
‘’நாடார் சமுதாய வாக்குகளை நம்பி நான் போட்டியிடவில்லை,’’ என்று கனிமொழி பேசியதாகக் கூறி நியூஸ் 18 தமிழ்நாடு ஊடகத்தின் பெயரில் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.
தகவலின் விவரம்:
நியூஸ்18 தமிழ்நாடு லோகோவுடன் பகிரப்படும் இந்த நியூஸ் கார்டில், ‘’நாடார் சமுதாய வாக்குகளை நம்பி நான் தூத்துக்குடியில் போட்டியிடவில்லை. கனிமொழி ஆவேசம்,’’ என தலைப்பில் கூறப்பட்டுள்ளது.
2019ம் ஆண்டில் பகிரப்பட்டுள்ள இந்த நியூஸ்கார்டை இன்னமும் பலர் உண்மை என நம்பி ஃபேஸ்புக்கில் ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
கடந்த 2019ம் ஆண்டில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் திமுக சார்பாக, கனிமொழி தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்டார். இதற்கான தேர்தல் முடிவுகள் 2019 மே 23ம் தேதி வெளியாகின. இதில், அவர் பெரும்பான்மை ஓட்டுகளுடன் வெற்றி பெற்றார்.
இந்நிலையில், அவரது பெயரில், போலியான நியூஸ் கார்டு ஒன்று, நியூஸ் 18 ஊடகம் வெளியிட்டதாகக் கூறி, அந்த தேர்தல் நேரத்தில் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டது.
அதுதான் மேற்கண்ட நியூஸ் கார்டு. அதில் உள்ள வாசகங்களை பார்த்தாலே, கனிமொழி இப்படி பேசியிருக்க வாய்ப்பில்லை என்று தெளிவாக தெரியும். அவரது தாயாரின் பூர்வீக பகுதி என்பதோடு, நாடார் சமுதாய மக்கள் அதிகம் உள்ளனர் என்பதால்தான், தூத்துக்குடி தொகுதியில் அவர் போட்டியிட்டார்.
உண்மை இப்படியிருக்க, அவர் நாடார் சமுதாய ஓட்டு வேண்டாம் என ஒருவேளை கூறினாரா அல்லது நியூஸ் 18 தமிழ்நாடு இவ்வாறு செய்தி வெளியிட்டுள்ளதா என்பதை அறியும் நோக்கில், அந்த ஊடகத்தின் ஆசிரியர் குழுவை தொடர்பு கொண்டு விசாரித்தோம். ‘’இது அப்பட்டமான போலி நியூஸ் கார்டு. இப்படி நாங்கள் எதுவும் வெளியிடவில்லை,’’ என்று தெரிவித்தனர்.
எனவே, 2019 மக்களவை தேர்தலின்போது தயாரித்து சுற்றில் விடப்பட்ட போலியான நியூஸ் கார்டை இன்றளவும் உண்மை என நம்பி, பலரும் சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகின்றனர் என்று சந்தேகமின்றி தெளிவாகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் தவறானது என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title:நாடார் சமுதாய வாக்குகள் தேவையில்லை என்று கனிமொழி கூறினாரா?
Fact Check By: Pankaj IyerResult: False
