
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் உள்ள ஏழு பேரை தேச துரோகிகள் என்றும், அவர்களை விடுதலை செய்யக் கோரும் தார்மீக உரிமை யாருக்கும் இல்லை என்று அ.தி.மு.க எம்.பி கே.பி.முனுசாமி கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
அசல் பதிவைக் காண: Facebook I Archive
அ.தி.மு.க துணை ஒருங்கிணைப்பாளரும் எம்.பி-யுமான கே.பி.முனுசாமி உள்ளிட்டவர்கள் பேட்டி அளிக்கும் புகைப்படத்துடன் கூடிய நியூஸ் ஜெ நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், “தார்மீக உரிமை இல்லை. முன்னாள் பிரதமரை படுகொலை செய்த தேசத் துரோகிகளை விடுதலை செய்ய கோரும் தார்மீக உரிமை யாருக்கும் இல்லை – கே.பி.முனுசாமி” என்று உள்ளது.
நிலைத் தகவலில், “காங் தலைவர்களே தயங்கும் போது…எங்கள் உணர்வுக்கு உங்களின் ஆதரவுக்கு நன்றி சாமி…” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை Jawahar Raj M என்பவர் 2021 பிப்ரவரி 6ம் தேதி வெளியிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
ராஜிவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள ஏழு பேரும் விடுதலை ஆவது உறுதி என்று அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் 2021 பிப்ரவரி 5ம் தேதி பதிவிட்டுள்ளார்.
ஆனால் பிப்ரவரி 4ம் தேதி முனுசாமி அளித்த பேட்டியில் ஏழு பேரையும் தேச துரோகிகள் என்று கடுமையாக விமர்சித்ததாக கூறப்பட்டுள்ளது. உண்மையில் அ.தி.மு.க அப்படி கூறியிருந்தால் மிகப்பெரிய அளவில் சர்ச்சையையும் விவாதத்தையும் ஏற்படுத்தியிருக்கும். பலரும் இதை ஷேர் செய்து வரவே இந்த தகவல் உண்மையா என்று சரி பார்த்தோம்.
முதலில் 2021 பிப்ரவரி 4ம் தேதி கே.பி.முனுசாமி அளித்த பேட்டி தொடர்பான செய்தியைப் பார்த்தோம். அதில், “சசிகலாவுக்கு தார்மீக உரிமை இல்லை – கே.பி.முனுசாமி பேட்டி” என்று இருந்தது. செய்தியின் எந்த இடத்திலும் ராஜிவ் கொலைக் குற்றவாளிகள் தேச விரோதிகள் என்றும், அவர்கள் விடுதலைப் பற்றி பேச யாருக்கும் உரிமை இல்லை என்றும் அவர் கூறியதாகவும் செய்தி இல்லை.
அசல் பதிவைக் காண: nakkheeran.in I Archive 1 I dailythanthi.com I Archive 2
அவருடைய பேட்டி வீடியோவை தேடி எடுத்தோம். அந்த பேட்டியை முழுமையாகக் கேட்டோம். பேட்டியின் தொடக்கத்தில் கே.பி.முனுசாமி பேசுகிறார். கடைசியில் சட்டசத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் பேசுகிறார். முழுக்க முழுக்க சசிகலா பற்றி மட்டுமே பேசுகிறார்கள்.
நிருபர்கள் சசிகலா தொடர்பாக கேள்வி எழுப்பியதும் பேட்டி போதும் என்று கூறி அவர்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவில் உள்ளது போன்று எந்த கருத்தையும் கே.பி.முனுசாமி கூறவில்லை என்பது உறுதியானது.
அடுத்ததாக நியூஸ் ஜெ வெளியிட்ட நியூஸ் கார்டுகளை ஆய்வு செய்தோம். பிப்ரவரி 4ம் தேதி வெளியான அந்த நியூஸ் கார்டு நமக்கு கிடைத்தது. அதில், “தார்மீக உரிமை இல்லை. அதிமுக கொடியை சசிகலா பயன்படுத்த எந்தவிதமான தார்மீக உரிமையும் அவருக்கு இல்லை – கே.பி.முனுசாமி” என்று இருந்தது. இந்த நியூஸ் கார்டை எடிட் செய்திருப்பது உறுதியானது.
நம்முடைய ஆய்வில், கே.பி.முனுசாமி ராஜிவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள ஏழு பேர் பற்றி குறிப்பிடவில்லை என்பது உறுதியாகி உள்ளது. அவர் அளித்த பேட்டி வீடியோ நமக்குக் கிடைத்துள்ளது. நியூஸ் ஜெ வெளியிட்ட அசல் நியூஸ் கார்டு நமக்குக் கிடைத்துள்ளது.
இதன் அடிப்படையில், “முன்னாள் பிரதமரை படுகொலை செய்த தேச துரோகிகளை விடுதலை செய்ய கோரும் தார்மீக உரிமை யாருக்கும் இல்லை” என கே.பி.முனுசாமி என கூறியதாக பகிரப்படும் நியூஸ் கார்டு போலியானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
முன்னாள் பிரதமரை படுகொலை செய்த தேசத் துரோகிகளை விடுதலை செய்ய கோரும் தார்மீக உரிமை யாருக்கும் இல்லை என கே.பி.முனுசாமி பேட்டி அளித்தார் என்று பகிரப்படும் நியூஸ் கார்டு போலியானது என்பதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title:7 பேரை விடுதலை செய்ய கோர யாருக்கும் தார்மீக உரிமை இல்லை என்று கே.பி.முனுசாமி கூறினாரா?
Fact Check By: Chendur PandianResult: Altered
