FACT CHECK: கேரள உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ.க தேசிய துணைத் தலைவர் அப்துல்லா குட்டி 20 வாக்குகள் பெற்றாரா?

அரசியல் | Politics இந்தியா | India சமூக ஊடகம் | Social

கேரள உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்ட பாரதிய ஜனதா கட்சியின் தேசிய துணைத் தலைவர் அப்துல்லா குட்டிக்கு மொத்தம் 20 வாக்குகள்தான் கிடைத்தது என்று ஒரு தகவல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என்று ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive

யாரோ ஒருவர் பதிவிட்டதை ஸ்கிரீன்ஷாட் எடுத்து வெளியிட்டுள்ளனர். அதில், “கேரள உள்ளாட்சி தேர்தல் பாஜக தேசிய துணைத் தலைவர் #அப்துல்லாகுட்டிக்கு மொத்தமே 20 வாக்குகள்தான்.. 😁😁

அந்த பக்கத்து வேலூர் இபுறாஹிம் போல😄😄” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை ஆண்டி-இந்தியன் என்ற ஃபேஸ்புக் பக்கம் 2020 டிசம்பர் 18ம் தேதி பதிவிட்டுள்ளது. பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

நடந்து முடிந்த கேரள உள்ளாட்சித் தேர்தலில் இடதுசாரிகள் அமோக வெற்றி பெற்றனர். இரண்டாவது இடத்தை மட்டுமே காங்கிரஸ் கட்சியால் பெற முடிந்தது. கேரளாவில் வளர்ச்சி பெற்று வரும் பா.ஜ.க குறிப்பிடத்தக்க சில வெற்றிகளைப் பெற்றுள்ளது.

இந்த சூழலில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய துணைத் தலைவர் அப்துல்லா குட்டி என்பவர் இந்த தேர்தலில் வெறும் 20 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளார் என்று குறிப்பிட்டு பலரும் பதிவிட்டு வருகின்றனர்.

தேசிய துணைத் தலைவர் பதவியில் உள்ளவர் சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடாமல் உள்ளாட்சி அமைப்பு தேர்தலில் போட்டியிட்டார் என்ற தகவல் ஆச்சரியத்தை அளித்தது. எனவே, இது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டோம்.

நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவில் அப்துல்லா குட்டி எங்கு போட்டியிட்டார், எந்த பதவிக்கு போட்டியிட்டார் என எந்த ஒரு தகவலையும் அளிக்கவில்லை. எனவே, அப்துல்லா குட்டி தேர்தலில் போட்டியிட்டாரா என்று பார்த்தோம்.

அப்துல்லா குட்டி, கேரளா உள்ளாட்சித் தேர்தல் என கீ வார்த்தைகள் அடிப்படையில் தேடிய போது அப்துல்லா குட்டி உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தது தொடர்பாக எந்த ஒரு செய்தியும் கிடைக்கவில்லை. அவருடைய சுயவிவர குறிப்பைப் பார்த்தோம்.

அதில் அவர் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினராக இருந்ததாக இருந்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், காங்கிரஸ் கட்சியில் இருந்த போது எம்.பி-யாக, எம்.எல்.ஏ-வாக இருந்துள்ளார். அதன் பிறகு கடந்த 2019ம் ஆண்டுதான் அவர் பா.ஜ.க-வில் இணைந்தார். அவருக்கு தேசிய துணைத் தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளதாக செய்திகள் கிடைத்தன.

அசல் பதிவைக் காண: newindianexpress.com I Archive

எம்.பி, எம்.எல்.ஏ-வாக இருந்தவர் சாதாரண ஊராட்சி உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுவாரா என்ற கேள்வி எழவே தொடர்ந்து தேடினோம். அப்போது அப்துல்லா குட்டியின் சகோதாரர் தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்த விவரம் கிடைத்தது. 

Archive

இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்டிருந்த செய்தியில், “பா.ஜ.க தேசிய துணைத் தலைவர் ஏ.பி.அப்துல்லா குட்டியின் சகோதரர் ஏ.பி.சராஃபுதீன் கண்ணூர் மாவட்டம் நாரத் கிராம பஞ்சாயத்துத் தேர்தலில் போட்டியிட்டார். அவர் வெறும் 20 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். இந்திய யூனியன் முஸ்லிம் கட்சியின் வேட்பாளர் 677 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்” என்று குறிப்பிட்டிருந்தனர்.

மாத்ருபூமி மலையாளத்திலும் கூட அப்துல்லா குட்டியின் சகோதரர் 20 வாக்குகள் வாங்கி தோல்வி அடைந்தார் என்று குறிப்பிட்டிருந்தனர். ஒன் இந்தியா மலையாளத்தில் அப்துல்லா குட்டியின் சகோதரர் போட்டியிடுகிறார் என்று அவர் வேட்புமனு தாக்கல் செய்த செய்தி வெளியாகி இருந்தது. 

அசல் பதிவைக் காண: indianexpress.com I Archive 1 I mathrubhumi.com I Archive 2

அப்துல்லா குட்டி கேரள உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டார் என்று எந்த ஒரு தகவலும் கிடைக்காத சூழலில் நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ மலையாளம் பிரிவு மூலமாக இந்த தகவல் உண்மையா என்று விசாரித்தோம்.

‘’கேரள உள்ளாட்சித் தேர்தலில் அப்துல்லா குட்டி போட்டியிடவில்லை. அவருடைய சகோதரர் தான் கண்ணூர் மாவட்டம் நாரத் பஞ்சாயத்து 17வது வார்டில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்” என்று உறுதி செய்தனர்.

இதன் அடிப்படையில் பா.ஜ.க தேசிய துணைத் தலைவர் அப்துல்லா குட்டி கேரள உள்ளாட்சித் தேர்தலில் 20 வாக்குகள் பெற்று தோல்வியுற்றார் என்று பகிரப்படும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

பா.ஜ.க தேசிய துணைத் தலைவர் அப்துல்லா குட்டி கேரள உள்ளாட்சித் தேர்தலில் வெறும் 20 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வியுற்றார் என்று பகிரப்படும் தகவல் தவறானது என்பதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:கேரள உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ.க தேசிய துணைத் தலைவர் அப்துல்லா குட்டி 20 வாக்குகள் பெற்றாரா?

Fact Check By: Chendur Pandian 

Result: False