
இஸ்லாத்தை தங்கள் நாட்டிலிருந்து முற்றிலுமாக ஒழிக்க ஜப்பான் புதிய சட்டங்களை இயற்றியது என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
ஜப்பான் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உற்சாக குரல் எழுப்பி தீர்மானம் நிறைவேற்றுவது போன்று வீடியோ ஒன்று ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இஸ்லாத்தை தங்கள் நாட்டிலிருந்து முற்றிலுமாக ஒழிக்க ஜப்பான் புதிய சட்டங்களை இயற்றியுள்ளது 🇯🇵 ஹலால் படுகொலை, தொழுகைக்கான அழைப்புகள், பொது பிரார்த்தனை மற்றும் பெரிய மசூதிகள் அனைத்தும் தடை செய்யப்பட்டுள்ளன 🚫 இஸ்லாம் மேற்கத்திய நாடுகளுக்குச் செய்ததை ஜப்பான் பார்த்திருக்கிறது, தாமதமாகிவிடும் முன்பே வேண்டாம் என்று விழித்துக்கொண்ட ஜப்பான் ” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
இஸ்லாம் மதத்தை முற்றிலுமாக தடை செய்வது போன்று ஜப்பான் நாடாளுமன்றத்தில் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டதாக வீடியோவை பலரும் பதிவிட்டு வருகின்றனர். ஆனால், வீடியோவை பார்க்கும் போது சட்டம் இயற்றப்பட்ட போது எடுக்கப்பட்டது போல இல்லை. வீடியோவில் இடம் பெற்ற பெண் உறுப்பினரைப் பார்க்க ஜப்பான் பிரதமர் சனே தக்கைச்சி (Sanae Takaichi) போல இருந்தது. எனவே, இந்த வீடியோ தொடர்பாக ஆய்வு செய்தோம்.
வீடியோ காட்சிகளை புகைப்படங்களாக மாற்றி கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, அது ஜப்பான் நாடாளுமன்றத்தைக் கலைப்பது தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்ட வீடியோ என்று தெரிந்தது. ஜனவரி 23ம் தேதி இந்த வீடியோவை ஊடகங்கள் வெளியிட்டிருந்தன. ஜப்பான் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து அங்கு தேர்தல் நடத்தப்பட்டு, மீண்டும் சனே தக்கைச்சி பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைத் தக்க வைத்துக்கொண்டதாகச் செய்திகள் நமக்குக் கிடைத்தன.
சரி, இதற்கு முன்பு இஸ்லாம் மதத்திற்கு எதிரான சட்டம் ஜப்பான் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதா என்று அறிய கூகுளில் சில அடிப்படை வார்த்தைகளைப் பயன்படுத்தித் தேடினோம். ஆனால், அப்படி எந்த ஒரு சட்டமும் நிறைவேற்றப்பட்டதாக செய்திகளில் குறிப்பிடப்படவில்லை. ஜப்பான் அரசியலமைப்பு சட்டத்தில் இஸ்லாம் மதத்தைத் தடை செய்துள்ளார்களா என்று அறிய அந்நாட்டு அரசியலமைப்பு சட்டத்தை பார்வையிட்டோம். ஆர்டிகிள் 20 மத சுதந்திரம் பற்றிக் குறிப்பிடுகிறது.

உண்மைப் பதிவைக் காண: japan.kantei.go.jp I Archive
அதில், மதச் சுதந்திரம் அனைவருக்கும் உறுதி செய்யப்படுகிறது. எந்த ஒரு மத அமைப்பும் அரசிடமிருந்து சிறப்பு உரிமைகளைப் பெறக் கூடாது. எந்த அரசியல் அதிகாரத்தையும் பயன்படுத்தக் கூடாது. யாரையும் எந்த ஒரு மத நிகழ்விலும் கட்டாயப்படுத்திப் பங்கேற்க வைக்கக் கூடாது. அரசும் அதன் அமைப்புகளும் மதக் கல்வி மற்றும் மத செயல்பாடுகளில் ஈடுபடாமல் விலகி இருக்க வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதன் மூலம் இஸ்லாம் மதத்திற்கு மட்டும் தடை, கட்டுப்பாடு விதிக்கப்பட்டது என்று கூறப்படும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
தொடர்ந்து தேடிய போது இஸ்லாம் மதத்திற்கு பல்வேறு கட்டுப்பாடு, தடை சட்டம் என்றெல்லாம் சமூக ஊடகங்களில் தொடர்ந்து பல ஆண்டுகளாகவே வதந்தி பரப்பப்பட்டு வந்திருப்பதைக் காண முடிந்தது. இந்த வதந்திகள் தொடர்பாக reuters.com ஃபேக்ட் செக் கட்டுரை வெளியிட்டிருப்பதையும் காண முடிந்தது. ஆனால் அது சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியான பதிவு. நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவோ 2026 ஜனவரி மாதம் ஜப்பான் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டபோது எடுக்கப்பட்டதாகும்.
இந்த ஆதாரங்கள் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
ஜப்பான் நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட நிகழ்வின் வீடியோவை தவறாக இஸ்லாம் மதத்தை தடை செய்த சட்டம் நிறைவேற்றிய ஜப்பான் நாடாளுமன்றம் என்று சமூக ஊடகங்களில் பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I X Post I Google News Channel I Instagram
Title:‘இஸ்லாமை ஒழிக்க புதிய சட்டங்களை இயற்றிய ஜப்பான்’ என்று பரவும் வீடியோ உண்மையா?
Fact Check By: Chendur PandianResult: False


