத்தை தெரிவித்து பின்னர் அழைப்பதாகவும் தெரிவித்தார்.

நம்மைத் தொடர்புகொண்ட அவர், “இந்த தகவல் தவறானது என்று சுவாமிகள் தெரிவித்துள்ளார். எந்த ஒரு கட்சிக்கு எதிராகவும் பேட்டி, அறிக்கையை மடாதிபதிகள் வெளியிடவில்லை. தவறான தகவல் பரப்புகிறவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

இந்து விரோத சக்திகளுக்கு வாக்களிக்கக் கூடாது என்று மடாதிபதிகள் பொதுவாக கூறிய பழைய செய்தியை வைத்து, பா.ஜ.க இந்துக்களுக்கு விரோதமாக செயல்படுகிறது என்று ஆதீனத் தலைவர்கள், மடாதிபதிகள் கூறியது போல, விஷமத்தனமான தகவலை தாங்களாகவே சேர்த்து சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருவது உறுதியாகிறது.

நம்முடைய ஆய்வில்,

பா.ஜ.க மற்றும் அதன் கூட்டணிக் கட்சிக்கு வாக்களிக்க வேண்டாம் என்று மடாதிபதிகள் எந்த ஒரு கூட்டறிக்கையும் வெளியிடவில்லை.

கூட்டறிக்கை வெளியிட்டதாக பகிரப்படும் தகவல் தவறானது என்று பேரூர் ஆதீனம் தரப்பில் நம்மிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்து விரோத சக்திகளுக்கு வாக்களிக்க வேண்டாம் என்று 2019ம் ஆண்டு அவர்கள் கூட்டாக பேட்டி அளித்ததைத் தவறாக பகிர்ந்துள்ளனர்.

இதன் அடிப்படையில் பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகளுக்கு வாக்களிக்க வேண்டாம் என்று 11 மடாதிபதிகள் கூட்டறிக்கை வெளியிட்டதாக பகிரப்படும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

இந்து விரோத பா.ஜ.க மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக் வாக்களிக்க வேண்டாம் என்று மடாதிபதிகள் கூட்டறிக்கை வெளியிட்டதாக பகிரப்படும் பதிவு தவறானது என்பதை ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:பா.ஜ.க-வுக்கு வாக்களிக்க வேண்டாம் என்று 11 மடாதிபதிகள் கூட்டறிக்கை வெளியிட்டனரா?

Fact Check By: Chendur Pandian

Result: False