
பஞ்சாபில் வேளாண் மசோதாவுக்கு எதிராக போராடிய விவசாயிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
போராட்டக்காரர்கள் மீது தண்ணீர் பீய்ச்சி அடித்து விரட்டும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத்தகவலில், “பஞ்சாப்பில் வேளாண் மசோதாக்கு எதிராக நடக்கும் போராட்டத்தில் தாக்கப்படும் விவசாயிகள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த படத்தை JALLIKATTU-Veeravilaiyattu என்ற ஃபேஸ்புக் பக்கம் 2020 செப்டம்பர் 25ம் தேதி பகிர்ந்துள்ளது. பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
சமீபத்தில் மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டத்தை எதிர்த்து பஞ்சாப், ஹரியானாவில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதை வைத்து பல உண்மையான தகவலுடன் சில தவறான படங்கள், வீடியோக்களும் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன. ஹரியானா பா.ஜ.க எம்.எல்.ஏ முகத்தில் சாணி பூசிய விவசாயிகள் என்று வீடியோ வைரல் ஆகியது. அது பழைய வீடியோ என்று செய்தி வெளியிட்டிருந்தோம்.
இந்த நிலையில் பஞ்சாபில், மத்திய அரசின் சட்டத்தை எதிர்த்துப் போராடிய விவசாயிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது என்று படம் ஒன்று வைரல் ஆகி வருகிறது. இது உண்மையா என்று ஆய்வு செய்தோம்.
படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றி தேடினோம். அப்போது இந்த படம் 2018ம் ஆண்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வந்திருப்பதை காண முடிந்தது. இந்த படத்தை டெல்லி ஆம் ஆத்மி எம்.எல்.ஏ ராகவ் சந்தா அக்டோபர் 2, 2018 அன்று ட்விட்டரில் வெளியிட்டிருந்தார்.
அதில் “ஜெய் ஜவான், ஜெய் கிசான் என்ற லால் பகதூர் சாஸ்திரியின் பிறந்த தினத்தன்று மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசு விவசாயிகள் மீது தாக்குதல் நடத்தியது” என்று குறிப்பிட்டிருந்தார்.
தொடர்ந்து தேடிய போது இந்தி ஒன் இந்தியா வெளியிட்ட செய்தி மற்றும் வீடியோக்கள் நமக்கு கிடைத்தன. அதை மொழிமாற்றம் செய்து படித்தபோது டெல்லிக்குள் நுழைய முயன்ற விவசாயிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டு இருந்தது.
இதன் அடிப்படையில் தமிழில் தேடிய போது, 2018 அக்டோபர் 2ம் தேதி வெளியான மாலைமலர் செய்தி ஒன்று கிடைத்தது. அதில், 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் நடை பயண போராட்டம் மேற்கொண்டதாகவும் உத்தரப்பிரதேசத்தில் இருந்து டெல்லிக்குள் நுழைய முயன்ற விவசாயிகளை அதிரடிப்படை போலீசார் தடுத்து நிறுத்தி அவர்கள் மீது தண்ணீர் பீய்ச்சி அடித்தும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் கலைந்து போக செய்தனர் என குறிப்பிடப்பட்டு இருந்தது.
இந்த படத்தில் இருப்பவர்கள் விவசாயிகள்தான். ஆனால், இந்த புகைப்படம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அதாவது 2018ம் ஆண்டு எடுக்கப்பட்டது என்பது உறுதியாகிறது. இவர்கள் உத்தரப்பிரதேசம் – டெல்லி எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டபோது இந்த படம் எடுக்கப்பட்டது. இதன் மூலம் பஞ்சாபில் விவசாயிகள் தாக்கப்பட்டது தவறானது என்பது உறுதியாகிறது.
விவசாயிகள் மசோதா என்பது 2020 செப்டம்பரில் நடந்த நாடாளுமன்ற கூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம் இவர்கள் விவசாயிகள் சட்டத்தை எதிர்த்து போராடினார்கள் என்பது தவறான தகவல்.
இதன் மூலம் 2018ம் ஆண்டு நடந்த விவசாயிகள் போராட்டம் புகைப்படத்தை எடுத்து தற்போது நடந்தது போல தவறான தகவல் சேர்த்துப் பகிர்ந்திருப்பது உறுதியாகிறது. இதன் அடிப்படையில் இந்த பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட ஃபேஸ்புக் பதிவில் இடம் பெற்ற தகவல் தவறானது என்றும் நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title:பஞ்சாபில் வேளாண் மசோதாவுக்கு எதிராக போராடிய விவசாயிகள் தாக்குதலா?
Fact Check By: Chendur PandianResult: False
