அமெரிக்காவில் ரம்ஜான் தொழுகையைத் தடுத்து நிறுத்திய இந்து பெண் என்று பரவும் தகவல் உண்மையா?

உலகச் செய்திகள் | World News சமூக ஊடகம் | Social

அமெரிக்காவில் மசூதி ஒன்றில் ரம்ஜான் தொழுகை நடந்தபோது அதை இந்தியாவைச் சேர்ந்த இந்து பெண் ஒருவர் தடுத்து நிறுத்தினார் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது உண்மையா என்று ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

மசூதியில் பெண் ஒருவர் காவலர்களுடன் தகராறு செய்யும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. கடைசியில் அவரை காவலர்கள் தரதரவென இழுத்துச் செல்கின்றனர். நிலைத் தகவலில், “அமெரிக்கா வர்ஜீனியாவில் ஆதிக்க வெறி கொண்ட சங்கி பெண் ஈத் தொழுகை நடந்த பள்ளிவாசலுக்குள் நுழைந்து..

பயான் மேடையில் ஏறி இஸ்லாமியர்கள் மீதான வெறுப்பு வார்த்தைகளை பேசினார்.. மக்கள் காவல்துறையிடம் புகார் அளிக்க அவர் கைது செய்யப்பட்டார்… அவரை கைது செய்த போது…!!” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. 

இந்த வீடியோவை அன்பே மனிதம் என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் 2023 ஏப்ரல் 22ம் தேதி பதிவிட்டுள்ளார். இவரைப் போல பலரும் இந்த வீடியோவை பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

அமெரிக்காவில் ரம்ஜான் தொழுகையை இந்து பெண் தடுத்து நிறுத்தினார் என்று குறிப்பிட்டு பலரும் இந்த வீடியோவை பகிர்ந்து வருகின்றனர். சேலை அணிந்திருக்கிறார். ஆனால் இஸ்லாமியப் பெண்கள் போல அவர் தலையைத் துப்பட்டாவால் மறைத்திருப்பது போலவும் உள்ளது. எனவே, இந்த வீடியோ சந்தேகத்தை ஏற்படுத்தவே இது பற்றி ஆய்வு செய்தோம்.

இந்த வீடியோ காட்சியை புகைப்படங்களாக மாற்றி கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, பல ஃபேஸ்புக் ஐடி-க்களில் இந்த வீடியோ பதிவிடப்பட்டிருப்பதைக் காண முடிந்தது. அதில் Mohamed Bin Latheef  என்ற ஐடி கொண்டவர் வெளியிட்டிருந்த பதிவு நமக்கு கிடைத்தது. அதில், “அமேரிக்காவில் அமைந்துள்ள பள்ளிவாசல் ஒன்றில் நடைபெற்ற பெருநாள் தொழுகையை நிறுத்த இந்து பெண் ஒருவர் முயற்சி செய்தார் என வீடியோ ஒன்று பகிரப்பட்டு வருகின்றது… ஆனால் அந்த பெண் பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்த மனநலம் குன்றிய முஸ்லிம் பெண் என்பதை அந்த பள்ளிவாசல் நிர்வாகம் உறுதிப்படுத்தியுள்ளது.  உறுதிப்படுத்தி வெளியிட்டுள்ள அறிக்கையை இதே வீடியோவில் எடிட் செய்து இணைத்துள்ளேன். 

உண்மை தன்மை தெரியாது Hindu lady trying to stop Eid prayer in USA என பகிரப்பட்டு வரும் வீடியோவினை பகிர்ந்து கொள்ள வேண்டாம்” என்று ஆங்கிலத்தில் வெளியான பத்திரிகை செய்தியையும் அளித்திருந்தார்.

உண்மைப் பதிவைக் காண: Facebook 

அந்த பத்திரிகை செய்தியின் ஒரு வரியை மட்டும் காப்பி செய்து, ஃபேஸ்புக் தேடலில் பதிவிட்டு தேடினோம். அப்போது All Dulles Area Muslim Society (ADAMS) என்ற ஃபேஸ்புக் பக்கம் 2023 ஏப்ரல் 22ம் வெளியிட்டிருந்த பத்திரிகை செய்தி நமக்க கிடைத்தது. அதில், 21ம் தேதி ஈத் தொழுகையின் போது இடையூறு ஏற்படத்திய பெண் இஸ்லாம் சமூகத்தைச் சார்ந்தவர் என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறோம். அந்த பெண்மணியின் குடும்பத்தினருடன் தொடர்பில் உள்ளோம். மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் நம்மிடம் மன்னிப்பு கேட்டுள்ளனர். இது தொடர்பாக சமூக ஊடகங்களில் பரவும் வீடியோக்களை அகற்றும்படி அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். இந்த வீடியோ தங்கள் குடும்பத்தின் தனிநபர் சுதந்திரத்தை பாதிக்கிறது என்றும் இதன் காரணமாகக் கூடுதல் மன அழுத்தம் ஏற்படுகிறது என்றும் தெரிவித்துள்ளனர்” என குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த பதிவுக்கு கீழ் ஒருவர் நிச்சயம் இந்த பெண் இஸ்லாமியர் கிடையாது, இவர் இந்துதான் என்று பதிவிட்டிருந்தார். அதற்கு அந்த அமைப்பு சார்பில், “உங்கள் கருத்துக்கு நன்றி. இவர் மனநல பாதிப்பு பிரச்னையுடன் போராடும் எமது முஸ்லிம் சமூகத்தின் உறுப்பினர் என்பதைத் தெளிவுபடுத்த விரும்புகிறோம். அந்த குடும்பத்துக்குத் தேவையான ஆதரவை வழங்குவதற்காக அந்த குடும்பத்துடன் இணைந்து செயல்பட்டு வருகிறோம்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இதன் மூலம் அந்த பெண் இந்து இல்லை, இஸ்லாமியர் என்பதும் சற்று மன நல பாதிப்புடையவர் என்பதும் தெளிவாகிறது. இதன் அடிப்படையில் அமெரிக்காவில் தொழுகையைத் தடுத்து நிறுத்திய இந்து சங்கி பெண்ணை போலீசார் இழுத்துச் சென்றனர் என்று பரவும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

அமெரிக்காவில் மனநலம் பாதிக்கப்பட்ட இஸ்லாமிய பெண் ஒருவர் ரம்ஜான் தொழுகையை தடுத்து நிறுத்திய வீடியோவை தவறாக இந்து பெண் என்று குறிப்பிட்டு சமூக ஊடகங்களில் பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:அமெரிக்காவில் ரம்ஜான் தொழுகையைத் தடுத்து நிறுத்திய இந்து பெண் என்று பரவும் தகவல் உண்மையா?

Fact Check By: Chendur Pandian 

Result: False