இஸ்ரேலுடனான தூதரக உறவை ஸ்பெயின் துண்டித்ததை கொண்டாடிய ஸ்பெயின் மக்கள் என்று பரவும் வீடியோ உண்மையா?

Communal False சர்வதேசம் | International

இஸ்ரேலுக்கான ஸ்பெயின் தூதரை ஸ்பெயின் அரசு நிரந்தரமாக திரும்ப பெற்றதை ஸ்பெயின் மக்கள் கொண்டாடினர் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

சாலையில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்ட வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. வீடியோவின் மீது தமிழில், “ஸ்பெயின் நாட்டில் பாலஸ்தீன தூதரகத்தை அமைத்ததற்கும், இஸ்ரேல் தூதரகத்தை மூடியதற்கும் ஸ்பெயின் மக்கள் கொண்டாடி மகிழ்ச்சியடைகிறார்கள்” என்று எழுதப்பட்டிருந்தது. 

நிலைத் தகவலில், “ஸ்பெயின் உள்ள இஸ்ரேல் தூதரகம்  மூடப்பட்டமையினால் அந்நாட்டு மக்கள் அதனை சந்தோஷத்தில் கொண்டாடினர்..” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டும், பகிர்ந்தும் வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

காசா மீதான தாக்குதலைக் கண்டித்து ஸ்பெயின் நாடு கடந்த 2025ம் ஆண்டு தனது இஸ்ரேல் நாட்டுக்கான தூதுவரைத் திரும்பப் பெற்றது. இந்த நிலையில் 2026 மார்ச் 11ம் தேதி இஸ்ரேல் நாட்டுக்கான ஸ்பெயின் தூதரக பதவி முடிவுக்கு வருவதாக தனது அதிகாரப்பூர்வ அரசிதழில் ஸ்பெயின் அரசு அறிவித்தது. இந்த அறிவிப்பை ஸ்பெயின் மக்கள் கொண்டாடியதாக வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது.

நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவில் பாலஸ்தீனத்துடனான தூதரக உறவை தொடங்கியதற்காகவும், இஸ்ரேலுடனான தூதரக உறவை துண்டித்ததற்காகவும் ஸ்பெயின் மக்கள் கொண்டாடினார்கள் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. பாலஸ்தீனத்துடனான தூதரக உறவை ஸ்பெயின் எப்போது தொடங்கியது என்று தேடிய போது, 2024ம் ஆண்டு தொடங்கியிருப்பது தெரிந்தது. 

இந்த வீடியோ உண்மையா என்று அறிய வீடியோ காட்சிகளைப் புகைப்படங்களாக மாற்றி கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, இந்த வீடியோ 2025 ஜூலை மாதத்திலிருந்து சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வந்திருப்பதை காண முடிந்தது. அல் ஜசீர என்ற சர்வதேச ஊடகம் இந்த வீடியோவை 2025 ஜூலை மாதம் வெளியிட்டிருந்தது. அதில், “ஸ்பெயினின் பம்ப்ளோனா நகரில் நடைபெற்ற சான் ஃபெர்மின் (San Fermin festival) திருவிழாவில் பங்கேற்ற ஆயிரக் கணக்கானோர் சுதந்திர பாலஸ்தீனம் கோரி முழக்கமிட்டனர்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

உண்மைப் பதிவைக் காண: Facebook 

இந்த தகவல் அடிப்படையில் தொடர்ந்து தேடினோம். அப்போது, 2025 ஜூலை 6ம் தேதி வெளியான பல செய்திகள் நமக்குக் கிடைத்தன. அதில், ஒவ்வொரு ஆண்டும் ஸ்பெயின் பம்ப்ளோனா என்ற நகரில் ஜூலை மாதம் 6ம் தேதி சான் ஃபெர்மின் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு திருவிழாவானது சுதந்திர பாலஸ்தீனத்திற்கு ஆதரவு, பாலஸ்தீனத்தில் நடந்து வரும் இன அழிப்புக்கு எதிர்ப்பு தெரிவிப்பது என்ற மையக்கருத்தின் அடிப்படையில் நடந்தது. திருவிழாவில் கலந்துகொண்டவர்கள் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக கோஷங்களை எழுப்பினர்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

உண்மைப் பதிவைக் காண: efe.com I Archive

இதன் மூலம் இஸ்ரேலுடனான தூதரக உறவை ஸ்பெயின் துண்டித்ததற்கு ஆதரவாக ஸ்பெயின் மக்கள் சாலையில் இறங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர் என்று பரவும் தகவல் தவறானது என்பது உறுதியானது. இந்த ஆதாரங்கள் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

இஸ்ரேலுக்கான ஸ்பெயின் தூதரை ஸ்பெயின் நிரந்திரமாக திரும்பப் பெற்றதை கொண்டாடிய ஸ்பெயின் மக்கள் என்று பரவும் வீடியோ 2025ம் ஆண்டு ஸ்பெயில் நடந்த பாரம்பரியமாக ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும் சான் ஃபெர்மினா என்ற திருவிழாவின் போது எடுக்கப்பட்டது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I X Post I Google News Channel I Instagram

Result Stamp

Title: இஸ்ரேலுடனான தூதரக உறவை ஸ்பெயின் துண்டித்ததை கொண்டாடிய ஸ்பெயின் மக்கள் என்று பரவும் வீடியோ உண்மையா?

Fact Check By: Chendur Pandian

Result: False

Leave a Reply