ஸ்கூட்டர் ஓட்டி பழகிய மம்தா பானர்ஜி என்று பகிரப்படும் வீடியோ உண்மையா?

அரசியல் இந்தியா சமூக ஊடகம்

மேற்கு வங்க முதல்வர் இருசக்கர வாகனம் ஓட்ட மேற்கொண்ட பயிற்சி என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

சாலையில் தொண்டர்கள் மற்றும் போலீசார் சூழ மம்தா பானர்ஜி இருசக்கர வாகனம் ஓட்டி வரும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “தமிழ்நாட்டில் ஸ்டாலின் சைக்கிள்களில்… அங்க மம்தா மூதேவி ஸ்கூட்டர் பழகுறாளாம். அதுவும் ரோட்டில் இவ்வளவு அடியாட்கள் பாதுகாப்புடன்… நாடு வல்லரசாகிடும் ஹிந்து மீடியா” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோ பதிவை ஹிந்து மீடியா என்ற ஃபேஸ்புக் பக்கம் 2022 ஜூன் 27ம் தேதி வெளியிட்டுள்ளது. இதை பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

மம்தா பானர்ஜி இருசக்கர வாகனத்தில் அமர்ந்து பேரணி சென்ற வீடியோவை விஷமத்தனமான தகவலை சேர்த்துப் பகிர்ந்திருப்பது தெரிகிறது. 11 ஆண்டுகளாக முதலமைச்சராக அவர் உள்ளார். மாநில காவல் துறையே அவர் கீழ் இருக்கும் போது, அவர் எதற்கு அடியாட்கள் பாதுகாப்புடன் செல்ல வேண்டும்? உண்மையில் மம்தா பானர்ஜி இப்படி மக்கள் கூட்டம் உள்ள சாலையில் இருசக்கர வாகனம் ஓட்ட பழகினார் என்றால் அது மிகப்பெரிய செய்தியாக வந்திருக்கும். ஆனால் அப்படி எந்த ஒரு செய்தியும் இல்லை. எனவே, மம்தா பானர்ஜி இருசக்கர வாகனத்தில் பயணம் எதற்காக மேற்கொண்டார் என்று ஆய்வு செய்தோம்.

உண்மைப் பதிவைக் காண: hindustantimes.com I Archive

கூகுளில், “மம்தா பானர்ஜி இரு சக்கர வாகனத்தில் பேரணி” என்று ஆங்கிலத்தில் தட்டச்சு செய்து தேடினோம். அப்போது 2021ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து அவர் கொல்கத்தாவில் பேரணி சென்றார் என்று செய்திகள் கிடைத்தன. மேலும், இரு சக்கர வாகனத்தில் இருந்து தவறி விழப்பார்த்த மம்தா என்று பலரும் வீடியோ வெளியிட்டிருந்தனர்.

நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவை புகைப்படங்களாக மாற்றி ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது மம்தா பானர்ஜி வெளியிட்டது உள்ளிட்ட பல வீடியோக்கள் நமக்கு கிடைத்தன. 2021 பிப்ரவரி 25ம் தேதி மம்தா பானர்ஜி தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் நேரலையாக பேரணி சென்றதை ஒளிபரப்பியிருந்தார். அதில், பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து போராட்டம் என்று குறிப்பிட்டிருந்தார். 

நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவில் இருப்பது போன்று இருசக்கர வாகனம் மற்றும் அருகில் நீல நிற சட்டை மற்றும் ஹெல்மெட் அணிந்த நபர், கருப்புச் சட்டை அணிந்த உயரமான நபர் என அனைத்தும் ஒத்துப்போயின. இதன் மூலம் 2021ல் பெட்ரோல் விலை உயர்வைக் கண்டித்து மம்தா பானர்ஜி மேற்கொண்ட போராட்டத்தின் வீடியோவை எடுத்து, மம்தா பானர்ஜி இருசக்கர வாகனம் ஓட்ட பழகிய காட்சி என்று தவறான தகவல் சேர்த்துப் பகிர்ந்திருப்பது உறுதியாகிறது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து மம்தா பானர்ஜி இருசக்கர வாகனத்தில் பேரணியாக சென்ற வீடியோவை, இருசக்கர வாகனம் ஓட்ட பழகும் மம்தா பானர்ஜி என்று தவறான தகவல் சேர்த்து சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருவதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:ஸ்கூட்டர் ஓட்டி பழகிய மம்தா பானர்ஜி என்று பகிரப்படும் வீடியோ உண்மையா?

Fact Check By: Chendur Pandian 

Result: False