
அன்வர் ராஜா அதிமுக-வில் இருந்து திமுக-விற்கு போனால் போகட்டும் இஸ்லாமியர்கள் வாக்கு அதிமுகவிற்கு தேவை இல்லை என்று அதிமுக-வின் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
ராஜேந்திர பாலாஜி புகைப்படத்துடன் புதிய தலைமுறை வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு ஒன்று ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டுள்ளது. அதில், “போனால் போகட்டும் அன்வர் ராஜா அதிமுகவில் இருந்து திமுகவிற்கு போனால் போகட்டும் இஸ்லாமியர்கள் வாக்கு அதிமுகவிற்கு தேவை இல்லை – அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த நியூஸ் கார்டை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
அதிமுக அமைப்புச் செயலாளராக இருந்த அன்வர் ராஜா தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து தி.மு.க-வில் இணைந்தார். அவருக்கு பதிலடி அளிக்கும் வகையில் இஸ்லாமியர்கள் வாக்கு அதிமுக-வுக்கு தேவையில்லை என்று அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.
இந்த நியூஸ் கார்டை பார்க்க புதிய தலைமுறை முன்பு வெளியிட்ட நியூஸ் கார்டு போல உள்ளது. தற்போது இந்த டிசைனில் புதிய தலைமுறை நியூஸ் கார்டுகளை வெளியிடுவது இல்லை. எனவே, இது போலியானதாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் ஆய்வு செய்தோம்.
உண்மைப் பதிவைக் காண: Facebook
அமைச்சராக இருந்த போது, “மோடி எங்கள் டாடி” என்றும் இஸ்லாமியர்களுக்கு எதிராகவும் பேசி பரபரப்பை ஏற்படுத்தி பின்னர் மறுப்பு தெரிவித்தவர் ராஜேந்திர பாலாஜி. எனவே, இஸ்லாமியர்கள் வாக்கு வேண்டாம் என்றெல்லாம் ஏதேனும் கருத்தைக் கூறியிருந்தாரா, செய்தி ஏதும் வெளியாகி உள்ளதா என்று தேடிப் பார்த்தோம். நமக்கு அப்படி எந்த ஒரு செய்தியும் இல்லை. எனவே, இந்த தகவல் தவறானது என்பது தெளிவானது.
அடுத்ததாக இந்த நியூஸ் கார்டு போலியானதா என்பதை அறிய ஆய்வு செய்தோம். புதிய தலைமுறை டிஜிட்டல் பொறுப்பாளரிடம் இருந்தே இந்த நியூஸ் கார்டு போலியானது, இதை புதிய தலைமுறை வெளியிடவில்லை என்று குறிப்பிட்டு நம்முடைய வாட்ஸ்அப் எண்ணுக்குப் பதிவு ஒன்று வந்தது. புதிய தலைமுறை சமூக ஊடக பக்கங்களிலும் இந்த நியூஸ் கார்டு போலியானது என்று குறிப்பிட்டுப் பதிவிட்டிருந்தனர். இவை எல்லாம் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு போலியானது, தவறானது என்பது உறுதி செய்தன.
முடிவு:
இஸ்லாமியர்களின் வாக்கு அ.தி.மு.க-வுக்கு தேவையில்லை என முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியதாக பரவும் நியூஸ் கார்டு போலியானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I X Post I Google News Channel I Instagram

Title:இஸ்லாமியர்கள் வாக்கு அதிமுக-வுக்கு தேவையில்லை என ராஜேந்திர பாலாஜி கூறினாரா?
Fact Check By: Chendur PandianResult: False
