
‘’தமிழகத்தில் தேவர் ஜாதியை சேர்ந்தவர்கள்தான் அதிகளவில் வசிக்கின்றனர்,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன் உண்மைத்தன்மையை ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.
தகவலின் விவரம்:
கடந்த மே 9ம் தேதியன்று, குறிப்பிட்ட பதிவை, Mukkulathor Community என்ற ஃபேஸ்புக் ஐடி வெளியிட்டுள்ளது. இதனை உண்மை என நம்பி பலரும் வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
குறிப்பிட்ட வீடியோவை பார்க்கும்போதே, ஜாதி பெருமைக்காகவும், ஜாதி ரீதியான வன்முறையை விதைக்கும் நோக்கத்திலும் பகிரப்பட்ட பதிவாக, தெரிகிறது. இதில், முதல் இடத்தில் தேவர் ஜாதியினரும், 2வது இடத்தில் வன்னியரும் உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இதேபோல, கவுண்டர், பறையர் மற்றும் நாடார் போன்ற ஜாதியினர் முறையே 3, 4 மற்றும் 5வது இடத்தில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், இப்படியான ஜாதி பெருமை பதிவுகள் பெரும்பாலும் அவரவர் சுயநலனுக்காக பகிரப்படுபவைதான். காரணம், தமிழக அரசோ அல்லது மத்திய அரசோ இதுவரை தமிழகத்தில் ஜாதி ரீதியான கணக்கெடுப்பு எதுவும் நடத்தவில்லை. மக்கள் தொகை கணக்கெடுப்பு மட்டுமே நடத்தப்பட்டு வருகிறது.
இதுபற்றிய விக்கிப்பீடியா தகவல் ஆதாரத்தை படிக்க விரும்பினால், இங்கே கிளிக் செய்யவும். இதேபோல, மத்திய அரசு நடத்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடர்பான விவரங்களை அறிய விரும்பினால் இங்கே கிளிக் செய்யவும்.
இதுவரை நடைபெற்று வரும் கணக்கெடுப்புகள் அனைத்துமே மத ரீதியாக, ஆண், பெண் பாலின பிரிவினை ரீதியாக, கல்வி ரீதியாக இப்படித்தான் உள்ளன. எவையும், ஜாதி ரீதியான கணக்கெடுப்பு அல்ல.
ஆனால், தமிழக அரசு ஜாதி வாரியான கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கூறி, தொடர்ச்சியாக, பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி உள்ளிட்டோர் மட்டுமே வலியுறுத்தி வருகின்றனர். தமிழகத்தில் அதிகளவில் வன்னியர் ஜாதி மக்கள்தான் வசிப்பதாகவும், ஜாதி ரீதியான கணக்கெடுப்பு நடத்தினால், அதிக இட ஒதுக்கீடு வன்னியர் உள்ளிட்ட பிற்படுத்தப்பட்ட ஜாதியினருக்கே அதிகம் கிடைக்கும் எனவும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.
இதுதொடர்பான தகவல் தேடியபோது கூட ராமதாஸ், அவரது மகன் அன்புமணி உள்ளிட்டோர் வெளியிட்ட செய்தி ஆதாரங்களே கிடைத்தன.

இதுதொடர்பாக, 2018ம் ஆண்டில் அன்புமணி ராமதாஸ், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தார். அந்த செய்தி விவரம் இங்கே இணைக்கப்பட்டுள்ளது.
இதன்படி பார்த்தால், இதுவரை அதிகாரப்பூர்வமாக தமிழக அரசு எந்த ஜாதி வாரியான கணக்கெடுப்பும் நடத்தவில்லை. அப்படியான கணக்கெடுப்பு நடத்தி, அதன் விவரத்தை அறிவித்தால் மட்டுமே எந்த ஜாதி மக்கள் தமிழகத்தில் அதிகம் வசிக்கிறார்கள் என்பது தெளிவாக தெரியவரும். அதுவரைக்கும், இப்படி ஜாதி பெருமை பேசுவோர் தங்களது சுயஜாதி பெருமையை நிலைநாட்டுவதற்காக, அவர்களுக்கு தெரிந்த புள்ளிவிவர அடிப்படையில் இத்தகைய கருத்துகளை பரப்பி வருகின்றனர்.
எனவே, இந்த ஜாதியினர்தான் அதிகம் வசிக்கிறார்கள் என்ற தகவலில் நம்பகத்தன்மை இல்லை என்றுதான் சொல்ல வேண்டியுள்ளது. காரணம், இது வீணான ஜாதி மோதலை உருவாக்கக்கூடிய விஷமத்தனமான பதிவாகும். அரசு இயந்திரம் ஜாதி ரீதியான கணக்கெடுப்பு நடத்தி, அறிவித்தால் மட்டுமே இந்த பிரச்னையில் ஒரு முற்றுப்புள்ளி வரும். அதுவரைக்கும் இப்படி பகிரப்படும் ஜாதிப் பெருமை பதிவுகளை யாரும் நம்பாமல் இருப்பதே நலம்.
இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் குறிப்பிட்ட ஃபேஸ்புக் பதிவில் நம்பகத்தன்மை இல்லை என முடிவு செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின்படி, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட ஃபேஸ்புக் பதிவில் நம்பகத்தன்மை இல்லை என நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் யாரும் இத்தகைய நம்பகத்தன்மையற்ற செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோ செய்திகளை மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:தமிழகத்தில் எந்த ஜாதி மக்கள் அதிகம் வசிக்கின்றனர்?- விஷமத்தனமான ஃபேஸ்புக் பதிவு
Fact Check By: Parthiban SResult: Mixture
