
கராச்சி துறைமுகத்தின் மீது இந்தியா நடத்திய தாக்குதலில் அந்த துறைமுகத்தில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டது என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
வெடிகுண்டு தாக்குதலில் கண்டெய்னர்கள் பற்றி எரிந்த நிலையில், சிதறிக் கிடக்கும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “பாகிஸ்தானின் கராச்சி துறைமுகத்தில் நேற்று இரவு இந்திய படைகள் ருத்ர தாண்டவம் ஆடிய காட்சி ..🔥🔥
பார்க்கவே கண்கொள்ளா காட்சியாக இருக்கிறது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டும், பகிர்ந்தும் வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
இந்தியாவுக்குள் நுழைந்து அத்துமீறிய பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு மிகக் கடுமையான முறையில் இந்தியா பதில் அளித்து வருகிறது. இந்த தாக்குதலில் இந்தியாவுக்கு பாதிப்பு என்று பாகிஸ்தான் நெட்டிசன்கள் வதந்தி பரப்பி வருகின்றனர். அதே போல பாகிஸ்தானில் ஏற்பட்ட பாதிப்பு என்று இங்குள்ள சிலரும் தவறான வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். இதனால், இந்தியா நடத்திய தாக்குதல் மீது இவர்களே வீண் சந்தேகத்தை ஏற்படுத்தி வருகின்றனர்.
இந்தியா கராச்சி துறைமுகத்தின் மீது நடத்திய தாக்குதலில் மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று ஒரு வீடியோவை சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். இந்திய ராணுவம் கராச்சி தாக்குதல் காட்சி என்று எந்த வீடியோவையும் வெளியிடவில்லை. அப்படி இருக்கும் போது இவர்களுக்கு மட்டும் எப்படி எக்ஸ்க்ளூசிவாக இந்த வீடியோ கிடைத்திருக்கும் என்ற கேள்வி எழுகிறது.
உண்மைப் பதிவைக் காண: abualiexpress.com I Archive
இந்த வீடியோ காட்சிகளை புகைப்படங்களாக மாற்றி கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றித் தேடினோம். அப்போது கடந்த ஏப்ரல் (2025) மாத இறுதியில் ஈரானின் துறைமுகத்தில் ஏற்பட்ட விபத்தின் காட்சி என்று இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்திருந்ததைக் கண்டுபிடித்தோம். அந்த பதிவுகளில் ஈரானின் பந்தர் அப்பாஸ் துறைமுகத்தில் ஏற்பட்ட வெடிவிபத்துக்குப் பிறகு ட்ரோன் மூலம் எடுக்கப்பட்ட வீடியோ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
2025 ஏப்ரல் 27 அன்று பிபிசி வெளியிட்டிருந்த செய்தியில், “பாதுகாப்பு குறைபாடு காரணமாக ஈரானின் துறைமுகத்தில் மிகப்பெரிய விபத்து ஏற்பட்டது. இதில் 28 பேர் உயிரிழந்தனர், 800க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
பாகிஸ்தானின் மீது இந்தியாவின் ராணுவ தாக்குதல் மே மாதம் 7ம் தேதி தொடங்கியது. ஆனால், நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவோ ஏப்ரல் மாதம் 28ம் தேதி சமூக ஊடகங்களில் பதிவிடப்பட்டுள்ளது. அதாவது பாகிஸ்தான் மீதான தாக்குதல் தொடங்குவதற்கு கிட்டத்தட்ட 10 நாட்களுக்கு முன்பு இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி உள்ளது. இவை எல்லாம் பாகிஸ்தானின் கராச்சி துறைமுகம் மீது இந்தியா நடத்திய தாக்குதலில் ஏற்பட்ட பாதிப்பின் காட்சி என்று பரவும் வீடியோ தவறானது என்பதை உறுதி செய்கின்றன.
முடிவு:
இந்தியா நடத்திய தாக்குதலில் உருக்குலைந்து கிடக்கும் பாகிஸ்தானின் கராச்சி துறைமுகம் என்று பரவும் ஈரானைச் சார்ந்தது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I X Post I Google News Channel I Instagram

Title:இந்தியா தாக்கிய பிறகு கராச்சி துறைமுகத்தின் நிலை என்று பரவும் வீடியோ உண்மையா?
Fact Check By: Chendur PandianResult: False
