
ஞானவாபி மசூதியில் உள்ள சர்ச்சைக்குரிய நீரூற்று இதுதான் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
பிரம்மாண்ட மசூதி மற்றும் தொழுகைக்குச் சுத்தம் செய்யும் நீர்நிலைப் பகுதி ஆகியவற்றின் படங்களை பகிர்ந்துள்ளனர். இதனுடன் நீண்ட பதிவையும் வெளியிட்டுள்ளனர். அதில், “குளத்தில் சிவலிங்கம்னு இவனுங்க சொல்றது, தொழுகைக்கு செல்பவர்கள் கை கால் முகம் கழுவ பயன்படுத்தும் ஹவுது என்ற சிறிய நீர் தொட்டிக்கு நடுவில் அலங்காரத்துக்கு இருக்கும் நீரூற்று போன்ற கல்லை தான்.
இந்த அலங்கார கல் இவனுகளுக்கு சிவலிங்கமாக தெரிகிறதாம். கீழே உள்ள போட்டோவில் இருக்கும் இப்படிப்பட்ட அலங்கார நீரூற்று கற்கள் முகலாயர் காலத்து மசூதிகளில் மட்டுமல்ல உள்ளூர் மசூதிகளிலும் இருக்கும்” என்று குறிப்பிட்டிருந்தனர்.
இந்த பதிவை Sherif sha என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் 2022 மே 17ம் தேதி பதிவிட்டுள்ளார். இவரைப் போல பலரும் இந்த பதிவை பகிர்ந்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
வாரணாசி ஞானவாபி மசூதியில் உள்ள குளத்தில் சிவலிங்கம் இருப்பதாக ஒரு தரப்பினர் குற்றம்சாட்டியுள்ளனர். அது நீரூற்று என்று இஸ்லாமியர்கள் தரப்பு மறுப்பு தெரிவிக்கிறது. இந்த நிலையில், மசூதிக்குள் கண்டுபிடிக்கப்பட்ட சிவலிங்கத்தின் படம் என்று ஒடிஷா, ராஜஸ்தான் என வெவ்வேறு பகுதிகளைச் சேர்ந்த சிவலிங்கங்களின் படங்களை இந்து தரப்பினர் ஒரு புறமும், இந்த நீரூற்றைத்தான் சிவலிங்கம் என்று கூறுகின்றனர் என்று பல்வேறு மசூதிகளில் உள்ள நீரூற்று படங்களை இஸ்லாமியர்களும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
அந்த வகையில், ஞானவாபி மசூதியின் புகைப்படத்துடன், தொழுகைக்கு தங்களை சுத்தம் செய்துகொள்ளும் பகுதி ஒன்றின் படத்தையும் இணைத்து பதிவிட்டுள்ளனர். நிலைத் தகவலில், “இந்த அலங்கார கல் இவனுகளுக்கு சிவலிங்கமாக தெரிகிறதாம். கீழே உள்ள போட்டோவில் இருக்கும் இப்படிப்பட்ட அலங்கார நீரூற்று கற்கள் முகலாயர் காலத்து மசூதிகளில் மட்டுமல்ல உள்ளூர் மசூதிகளிலும் இருக்கும்” என்று குறிப்பிட்டிருப்பதன் மூலம் இவர்கள் இந்த படம் ஞானவாபி மசூதியில் எடுக்கப்பட்டது என்று குறிப்பிடுவது தெரிகிறது.
ஏற்கனவே, நம்முடைய கட்டுரைகளில் ஞானவாபி மசூதியின் நீரூற்று பற்றிய தகவலை வெளியிட்டிருந்தோம். ஊடகங்களில் வெளியான படத்துடன் கூடிய செய்திக்கான இணைப்பை வழங்கியிருந்தோம். எனவே, இந்த புகைப்படம் ஞானவாபி மசூதியில் எடுக்கப்பட்டது இல்லை என்று என்பது தெளிவாகத் தெரிந்தது. எனவே, இந்த படம் எங்கு எடுக்கப்பட்டது என்று மட்டும் ஆய்வு செய்தோம்.
படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, இந்த புகைப்படம் கொல்கத்தாவில் உள்ள மசூதி ஒன்றில் எடுக்கப்பட்டது என்று தெரியவந்தது. அந்த மசூதியின் பெயர் நகோடா என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதன் அடிப்படையில் நாம் தேடினோம். அப்போது நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட இந்த புகைப்படத்தை பல ஆண்டுகளுக்கு முன்பு பிளாக் ஒன்றில் பதிவேற்றம் செய்திருப்பதை காண முடிந்தது. மேலும், academic.com என்ற இணையதளத்திலும் இந்த புகைப்படம் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

உண்மைப் பதிவைக் காண: blogs.umb.edu I Archive
உண்மையில் இப்படி ஒரு மசூதி உள்ளதா, அங்கு இப்படி குளம் அமைப்பு உள்ளதா என அறிய ஆய்வைத் தொடர்ந்தோம். கூகுள் மேப்பில் தேடினோம். அப்போது அந்த மசூதியில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட புகைப்படத்தில் இருப்பது போன்று குளம், செயற்கை நீரூற்று இருப்பது போன்று புகைப்படம், வீடியோ கிடைத்தது. மேலும் மேற்கு வங்க அரசின் சுற்றுலாத் துறை இணையதளத்திலும் இந்த மசூதி பற்றிய தகவல் இருந்தது. அதிலும் இந்த குளத்தின் படத்தைப் பதிவிட்டிருந்தனர். இதன் மூலம் மேற்கு வங்கம் கொல்கத்தாவில் உள்ள மசூதியின் படத்தை ஞானவாபி மசூதி படத்துடன் இணைத்துப் பதிவிட்டிருப்பது உறுதியாகிறது.
முடிவு:
இந்த வாரணாசி ஞானவாபி மசூதி நீரூற்றைத்தான் சிவலிங்கம் என்று கூறுகிறார்கள் என்று பகிரப்படும் படம் கொல்கத்தாவில் எடுக்கப்பட்டது என்பதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel

Title:சிவலிங்கம் என்று கூறப்படும் ஞானவாபி அலங்கார நீரூற்று இதுதான் என்று பரவும் படம் உண்மையா?
Fact Check By: Chendur PandianResult: Missing Context
