
வேகமாக வளரும் நாடுகள் பட்டியலில் 3வது இடத்திலிருந்த இந்தியா, தற்போது 164வது இடத்துக்குத் தள்ளப்பட்டுவிட்டது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
சுப்பிரமணியன் சுவாமி வெளியிட்டது போன்ற ட்வீட் ஸ்கிரீன்ஷாட் பகிரப்பட்டுள்ளது. அதில் ஆங்கிலத்தில், “இந்தியா தற்போது 193 நாடுகள் அடங்கிய உலகின் வேகமாக வளரும் நாடுகள் பட்டியலில் 164வது இடத்தில் உள்ளது. 2011ல் மிகப்பெரிய பொருளாதாரமாக 3வது இடத்தில் இருந்தது தற்போது 2021ல் 164வது இடத்தில் உள்ளது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
நிலைத் தகவலில், “நாட்டை அழிக்கும் பார்ப்பனிய ஆர்எஸ்எஸ் பாஜக கும்பல்: வேகமாக வளரும் நாடுகளின் பட்டியலில் 3 ஆவது இடத்திலிருந்து 164 ஆவது இடத்திற்கு சரிந்திருக்கிறது இந்தியா? இந்து – முஸ்லீம் கோயில்- மசூதி பசு- பன்றி சிவபெருமான்- நபிகள் நாயகம் காவித்துண்டு- ஹிஜாப் இப்படியே பேசி இந்தியர்களைக் கற்காலத்திற்கு அழைத்துச் செல்லும் ‘விஸ்வகுரு’. Kanagaraj CPM” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை Kamaru Deen என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்ட நபர் 2022 ஜூலை 11ம் தேதி பதிவிட்டிருந்தார்.

உண்மைப் பதிவைக் காண: Facebook
இதே போன்று சுப்பிரமணியன் சுவாமி, மோடி படத்துடன் கூடிய புகைப்பட பதிவு ஒன்று பகிரப்பட்டு வருகிறது. அதில், “நரேந்திர மோடியின் ஆட்சிக்கு முன் (2011) உலகின் 3வது மிகப்பெரிய பொருளாதார வளர்ச்சியடைந்த நாடாக இருந்த இந்தியா! நரேந்திர மோடியின் ஆட்சியில் 193 வளர்ந்துவரும் நாடுகளின் பட்டியல்களில் இந்தியா 3வது இடத்திலிருந்து 164வது இடத்திற்கு பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த பதிவை A Sadhakathulla என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்ட நபர் 2022 ஜூலை 12ம் தேதி பதிவிட்டுள்ளார். இவற்றை பலரும் தங்கள் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
உலகின் வேகமாக வளரும் நாடுகள் பட்டியலில் இந்தியா 164வது இடத்துக்கு தள்ளப்பட்டது என்று சுப்பிரமணியன் சுவாமி ட்வீட் வெளியிட்டதாகப் பலரும் பகிர்ந்து வருகின்றனர். இது உண்மையா என்று ஆய்வு செய்தோம். அவருடைய ட்விட்டர் பக்கத்தைப் பார்வையிட்டோம். அப்போது, அந்த பதிவை அவர் வெளியிட்டிருப்பது தெரிந்தது. ஆனால், எந்த அமைப்பு இந்த புள்ளிவிவரத்தை, பட்டியலை வெளியிட்டது என்று கூறவில்லை.
உண்மையில் இந்தியா வேகமாக வளரும் நாடுகள் பட்டியலில் 164வது இடத்துக்கு தள்ளப்பட்டதா என்று பார்த்தோம். அப்படி நமக்கு எந்த ஒரு செய்தியும் கிடைக்கவில்லை. எந்த அமைப்பு இந்த தகவலை வெளியிட்டது என்று நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவுகளில் தெளிவாகக் குறிப்பிடாத சூழலில், உலக வங்கி உள்ளிட்ட முன்னணி, நம்பத்தகுந்த நிறுவனங்களின் தர வரிசைப் பட்டியலைப் பார்வையிட்டோம். பொருட்கள் வாங்கு திறன் சமநிலை (purchasing power parity (PPP)) அடிப்படையில் இந்தியா 3வது இடத்தில் இருக்கிறது என்று குறிப்பிட்டிருந்தனர்.

உலகின் ஜிடிபி அடிப்படையில் statisticstimes.com பட்டியல் வெளியிட்டிருந்தது. அதில் ஜிடிபி வளர்ச்சி அடிப்படையில் 2020ம் ஆண்டு இந்தியா 143வது இடத்திலிருந்தது என்றும், 2021ம் ஆண்டு அது 11வது இடத்துக்கு முன்னேறியது என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. statista.com என்ற இணையதளம் 2022 ஏப்ரல் வரையிலான காலகட்டத்தில் இந்தியா 4வது இடத்தில் உள்ளது என்று குறிப்பிட்டிருந்தது. தனிநபர் வருமானம் ஜிடிபி அடிப்படையில் 150வது இடத்தில் இருப்பதாக statisticstimes.com தளம் குறிப்பிட்டிருந்தது. மற்றபடி எந்த ஒரு தகவலும் நமக்கு கிடைக்கவில்லை.
தொடர்ந்து தேடிய போது எக்கனாமிக்ஸ் டைம்ஸ் இதழ் வெளியிட்டிருந்த கட்டுரை ஒன்று கிடைத்தது. அதில் இந்தியவின் பொருளாதாரம் 164வது இடத்திற்குச் சரிந்ததா, உலக வங்கியின் தரவு என்ன என்று குறிப்பிட்டு வெளியிட்டிருந்தனர். அதைப் பார்த்தோம். பிஐபி எனப்படும் இந்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்ட ட்வீட் அடிப்படையில் கட்டுரையை எழுதியிருந்தனர்.
Archive I timesnownews.com I Archive
அந்த பிஐபி ட்வீட்டில் இந்தியா 164வது இடத்திற்கு தள்ளப்பட்டது என்ற தகவல் தவறானது என்று குறிப்பிட்டிருந்தனர். மேலும், பிபிபி அடிப்படையில் இந்தியா 3வது பெரிய பொருளாதாரமாக இருக்கிறது என்று குறிப்பிட்டிருந்தது. அதைத் தொடர்ந்து, எக்னாமிக்ஸ் டைம்ஸ் இதழ் கட்டுரையில், 2021ம் ஆண்டு உலக வங்கி தரவுகள் அடிப்படையில் 27.31 டிரில்லியன் டாலர்களுடன் மிகப்பெரிய பொருளாதாரத்தை சீனா கொண்டுள்ளது. அதைத் தொடர்ந்து அமெரிக்கா உள்ளது. 10.21 டிரில்லியன் டாலர் உடன் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது.
ஒவ்வொரு நாட்டுக்கும் அதன் சொந்த நாணயம் உள்ளது. அதன் அடிப்படையில்தான் புள்ளிவிவரங்கள் வெளியிடப்படுகின்றன. இதை மற்றொரு நாட்டின் பண மதிப்புடன் ஒப்பிடும் போது விகிதங்கள் மாறும். அதனால் ஒரு நாட்டின் பொருளாதாரத்தை மதிப்பிடுவது கடினமாக மாறிவிடும். இதை சரியான முறையில் கணக்கிட பிபிபி எனப்படும் முறையை சர்வதேச நாணய நிதியம் (ஐஎம்எஃப்) பின்பற்றுகிறது. பிபிபி அளவுகோலின்படி இந்தியா 2011ம் ஆண்டிலிருந்து மூன்றாவது பெரிய பொருளாதாரத்தைக் கொண்டுள்ளது என்று குறிப்பிட்டிருந்தனர்.
நம்முடைய ஆய்வில் இந்தியா 3வது இடத்தில் இருந்து 164வது இடத்துக்கு தள்ளப்பட்டது என்று எந்த ஒரு செய்தியும் கிடைக்கவில்லை. 2011ம் ஆண்டில் இருந்து பொருட்கள் வாங்கும் திறன் சமநிலை அடிப்படையில் இந்தியா மூன்றாவது பெரிய பொருளாதாரமாக இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த ஆதாரங்கள் அடிப்படையில் உலகின் மிக வேகமாக வளரும் நாடுகள் பட்டியலில் இந்தியா 164வது இடத்துக்கு தள்ளப்பட்டது என்று பகிரப்படும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உலகின் வேகமாக வளரும் நாடுகள் பட்டியலில் இந்தியா பின்னடைவை சந்தித்ததாக எந்த செய்தியும் கிடைக்கவில்லை. இந்த தகவல் தவறானது என்று இந்திய அரசு உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel

Title:வேகமாக வளரும் நாடுகள் பட்டியலில் 3-ல் இருந்து 164வது இடத்திற்கு இந்தியா தள்ளப்பட்டதா?
Fact Check By: Chendur PandianResult: False
