இந்துத்துவம் எனும் பெயரால் வஞ்சிக்கப்பட்டோம் என்று உத்தவ் தாக்கரே கூறினாரா?

அரசியல் | Politics இந்தியா | India சமூக ஊடகம் | Social

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

மகாராஷ்டிரா முதல்வர் பதவியை ராஜினாமா செய்த உத்தவ் தாக்கரே, இந்துத்துவம் என்ற பெயரால் வஞ்சிக்கப்பட்டோம் என்று கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

மகாராஷ்டிரா முன்னாள் முதல்வரும் சிவசேனா தலைவருமான உத்தவ் தாக்கரே புகைப்படத்துடன் கூடிய ஜூனியர் விகடன் நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “இந்துத்துவம் என்கிற பெயரால் வஞ்சிக்கப்பட்டோம். பாலா சாகிப் தாக்கரே இந்துத்துவம் என்கிற மத அடையாளத்தை மறந்து மராட்டியர் என்கிற இன அடையாளத்தை முன்னெடுத்து இருந்தால் இன்று நாக்பூர் பிராமணர்களால் வஞ்சிக்கப்பட்டிருக்கமாட்டோம் – சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த பதிவை ஜைனாப் நாடககாதலி என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்ட நபர் 2022 ஜூன் 30ம் தேதி பதிவிட்டுள்ளார். இவரைப் போல பலரும் இதை பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

சிவசேனா கட்சியைச் சார்ந்தவர்களே உத்தவ் தாக்கரேக்கு எதிராக போர்க்கொடி தூக்கியதால் மகாராஷ்டிராவில் நடந்து வந்த உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசு கவிழ்ந்தது. அதிருப்தி குழு தலைவர் ஏக்நாத் ஷிண்டே, பா.ஜ.க ஆதரவோடு முதலமைச்சர் ஆனார்.

இந்த நிலையில், இந்துத்துவத்தை நம்பியதால் வஞ்சிக்கப்பட்டோம் என உத்தவ் தாக்கரே கூறியதாக நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. பதவி விலகிய உத்தவ் தாக்கரே, புதிய சக்தியோடு சிவசேனாவை பலப்படுத்துவேன். சிவசேனாவை யாரும் எடுத்துச் சென்றுவிட முடியாது என்று கூறியிருந்தார். எந்த இடத்திலும் இந்துத்துவத்தை நம்பியதால் வஞ்சிக்கப்பட்டோம் என்று அவர் கூறியதாக எந்த ஒரு செய்தியும் நமக்கு கிடைக்கவில்லை.

நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட நியூஸ் கார்டின் டிசைன், தமிழ் ஃபாண்ட் என அனைத்தும் வழக்கமாக ஜூனியர் வெளியிடும் நியூஸ் கார்டுடன் ஒத்துப்போகவில்லை. எனவே, போலியாக இதை உருவாக்கியிருப்பது தெரிந்தது. இதை உறுதி செய்ய ஜூனியர் விகடன் வெளியிட்ட நியூஸ் கார்டுகளை பார்வையிட்டோம்.

2022 ஜூன் 29ம் தேதி நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டது போன்று உத்தவ் தாக்கரே படத்துடன் கூடிய நியூஸ் கார்டை ஜூனியர் விகடன் வெளியிட்டிருந்தது. ஆனால் அதில், “மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே ராஜினாமா! மகாராஷ்டிரா முதல்வர் பதவியிலிருந்து உத்தவ் தாக்கரே ராஜினாமா செய்வதாக அறிவித்திருக்கிறார். நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தத் தடையில்லை என உச்ச நீதிமன்றம் தெரிவித்த நிலையில் காணொலி மூலம் தனது முடிவை அறிவித்திருக்கிறார் உத்தவ் தாக்கரே!” என்று இருந்தது. இந்த நியூஸ் கார்டை எடுத்து விஷமத்தனமான தகவல் சேர்த்துப் பகிர்ந்திருப்பது தெரிந்தது.

உண்மைப் பதிவைக் காண: Facebook

நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட நியூஸ் கார்டை ஜூனியர் விகடன் சமூக ஊடகப் பொறுப்பாளருக்கு வாட்ஸ் அப் மூலம் அனுப்பி இது உண்மையா என்று கேட்டோம். அதற்கு அவர், இந்த நியூஸ் கார்டு போலியானது என்று பதில் அளித்தார்.

இந்த ஆதாரங்கள் அடிப்படையில் இந்துத்துவம் என்கிற பெயரால் வஞ்சிக்கப்பட்டோம் என்று உத்தவ் தாக்கரே கூறியதாக பகிரப்படும் நியூஸ் கார்டு போலியானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

இந்துத்துவம் என்ற பெயரால் வஞ்சிக்கப்பட்டோம் என்று சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே கூறினார் என்று பரவும் நியூஸ் கார்டு போலியானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:இந்துத்துவம் எனும் பெயரால் வஞ்சிக்கப்பட்டோம் என்று உத்தவ் தாக்கரே கூறினாரா?

Fact Check By: Chendur Pandian 

Result: False