பிஎஃப்ஐ தடை காரணமாக இந்திய ரூபாய் மதிப்பு உயரும் என நட்டா கூறினாரா?

அரசியல் | Politics சமூக ஊடகம் | Social தமிழ்நாடு | Tamilnadu

பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா உள்ளிட்ட இயக்கங்கள் தடை செய்யப்பட்டுவிட்டதால் இந்திய ரூபாயின் மதிப்பு உயரும் என்று ஜே.பி.நட்டா கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

மாலை மலர் நாளிதழ் வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “இந்திய பொருளாதார வளர்ச்சிக்குத் தடையாக இருந்த PFI உள்ளிட்ட இயக்கங்கள் தடை செய்யப்பட்டுவிட்டதால் இனி வரும் மாதங்களில் இந்திய ரூபாயின் மதிப்பு அமேரிக்க டாலருக்கு நிகராக உயரும் – பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

நிலைத்தகவலில், “கட்சியின் அகில இந்திய தலைவனே அடி முட்டாளாக இருக்கிறானே ?” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை Chandran Veerasamy என்ற ஃபேஸ்புக் ஐடி-யைக் கொண்டவர் 2022 செப்டம்பர் 28ம் தேதி பதிவிட்டுள்ளார். இவரைப் போல பலரும் இந்த நியூஸ் கார்டை பகிர்ந்து வருகின்றனர்.

Archive

உண்மை அறிவோம்:

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் 95 சதவிகித பணிகள் முடிந்துவிட்டது என்று கூறி அதிர்ச்சியைக் கிளப்பியவர் பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா. அது பெரும் சர்ச்சை ஏற்படுக்திய நிலையில், ‘கட்டுமானப் பணிகள் முடிந்தது என்று கூறவில்லை; அடிப்படை பணிகள் முடிந்தது என்றுதான் கூறினார்,’’ என புது விளக்கம் அளித்து அதை பா.ஜ.க-வினர் சமாளித்தனர்.

தற்போது பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா உள்ளிட்ட அமைப்புகள் தடை செய்யப்பட்டதை வரவேற்கும் வகையில் இந்த நடவடிக்கை காரணமாக இந்திய ரூபாயின் மதிப்பு அதிகரிக்கும் என்று ஜே.பி.நட்டா கூறினார் என்று சிலர் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட மாலை மலர் நியூஸ் கார்டு உண்மையானது போல இல்லை. அதன் தமிழ் ஃபாண்ட், வடிவமைப்பு வித்தியாசமாக இருந்தது. மேலும், அமெரிக்கா என்று குறிப்பிடுவதற்குப் பதில் அமேரிக்கா என்று குறிப்பிட்டிருந்தனர். எனவே, இந்த நியூஸ் கார்டு பற்றி ஆய்வு செய்தோம்.

மாலை மலர் வெளியிட்ட நியூஸ் கார்டுகளை அதன் ஃபேஸ்புக் பக்கத்தில் பார்வையிட்டோம். அப்போது, நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டது போன்ற நியூஸ் கார்டை மாலை மலர் வெளியிட்டிருந்தது தெரிந்தது. ஆனால் அந்த நியூஸ் கார்டில், “மாநில சட்டசபை தேர்தல்களில் வெற்றி பெற பாரதிய ஜனதா புதிய வியூகம் – பொறுப்பாளர்களுடன் ஜே.பி.நட்டா ஆலோசனை” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த நியூஸ் கார்டை எடிட் செய்து விஷமத்தனமான தகவல் சேர்த்து பகிர்ந்திருப்பது தெரிந்தது.

உண்மைப் பதிவைக் காண: Facebook

இதை உறுதி செய்துகொள்ள மாலை மலர் அலுவலகத்தைத் தொடர்புகொண்டு பேசினோம். டிஜிட்டல் பிரிவு ஆசிரியர், “இந்த நியூஸ் கார்டு போலியானது; நாங்கள் இதை வெளியிடவில்லை” என்று உறுதி செய்தார். 

பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்குத் தடை விதிக்கப்பட்டதை ஆதரித்து நட்டா இப்படி ஏதும் பேசியுள்ளாரா என்று தேடிப் பார்தோம். ஆனால், நட்டா பி.எஃப்.ஐ – இந்திய பொருளாதாரத்தை இணைத்துப் பேசியதாக எந்த செய்தியும் நமக்குக் கிடைக்கவில்லை. இதன் மூலம் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட நியூஸ் கார்டு மற்றும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டதால் இந்திய ரூபாயின் மதிப்பு அதிகரிக்கும் என்று பாஜக தேசியத் தலைவர்  நட்டா கூறினார் என்று பரவும் நியூஸ் கார்டு போலியானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:பிஎஃப்ஐ தடை காரணமாக இந்திய ரூபாய் மதிப்பு உயரும் என நட்டா கூறினாரா?

Fact Check By: Chendur Pandian 

Result: False