மு.க.ஸ்டாலின் வெற்றுப் பேச்சு பேசுவதாக ஜூனியர் விகடன் அட்டைப் படம் வெளியிட்டதா?

அரசியல் சமூக ஊடகம் தமிழ்நாடு

ஸ்டாலின் வெற்றுப் பேச்சு பேசுவதாக, காற்று போன பலூன் போன்று ஜூனியர் விகடன் அட்டைப் படம் வெளியிட்டதாக சமூக ஊடகங்களில் பலரும் பகிர்ந்து வருகின்றனர். இது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

ஜூனியர் விகடன் வெளியிட்டது போன்று அட்டை படம் பகிரப்பட்டுள்ளது. அதில், காற்று போன பலூன் போல ஸ்டாலின் பறப்பதாக படம் உருவாக்கப்பட்டிருந்தது. அதனுடன், “வெறும் பேச்சு! ஸ்டாலின் புஸ்ஸ்…” என்று இருந்தது. இந்த பதிவை Kanna Pandiyan Skp என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் 2022 செப்டம்பர் 2ம் தேதி பதிவிட்டுள்ளார். இவரைப் போல ஏராளமானவர்கள் இந்த படத்தை பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

ஜூனியர் விகடன் 7-9-2022 தேதியிட்ட இதழில் அண்ணாமலையை வைத்து அட்டைப்படம் வெளியிட்டிருந்தனர். அந்த அட்டைப் படத்தை எடிட் செய்து, அண்ணாமலை முகத்துக்குப் பதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் படத்தை வைத்து பா.ஜ.க முன்னணி தலைவர்களில் இருந்து தொண்டர்கள் வரை ஏராளமானவர்கள் பகிர்ந்து வருகின்றனர். ஜூனியர் விகடன் தலைப்பை அகற்றிவிட்டுப் பதிவிட்டிருந்தால் அது அவர்கள் கருத்துரிமையாக இருந்திருக்கும். ஜூனியர் விகடன் அட்டைப் படம் வெளியிட்டது போன்று சமூக ஊடகங்களில் பலரும் பகிர்ந்து வரவே அது பற்றி ஆய்வு செய்தோம்.

Archive

முதலில் 7-9-2022 தேதியிட்ட ஜூனியர் விகடன் இதழை விகடன் இணையதளத்திலிருந்து எடுத்தோம். அதில், அண்ணாமலை புஸ்ஸ் என்று கவர் ஸ்டோரி வெளியிட்டிருந்தனர். மேலும் அந்த கட்டுரை தொடர்பாக ஃபேஸ்புக்கிலும் பதிவிட்டிருந்தனர். 

அதில், “ஊதி ஊதிப் பெரிதாக்கப்படும் பலூன், நாளடைவில் காற்று இறங்கி, சுருங்கிப்போய்விடும். அதுபோலவே காற்று இறங்கி, `புஸ்ஸ்’ ஆகியிருக்கிறது பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலையின் பிம்பமும்…” என்று குறிப்பிட்டிருந்தனர். 

உண்மைப் பதிவைக் காண: vikatan.com I Archive

மேலும், இதழ் கடைகளில் விற்பனைக்கு வருவதற்கு முன்பே இது பற்றிய அறிவிப்பை சமூக ஊடகங்களில் விகடன் வெளியிட்டிருந்தது. “நாளை ஜூனியர் விகடனில்” என்று குறிப்பிட்டு ட்விட்டரில் வெளியிட்டிருந்த விளம்பரத்தை வாசகர்கள் பார்வைக்கு அளிக்கிறோம்.

Archive

நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட இந்த படம் தொடர்பாக ஜூனியர் விகடன் சமூக ஊடகப் பிரிவு பொறுப்பாளரைத் தொடர்புகொண்டு கேட்டோம். அவரும் இது போலியானது, எடிட் செய்யப்பட்டது என்று கூறினார். இதன் மூலம் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு உண்மையில்லை, எடிட் செய்யப்பட்டது என்பது உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

ஸ்டாலின் காற்று போன பலூன் என்று ஜூனியர் விகடன் அட்டைப் படம் வெளியிட்டதாக பகிரப்படும் படம் எடிட் செய்யப்பட்டது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:மு.க.ஸ்டாலின் வெற்றுப் பேச்சு பேசுவதாக ஜூனியர் விகடன் அட்டைப் படம் வெளியிட்டதா?

Fact Check By: Chendur Pandian 

Result: Altered