
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையிடம் நிர்வாகிகள் பலரின் ஆடியோ, வீடியோக்கள் சிக்கியிருக்கிறது என்று சமீபத்தில் அதிமுக-வில் இணைந்த சிடிஆர் நிர்மல்குமார் கூறியதாக சில நியூஸ் கார்டுகள் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
ஜூனியர் விகடன், புதிய தலைமுறை ஊடகங்கள் வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. ஜூனியர் விகடன் வெளியிட்டது போன்று உள்ள நியூஸ் கார்டில், “அண்ணாமலையிடம் வீடியோ ஆதாரங்கள்! அண்ணாமலை தமிழ்நாடு பாஜகவின் தலைவரான பிறகு யாரையும் ஊடகங்களில் பங்கேற்க அனுமதிப்பதில்லை. கே.டி.ராகவன் போல பலரின் ஆடியோ, வீடியோக்கள் அண்ணாமலையிடம் சிக்கியிருக்கிறது. – சிடிஆர் நிர்மல் குமார் பகீர் குற்றச்சாட்டு” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை கருப்பு சிவப்புக்காரன் தி.மு.கழகம் என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் 2023 மார்ச் 6ம் தேதி வெளியிட்டுள்ளார்.

உண்மைப் பதிவைக் காண: Facebook
இதே போன்று புதிய தலைமுறை வெளியிட்டது போன்று உள்ள நியூஸ் கார்டில், “ஓரங்கட்டப்படும் சீனியர்கள்! காயத்ரி ரகுராம், நான் உட்பட பலரும் பாஜகவிலிருந்து வெளியேறவும், ஹெச்.ராஜா, கே.டி.ராகவன், பேராசிரியர் சீனிவாசன், நயினார் நாகேந்திரன் உட்பட பலரும் கட்சியிலிருந்து ஒதுக்கப்படவும் காரணம் அண்ணாமலையின் வார்ரூம் தான். அவர்களிடம் கட்சி சீனியர்களின் பல வீடியோ – ஆடியோ ஆதாரங்கள் சிக்கியிருக்கிறது. சிடிஆர் நிர்மல் குமார்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை Jaya Murugan என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் 2023 மார்ச் 7ம் தேதி பதிவிட்டிருந்தார். இந்த நியூஸ் கார்டுகளை பலரும் தங்கள் சமூக ஊடக பக்கங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
தமிழ்நாடு பாஜக ஐ.டி பிரிவு தலைவராக இருந்த நிர்மல் குமார் சமீபத்தில் அக்கட்சியிலிருந்து விலகி அ.தி.மு.க-வில் இணைந்தார். விலகல் தொடர்பாக அவர் ஒரு கடிதத்தையும் வெளியிட்டிருந்தார். இந்த சூழலில், அண்ணாமலையிடம் தமிழ்நாடு பாஜக நிர்வாகிகள் பலரின் ஆடியோ, வீடியோக்கள் உள்ளன என்று அவர் கூறியதாக நியூஸ் கார்டுகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன.
இந்த நியூஸ் கார்டுகள் உண்மையானது போல இல்லை. வடிவமைப்பு, தமிழ் ஃபாண்ட் போன்றவற்றில் வித்தியாசத்தைக் காண முடிந்தது. எனவே, இந்த நியூஸ் கார்டு போலியானது என்பது தெளிவாகத் தெரிந்தது. இதை உறுதி செய்ய ஆதாரங்களைத் தேடினோம்.
இப்படி ஏதேனும் தகவலை அந்த ஊடகங்கள் வெளியிட்டனவா என்று பார்த்தோம். ஆனால் அப்படி எந்த ஒரு செய்தியும் நமக்குக் கிடைக்கவில்லை. சிடிஆர் நிர்மல் சில பேட்டிகள் அளித்திருந்தார்… அவற்றில் எடப்பாடி பழனிசாமியை புகழ்ந்து பேசியிருந்தார். ஆடியோ – வீடியோ பற்றி அவர் எதுவும் கூறவில்லை.
ஜூனியர் விகடனில் அவரது பேட்டி வெளியாகி இருந்தது. அதில், “சில விஷயங்களை டீட்டெய்லாக பேசக் கூடாது என்று முடிவெடுத்தேன். ஒரு கட்சியிலிருந்தோம். பலருடன் பயணித்தோம். வெளியே வந்த பிறகு இப்படி நடந்தது, அப்படி நடந்தது என்று எல்லாம் விமர்சனம் பண்ணக் கூடாது. நான் சொல்ல வேண்டியவர்களுக்கு என்னுடைய கருத்துக்கள் போய் சேர்ந்திருக்கும். புரிய வேண்டியவர்களுக்குக் கண்டிப்பாகப் புரிந்திருக்கும். இதன் பிறகு டீட்டெய்லாக போய் ஒவ்வொரு விஷயத்தையும் டிஸ்கஸ் செய்யக் கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறேன். இந்த விஷயங்கள் பற்றிப் பேச வேண்டும் என்று பலரும் என்னிடம் கேட்டுக்கொண்டார்கள். ஆனால் அதைப் பற்றி எல்லாம் பேச விருப்பம் இல்லை. இவ்வளவு நாள் பயணித்த கட்சியைப் பற்றி நான் தவறாக வெளியே சொல்வது நம்முடைய தரத்தைக் குறைத்துவிடும்” என்று அவர் கூறினார்.
எந்த விஷயத்தைப் பற்றி பேசுகிறார் என்று தெளிவாகக் கூறவில்லை. கட்சியிலிருந்து வந்த பிறகு அந்த கட்சிக்குள் நடந்த விஷயங்களைப் பேச விரும்பவில்லை என்று அவர் கூறுவது தெளிவாத் தெரிகிறது.
இந்த நியூஸ் கார்டுகளை ஜூனியர் விகடன் மற்றும் புதிய தலைமுறை ஊடகங்களின் டிஜிட்டல் பிரிவு பொறுப்பாளர்களுக்கு அனுப்பினோம். அவர்களும் இந்த நியூஸ் கார்டை தங்கள் ஊடகங்கள் வெளியிடவில்லை என்று உறுதி செய்தனர். இப்படி ஏதேனும் செய்தி வெளியிடப்பட்டுள்ளதா என்று கேட்டோம். அப்படி எந்த ஒரு செய்தியும் வெளியிடவில்லை என்று உறுதி செய்தனர். இந்த ஆதாரங்கள் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட நியூஸ் கார்டுகள் தவறானவை என்று முடிவு செய்யப்படுகிறது.
முடிவு:
தமிழ்நாடு பாஜக நிர்வாகிகள் பலரின் வீடியோ, ஆடியோக்கள் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையிடம் உள்ளது என்று சிடிஆர் நிர்மல் கூறியதாக பரவும் நியூஸ் கார்டுகள் போலியானவை என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel

Title:பாஜக–வினரின் வீடியோ ஆதாரங்கள் அண்ணாமலையிடம் உள்ளது என்று சிடிஆர் நிர்மல்குமார் கூறினாரா?
Fact Check By: Chendur PandianResult: False
