நிர்பயா குற்றவாளிகளுக்கு ஆதரவாக வாதாடிய வழக்கறிஞர் ஜோசப் குரியன் இவரா?

இந்தியா | India சமூகம்

நிர்பயா கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு ஆதரவாக வாதாடிய ஜோசப் குரியன் படம் என்று ஒருவருடைய புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. இது உண்மையா என்று ஆய்வு மேற்கொண்டோம்.

தகவலின் விவரம்:

Joseph 2.png
Facebook LinkArchived Link

ஒரு நபரின் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. அதன் கீழே, “நிர்பயா கொலை வழக்கு குற்றவாளிகளுக்கு ஆதரவாக வாதாடிய ஜோசப் குரியன்” என்று குறிப்பிட்டுள்ளனர்.

இந்த பதிவை, Spr என்ற ஃபேஸ்புக் பக்கம் 2020 மார்ச் 20 அன்று வெளியிட்டுள்ளது. பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

நிர்பயா பாலியல் வன்கொடுமை, கொலை வழக்கில் குற்றவாளிகளுக்காக வாதாடிய வழக்கறிஞர் ஏ.பி.சிங் என்று பல முறை செய்தியில் படித்திருப்போம். புதிதாக ஜோசப் குரியன் என்று ஒருவர் படத்தைப் பகிர்ந்துள்ளனர். இது உண்மையா என்று ஆய்வு செய்தோம்.

கொலைக் குற்றவாளிகளின் மதம் பற்றி கவலையில்லை, அவர்களை காப்பாற்ற நினைத்தவர் மதம் பற்றி தவறான கருத்தை உருவாக்கும் வகையில் பதிவு உருவாக்கப்பட்டுள்ளது. படத்தில் சிலுவை அடையாளம் எல்லாம் வரையப்பட்டுள்ளதைப் பார்க்கும்போது பதிவிட்டவர்களின் நோக்கத்தை புரிந்துகொள்ள முடிந்தது.

படத்தில் உள்ளவர் யார், இவர் வழக்கறிஞர் ஜோசப் குரியன் என்று அறிய படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். ஆனால், படத்தில் உள்ளவர் யார் என்று கண்டறிய முடியவில்லை.

நிர்பயா வழக்கில் தூக்கிலிடப்பட்ட குற்றவாளிகளுக்காக ஆஜரான வழக்கறிஞர்களில் யாராவது ஜோசப் குரியன் என்று உள்ளார்களா என்று கூகுளில் டைப் செய்து பார்த்தோம். ஏ.பி.சிங் பெயர் மட்டுமே வந்தது. வேறு யாராவது ஜோசப் குரியன் என்று இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் உள்ளார்களா என்று பார்த்தோம்.

அப்போது 2016ம் ஆண்டு இந்த வழக்கு தொடர்பாக உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இரண்டு மூத்த வழக்கறிஞர்களை தங்களுக்கு சட்ட உதவியாளர்களாக நியமித்தது. இந்த வழக்கறிஞர்களை நியமித்து உத்தரவிட்ட அமர்வில் நீதிபதியாக குரியன் ஜோசப் இருந்துள்ளார். மற்றபடி ஜோசப் குரியன் என்ற பெயரில் எந்த ஒரு வழக்கறிஞரும் ஆஜரானதாக செய்திகள் கிடைக்கவில்லை. 

Joseph 3.png
naidunia.comArchived Link 1
news18.comArchived Link 2
newindianexpress.comArchived Link 3

குற்றவாளிகள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் பெயரைத் தேடிப் பார்த்தோம். அப்போது குற்றவாளி முகேஷ் தரப்பில் கீழ் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் எம்.எல்.ஷர்மா ஆஜரானதும், நான்கு பேருக்கும் சேர்த்து ஏ.பி.சிங் ஆஜராகி வாதாடியதாகவும் செய்திகள் கிடைத்தன. 

ஏ.பி.சிங் பற்றிய கூடுதல் செய்திகளை தி பிரின்ட் ஊடகம் வெளியிட்டிருந்தது. இவர் சந்திராசாமியாரால் சட்டத் துறைக்கு அறிமுகம் செய்யப்பட்டவர் என்றும், பாலியல் வன்கொடுமை புகார் தொடர்பாக கைது செய்யப்பட்ட பா.ஜ.க மூத்த தலைவர் சுவாமி சின்மயானந்தாவுக்கு பெயில் கிடைக்க வாதாடியவர் என்றும் தெரிந்தது.

Joseph 4.png
theprint.inArchived Link

நம்முடைய ஆய்வில்,

படத்தில் இருப்பவர் யார் என்று கண்டறிய முடியவில்லை.

குற்றவாளிகளுக்கு ஆதரவாக வாதாடிய வழக்கறிஞர்கள் எம்.எல்.ஷர்மா, ஏ.பி.சிங் என்பது தெரியவந்துள்ளது.

குரியன் ஜோசப் என்ற பெயரில் யாரும் குற்றவாளிகளுக்கு ஆதரவாக வாதாடியதாக செய்தி, தகவல் கிடைக்கவில்லை.

இந்த ஆதாரங்கள் அடிப்படையில், நிர்பயா பாலியல் வன்கொடுமை – கொலை வழக்கில் குற்றவாளிகளுக்காக வாதாடிய வழக்கறிஞர் ஜோசப் குரியன் என்று பகிரப்படும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:நிர்பயா குற்றவாளிகளுக்கு ஆதரவாக வாதாடிய வழக்கறிஞர் ஜோசப் குரியன் இவரா?

Fact Check By: Chendur Pandian 

Result: False