கன்றை கயிறு கட்டி காரில் இழுத்துச் சென்று கொன்ற பாஜக நபர்?

அரசியல் இந்தியா

ராஜஸ்தான் பா.ஜ.க நிர்வாகி ஒருவர், சாலையில் சென்ற போது குறுக்கே வந்து விழுந்து கார் ஹெட்லைட்டை உடைத்த கன்றை அடித்து, காரின் பின்னால் கயிறு கட்டி 10 கி.மீ தூரம் இழுத்துச் சென்று கொன்றதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Facebook LinkArchived Link

கார் ஒன்றின் பின்னால் கன்று ஒன்று கட்டப்பட்டுள்ளது. காரில் பாரதிய ஜனதா கட்சி சின்னத்துடன் இந்தியில் ஒரு போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “சாலையில் சென்ற போது குறுக்கே வந்து விழுந்து தன் காரின் ஹெட்லைட் உடைந்து விட்டது என்ற கோபத்தில் இளம் பசுங்கன்றை கயிறு கட்டி 10 கிலோ மீட்டர் இழுத்துச் சென்று தன் கோபத்தை தனித்து கொண்டது ராஜஸ்தான் காவி கும்பல்” என்று குறிப்பிட்டுள்ளனர்.

2018ம் ஆண்டு பிரியா பாலாஜி என்பவர் வெளியிட்ட பதிவை Anbudan RexRavi என்பவர் டிசம்பர் 1, 2019 அன்று ஷேர் செய்துள்ளார்.

Facebook LinkArchived Link

இந்த பதிவை, பிரியா பாலாஜி என்பவர் 2018 அக்டோபர் 8ம் தேதி வெளியிட்டுள்ளார். இதை பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

பசுவின் பாதுகாவலர்கள் என்று கூறிக்கொண்டு, பசுக்களை பா.ஜ.க-வினர் தாக்குகின்றனர் என்ற வகையில் பதிவு உள்ளது. அடித்து இழுத்துச் சென்றிருந்தால் கன்றின் உடலிலிருந்து ரத்தம் வழிந்திருக்கும். ஆனால் அப்படி அடிக்கப்பட்டது போல கன்றின் உடலில் எந்த ஒரு காயமும் இல்லை.

மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் உள்ள தகவல் உண்மையா, இது தொடர்பாக செய்தி ஏதும் வெளியாகி உள்ளதா என்று தேடினோம்.

படத்தை, ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடியபோது, சமூக ஊடகங்களில் இந்த படத்துடன் கூடிய பதிவு பரவி வருவது தெரிந்தது. இவற்றின் நடுவே, இந்தியில் ஒரு செய்தி நமக்கு கிடைத்தது.

Search Link 1Search Link 2

அந்த செய்தியைப் பார்த்தோம். அதில், ராஜஸ்தான் மாநில பா.ஜ.க எம்.எல்.ஏ கைலாஷ் வர்மா கன்றைக் கொன்றார் என்று சமூக ஊடகங்களில் பரவும் தகவல் அடிப்படையில் செய்தி வெளியிட்டிருந்தனர். இது குறித்து கைலாஷ் வர்மாவிடம் அவர்கள் கேட்டபோது, “படம் உண்மைதான். ஆனால், படத்துடன் பகிரப்படும் தகவல்தான் தவறானது. இந்த வாகனம் எங்கள் கட்சியைச் சார்ந்த ஒருவருக்கு சொந்தமானது. ஜெய்ப்பூரிலிருந்து பக்ரு என்ற பகுதிக்கு வரும் வழியில் சாலையில் கன்று ஒன்று இறந்து கிடந்ததைக் கண்டுள்ளனர். அழுகிய நிலையிலிருந்ததால், அதை அந்த இடத்தில் தூக்கி இறுதிச் சடங்கு செய்ய முடியவில்லை. இதனால், அருகில் பள்ளம் தோண்டி, அது வரையில் கன்றை காரில் கட்டி இழுத்து வந்து அடக்கம் செய்துள்ளனர். கன்று உடல் மிக மோசமாக அழுகி இருந்ததால் அதன் மீது உப்பு அதிக அளவில் கொட்டப்பட்டது. இது தொடர்பான மற்ற படங்களையும் உங்கள் பார்வைக்கு அனுப்புகிறேன்” என்று கூறி அனுப்பியுள்ளார்.

thelallantop.comArchived Link 1
captchanewshindi.blogspot.coArchived Link 2

அதில், கன்று காலிலிருந்து கயிறு அகற்றப்படுவது, பள்ளம் தோண்டப்படுவது, பள்ளத்தில் கன்று வைக்கப்பட்டு உப்பு கொட்டப்படுவது, மலர் தூவி அஞ்சலி செலுத்துவது என்று வரிசையாக ஐந்து ஆறு படங்கள் இருந்தன. அந்த படங்களைப் பார்க்கும்போது கன்றின் உடல் அழுகி இருந்ததைக் காண முடிந்தது. இந்த செய்தியை அவர்கள் 2018 ஜூலை 19ம் தேதி வெளியிட்டுள்ளனர்.

Archived Link

அதே நேரத்தில், ஜூலை 18ம் தேதி ஒருவர் இந்த படங்களை எல்லாம் தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்திலும் வெளியிட்டுள்ளார். காரின் பின்னால் கயிறு கட்டப்பட்டதிலிருந்து, புதைக்கப்படும் காட்சி வரை அதிலிருந்தது. “பசுவின் உடலை வைத்து அரசியல் செய்வதை நிறுத்துங்கள். எம்.எல்.ஏ-வுக்கு எதிராக பகிரப்படும் தகவல் தவறானது” அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது. தன்னை அவர் ஒரு பசு பாதுகாவலர் என்று சம்பவத்தை விலாவரியாக குறிப்பிட்டிருந்தார்.

நம்முடைய ஆய்வில்,

சாலையில் இறந்து அழுகிய நிலையிலிருந்த கன்றையே பா.ஜ.க நிர்வாகி ஒருவர் அடக்கம் செய்தார் என்று எம்.எல்.எ கூறியதுடன், அது தொடர்பான படங்களையும் அளித்துள்ளார். 

அந்த படங்களைப் பார்க்கும்போது, அழுகிய நிலையிலிருந்த கன்று அடக்கம் செய்யப்பட்டது உறுதியாகிறது.

இது தொடர்பாக பசு பாதுகாவலர் ஒருவர் தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் முழு படங்களுடன் செய்தி வெளியிட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

இந்த ஆதாரங்கள் அடிப்படையில், “காரில் மோதிய கன்று காரில் இழுத்து செல்லப்பட்டுக் கொல்லப்பட்டது” என்று பகிரப்படும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:கன்றை கயிறு கட்டி காரில் இழுத்துச் சென்று கொன்ற பாஜக நபர்?

Fact Check By: Chendur Pandian 

Result: False