FACT CHECK: மழை நீர் தேங்கியதால் சென்னை மக்கள் சந்தோஷம் என்று தந்தி டிவி கூறியதா?

அரசியல் சமூக ஊடகம் தமிழ்நாடு

சென்னையில் மழை தண்ணீர் ஆங்காங்கே தேங்கியதால் சந்தோஷ வெள்ளத்தில் மூழ்கிய சென்னைவாசிகள் என்று தந்தி டி.வி நியூஸ் கார்டு ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என்று ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive

தந்தி டிவி வெளியிட்டது போன்ற நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “சென்னையில் கனமழை தொடரும். மழை தண்ணீர் ஆங்காங்கே தேங்கியதால் சந்தோஷ வெள்ளத்தில் மூழ்கிய சென்னைவாசிகள்” என்று இருந்தது. நிலைத் தகவலில் தமிழ் ஊடகங்களை மிக மோசமாக விமர்சித்து கருத்து பதிவிடப்பட்டிருந்தது.

இந்த பதிவை Shyamala Jeevanandham என்ற ஃபேஸ்புக் ஐடி-யைக் கொண்ட நபர் 2021 நவம்பர் 8ம் தேதி பதிவிட்டிருந்தார். இவரைப் போல பலரும் இதை பதிவிட்டு, கடுமையான விமர்சனங்களைப் பதிவிட்டு வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

தமிழகத்தில் கன மழை பெய்து வருகிறது. சென்னையில் ஒரே நாளில் இயல்பை விட அதிக அளவில் மழை பெய்ததால் நகரின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. இதனால் மக்கள் அவதியுற்று வருகின்றனர். மக்கள் அடைந்த இன்னல்களைப் பற்றி எல்லா ஊடகங்களும் செய்தி வெளியிட்டு வருகின்றன. 

ஆனால், ஊடகங்கள் எல்லாம் தமிழ்நாடு அரசுக்கு ஆதரவாக இருப்பது போலவும், மக்கள் வேதனையை வெளியே சொல்லாமல், மக்கள் மகிழ்ச்சியாக இருப்பது போன்று பொய்யான செய்தியை வெளியிட்டு வருவதாகவும் சிலர் விஷமத்தனமாக வதந்திகளைப் பகிர்ந்து வருகின்றனர்.

அந்த வகையில் தந்தி டிவி “மழை தண்ணீர் ஆங்காங்கே தேங்கியதால் சந்தோஷ வெள்ளத்தில் மூழ்கிய சென்னைவாசிகள்” என்று நியூஸ் கார்டு வெளியிட்டதாக பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். இந்த நியூஸ் கார்டை பார்க்கும் போதே எடிட் செய்யப்பட்டிருப்பது தெளிவாக தெரிகிறது. தந்தி டிவி வழக்கமாகப் பயன்படுத்தும் தமிழ் ஃபாண்ட் அதில் இல்லை. எனவே, இந்த நியூஸ் கார்டு போலியானது என்பதை உறுதி செய்வதற்கான ஆய்வை நடத்தினோம்.

Archive

முதலில் தந்தி டிவி வெளியிட்ட நியூஸ் கார்டுகளை அதன் ஃபேஸ்புக், ட்விட்டர் பக்கத்தில் பார்வையிட்டோம். அப்போது, நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டது போன்ற நியூஸ் கார்டை தந்தி டிவி வெளியிட்டிருப்பது தெரிந்தது. ஆனால் அதில், “சென்னையில் கன மழை தொடரும். சென்னையில் அடுத்த 3 மணி நேரத்திற்கு கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தகவல்” என்று இருந்தது. இந்த நியூஸ் கார்டை எடிட் செய்து விஷமத்தனமாக தகவலை சேர்த்துப் பகிர்ந்திருப்பது உறுதியானது. 

இதை மேலும் உறுதி செய்ய, தந்தி டிவி டிஜிட்டல் பிரிவு நிர்வாகிக்கு இந்த படத்தை அனுப்பி விசாரித்தோம். அவரும் இது போலியானது என்று உறுதி செய்தார். இந்த ஆதாரங்கள் அடிப்படையில் “மழை தண்ணீர் ஆங்காங்கே தேங்கியதால் சந்தோஷ வெள்ளத்தில் மூழ்கிய சென்னைவாசிகள்” என்று தந்தி டிவி வெளியிட்டதாக பகிரப்படும் நியூஸ் கார்டு போலியானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

மழை நீர் தேங்கியதால் சென்னை மக்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கினர் என்று தந்தி டிவி வெளியிட்டதாக பரவும் நியூஸ் கார்டு போலியானது என்பதை தகுந்த ஆதாரங்களுடன்  ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:மழை நீர் தேங்கியதால் சென்னை மக்கள் சந்தோஷம் என்று தந்தி டிவி கூறியதா?

Fact Check By: Chendur Pandian 

Result: False

Leave a Reply