நான் மலையாளி என்று சீமான் கூறினாரா?

அரசியல் சமூக ஊடகம் தமிழ்நாடு

மேடையில் பேசும்போது தான் மலையாளி என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியது போன்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Archive

சீமான் நிருபர்களுக்குப் பேட்டி அளித்த காட்சி மற்றும் மேடையில் நான் மலையாளி என்று கூறுவது போன்ற காட்சியை இணைத்து வீடியோ பதிவு உருவாக்கப்பட்டுள்ளது. 

பேட்டியில், “நீ ஏன் இனம் மாறுற… அதுலயே நீ ஏமாத்துற இல்ல… தமிழன்னு சொல்ல வேண்டிய தேவை ஏன் வருது” என்று கூறுகிறார். மேடையில் பேசும் போது, “என்னைக் கேள் நான் திராவிடனா மலையாளியா என்றால், நான் மளையாளி என்றுதான் சொல்லுவேன்” என்கிறார். இந்த வீடியோவை தென்குமரி தென்றல் என்ற ட்விட்டர் பக்கம் 2023 ஏப்ரல் 23ம் தேதி வெளியிட்டுள்ளது. 

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

ஃபேஸ்புக்கில் இந்த வீடியோவை யாராவது பகிர்ந்துள்ளார்களா என்று தேடிப் பார்த்தோம். அப்போது, Urimai Kalam TV என்ற ஃபேஸ்புக் பக்கம் இந்த வீடியோவை 2023 ஏப்ரல் 25ம் தேதி பதிவிட்டுள்ளது. வீடியோவில் “நான் ஒரு மலையாளி சீமானின் பிராடுத்தன பேச்சுக்கள் இணையத்தில் வைரல் ஆகின்றது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

உண்மை அறிவோம்:

சீமான் தான் ஒரு மலையாளி என்று கூறியது போன்று வீடியோவை பலரும் பகிர்ந்து வருகின்றனர். ஆனால், வீடியோ முழுமையானதாக இல்லை. மேலும், நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட ட்வீட் பதிவின் கமெண்ட் பகுதியில் பலரும் சீமானின் முழுமையான பேச்சு என்று குறிப்பிட்டு வீடியோவை பகிர்ந்திருந்தனர். அதில் கேரளாவின் முன்னாள் முதலமைச்சர் உம்மன்சாண்டி கூறியதாக சீமான் பேசியது தெரிந்தது. எனவே, உண்மையான வீடியோவை தேடினோம்.

உம்மன்சாண்டி முதல்வர் என்று சீமான் குறிப்பிட்டுள்ளார். அப்படி என்றால் 2011 – 16 காலத்தில் இந்த வீடியோ எடுக்கப்பட்டதாக இருக்க வேண்டும். எனவே, சற்று பழைய வீடியோக்களை தேடினோம். யூடியூபில் சில கீ வார்த்தைகளைப் பயன்படுத்தித் தேடினோம். அப்போது மதுரையில் 2016ம் ஆண்டு ஏப்ரல் 3ம் தேதி நடந்த பொதுக் கூட்டத்தின் வீடியோ நமக்குக் கிடைத்தது. அந்த வீடியோ காட்சியும், நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோ காட்சியும் ஒன்றாக இருந்தது. எனவே, அந்த வீடியோவை பார்த்தோம்.

வீடியோவின் 19.55வது நிமிடத்தில் நாம் மலையாளி என்று கூறும் பகுதி வந்தது. எனவே, இந்த வீடியோவைதான் எடிட் செய்து வேண்டிய பகுதியை மட்டும் எடுத்து பகிர்ந்திருப்பது புரிந்தது.

சீமான் உண்மையில் என்ன சொல்கிறார் என்று சற்று முன்பு இருந்து பார்த்தோம். இந்த பகுதி 19.25 நிமிடத்தில் தொடங்குகிறது. சீமான் பேசும் போது, “கேரளாவில் ஆண்டுகொண்டிருக்கும் ஐயா உம்மன்சாண்டியிடம் போய் கேள். அவர் சொல்றார்ல… வெறிகொண்ட இந்த நாட்டு இளைஞர்கள் அதிகாரத்தைக் கேட்டு வருகிறார்கள். இதை நான் சொல்லவில்லை அவர் சொல்கிறார். அவர்கள் அதிகாரத்தைக் கேட்பது சரிதான். அவர் நிலத்தை அவர்தான் ஆள வேண்டும் என்று அவர் சொல்றார். என்னையக் கேள் நான் திராவிடனா மலையாளியா என்றால், நான் மலையாளி என்றுதான் சொல்லுவேன்” என்று உம்மன்சாண்டி கூறியதாக குறிப்பிட்டார்.

உம்மன்சாண்டி தான் மலையாளி என்று கூறுவேன் என்று சொன்னதாகச் சீமான் பேசிய பகுதியை எடுத்து, சீமான் தன்னை மலையாளி என்று கூறியதாக தவறான புரிதல் ஏற்படும் வகையில் எடிட் செய்து வீடியோவை வெளியிட்டிருப்பது இதன் மூலம் உறுதியாகிறது. இதன் அடிப்படையில் சீமான் தன்னை மலையாளி என்று கூறிக்கொண்டார் என்று பரவும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

கேரள முன்னாள் முதல்வர் தன்னை மலையாளி என்றே கூறிக்கொள்வேன் என்று கூறியதாக சீமான் கூறியதை எடிட் செய்து, சீமான் தான் மலையாளி என்று கூறிக்கொண்டார் என்று தவறாக புரிதல் ஏற்படும் வகையில் வீடியோ பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:நான் மலையாளி என்று சீமான் கூறினாரா?

Fact Check By: Chendur Pandian 

Result: False