
டைம்ஸ் நவ் நடத்திய கருத்துக் கணிப்பில் அதிமுக 177 இடங்களில் வெற்றி பெறும் என்று குறிப்பிட்டதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என்று ஆய்வு செய்தோம்.
தகவலின் விவிரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive
சன் நியூஸ் தொலைக்காட்சி நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில் டைம்ஸ் நவ் கருத்துக் கணிப்பு என்று குறிப்பிட்டு தி.மு.க 49, அதிமுக 177, அமமுக 3, மற்றவை 5. டைம்ஸ் நவ் – சி ஓட்டர் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பில் தமிழகத்தில் அதிமுக கூட்டணி ஆட்சி அமைக்கும் என தகவல்…” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த பதிவை Ram Ram என்பவர் 2021 மார்ச் 29 அன்று பதிவிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
தமிழகத்தில் திமுக கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெறும் என்று டைம்ஸ் நவ் கருத்துக் கணிப்பு வெளியிட்டிருந்தது. ஆனால் இந்த நியூஸ் கார்டில் அதிமுக 177 இடங்களில் வெற்றி பெறும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. புதிதாக கருத்துக் கணிப்பு எதையும் வெளியிட்டுள்ளதா என்ற சந்தேகத்தின் அடிப்படையில் இந்த நியூஸ் கார்டை ஆய்வு செய்தோம்.
இந்த நியூஸ் கார்டில் 24 மார்ச் 2021 என்று தேதி குறிப்பிடப்பட்டு இருந்தது. இதன் மூலம் புதிய கருத்துக் கணிப்பு இல்லை, பழைய கருத்துக் கணிப்புதான் என்பது தெரிந்தது. மார்ச் 24ம் தேதி வெளியான சன் நியூஸ் தொலைக்காட்சி நியூஸ் கார்டுகளை ஆய்வு செய்தோம். அதில், திமுக கூட்டணி 177 இடங்களிலும் அதிமுக கூட்டணி 49 இடங்களில் வெற்றி பெறும் என்றும் குறிப்பிடப்பட்டு இருந்தது. இதை எடிட் செய்து மாற்றி சமூக ஊடகங்களில் பரப்பி வருவது தெரிந்தது.

அசல் பதிவைக் காண: Facebook I Archive
இதை உறுதி செய்ய டைம்ஸ் நவ் வெளியிட்ட கருத்துக் கணிப்பைத் தேடி எடுத்தோம். அதில் திமுக கூட்டணி 177 இடங்கள், அதிமுக கூட்டணி 49 இடங்களில் வெற்றி பெறும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இதற்குப் பிறகு வேறு எந்த கருத்துக் கணிப்பும் நாம் ஆய்வு செய்யும் நாள் வரையில் வெளியாகவில்லை. இது தொடர்பாக சன் நியூஸ் தமிழ் டிஜிட்டல் பிரிவு நிர்வாகி மனோஜை தொடர்புகொண்டு கேட்டபோது அவரும் இது போலியானது என்று உறுதி செய்தார்.

அசல் பதிவைக் காண: timesnownews.com I Archive
இதன் மூலம் சன் நியூஸ் தொலைக்காட்சி மார்ச் 24ம் தேதி வெளியிட்ட நியூஸ் கார்டை எடிட் செய்து பரப்பி வருவது உறுதியாகிறது. இதன் அடிப்படையில் இது எடிட் செய்யப்பட்ட போலியான நியூஸ் கார்டு என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:
டைம்ஸ் நவ் கருத்துக் கணிப்பில் அதிமுக 177 இடங்களில் வெற்றி பெறும் என்று கூறியதாக பரவும் நியூஸ் கார்டு போலியானது என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title:அதிமுக கூட்டணி 177 இடங்களில் வெற்றி பெறும் என்று டைம்ஸ் நவ் கருத்துக் கணிப்பு வெளியிட்டதா?
Fact Check By: Chendur PandianResult: Altered
