தருமபுரம் ஆதீன பட்டினப்பிரவேசத்தை விமர்சிப்பவர்கள், பிஷப்பை எதிர்க்கத் துணிவிருக்கிறதா, வாட்டிக்கனில் நடக்கும் பல்லக்கு ஊர்வலத்தை நிறுத்தச் சொல்லி கூற தைரியம் உள்ளதா என்று சில படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறன. அவை பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

பா.ஜ.க பிரமுகர் வெளியிட்ட ட்வீட்டை வைத்து ஊடகம் ஒன்று வெளியிட்ட செய்தியின் தலைப்பை மட்டும் ஸ்கிரீன்ஷாட் எடுத்து பலரும் பகிருகின்றனர். அதில், "தருமபுர ஆதீன பட்டினப்பிரவேசத்தை விமர்சித்தீரே.. 'பிஷப்பை' எதிர்க்க துணிவிருக்கா? பாஜக பொளேர்" என்று தலைப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை Usha Sankar என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் 2022 மே 5ம் தேதி பதிவிட்டுள்ளார். இவரைப் போல பலரும் இதை தங்கள் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

மற்றொரு பதிவில் "வாடிகனில் கிறிஸ்துவ முறைப்படி பல்லாக்கில் உலாவரும் போப். அது அவங்களோட மத சம்பிரதாயம் அந்த நம்பிக்கையில நாம தலையிடக்கூடாது டோழர். ஐய்யையோ.. ஒரு ஆதீனத்தை பல்லக்கில் வைத்து மனிதர்கள் தூக்குவதா?? இந்து மதத்தில் இந்த கொடுமை எல்லாம் நடக்குது.. மூடநம்பிக்கை.. இத நாங்க நடக்க விடவே மாட்டோம்..” என்று இருந்தது. இந்த பதிவை Veerappan Naga என்ற ஐடி கொண்டவர் 2022 மே 6ம் தேதி பதிவிட்டுள்ளார்.

உண்மை அறிவோம்:

தருமபுர ஆதீனம் பல்லக்கில் மனிதர்கள் சுமக்க பட்டினபிரவேசம் செய்ய தடை விதிக்கப்பட்டது. அதற்கு பதில் சாரட் அல்லது மோட்டார் வாகனத்தில் பட்டனபிரவேசம் செய்யலாம் என்று எதிர்ப்பாளர்கள் தரப்பில் யோசனை வழங்கப்பட்டது. ஆனால், பல்லக்கை சுமந்தே தீருவோம் என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பலரும் இதற்கு கண்டனம் பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில், "கிறிஸ்தவர்கள் தங்களுடைய பிஷப்களை பல்லக்கில் சுமந்து செல்கின்றனர். அவர்களை எதிர்த்து கேள்வி கேட்க தைரியம் உள்ளதா" என்ற வகையில் பா.ஜ.க-வினர் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவுக்கு பதில் அளித்த பலரும், கிறிஸ்தவர்களை மகிழ்விக்கத்தான் தமிழ்நாடு அரசு இப்படி ஒரு உத்தரவைப் பிறப்பித்தது என்ற வகையில் விமர்சித்துப் பதிவிட்டு வருகின்றனர். எனவே, உண்மையில் தற்போது கிறிஸ்தவர்கள் இப்படி பிஷப்களை பல்லக்கில் வைத்து ஊர்வலமாக செல்கிறார்களா என்று ஆய்வு செய்தோம்.

Archive

படத்தில் இருப்பது பிஷப் அல்ல... முன்னாள் போப் ஆவார். தற்போது போப் ஆக இருப்பவர் பிரான்சிஸ். நாம் ஆய்வுக்கு உள்ள பதிவில் நாராயணன் திருப்பதி என்ற பாஜக பிரமுகர் வெளியிட்டிருந்த ட்வீட்டை தேடி எடுத்தோம். அதில் அவர் மூன்று படங்களை வெளியிட்டிருந்தார். "தருமபுர ஆதீன பட்டினப்பிரவேசத்தை விமர்சித்த ஸ்டாலின், திருமாவளவன் போன்றோருக்கு இதை பிற்போக்குத்தனம் என்று கூற துணிவுள்ளதா? பல்லக்கு தூக்குபவர்களை அடிமைகள் என்று விமர்சிப்பார்களா? கலாச்சார சீர்கேட்டை நோக்கியே இவர்களின் ஹிந்து விரோத சிந்தனை. அனைத்தும் ஓட்டுக்காக! பதவிக்காக!" என்று குறிப்பிட்டிருந்தார். அவர் குறிப்பிட்டது போன்று இந்த படங்கள் தற்போது எடுக்கப்பட்டது இல்லை. பல ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்டது. படத்தில் இருக்கும் போப்புகள் இறந்து பல காலம் ஆகிவிட்டன நிலையில் தற்போதும் போப்புகள் மனிதன் தூக்கிச் செல்லும் பல்லக்கில் அமர்ந்து செல்வது போன்று தவறான தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளார். எனவே, இந்த படம் பற்றி ஆய்வு செய்தோம்.

உண்மைப் பதிவைக் காண: americamagazine.org I Archive

படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். மூன்று படங்களிலும் இருப்பது போப் 6ம் பால் என்று தெரிந்தது. இந்த படங்களை கேத்லிக் பிரஸ் போட்டோ என்ற ஊடகம் வெளியிட்டுள்ளது. எப்போது எடுக்கப்பட்டது என்று தேதி தெரியவில்லை என்று குறிப்பிட்டிருந்தது. இதனால் ஆறாவது பாலின் காலம் என்ன என்று பார்த்தோம். இவர் போப்பாக 1963ம் ஆண்டு ஜூன் 21ம் தேதி பதவியேற்றார். 1978 ஆகஸ்ட் 6ம் தேதி உயிரிழந்தார் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதன் மூலம் இந்த புகைப்படம் 44 ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்டது என்பது உறுதியானது.

உண்மைப் பதிவைக் காண: vatican.va I Archive

தற்போது போப்பாக இருப்பவர்கள் மனிதனை மனிதனே சுமக்கும் பல்லக்கில் வலம் வருகிறார்களா என்று தேடிப் பார்த்தோம். தற்போது மனிதனை மனிதனே சுமக்கும் பல்லக்கு எதுவும் பயன்படுத்தப்படுவதாகத் தகவல் கிடைக்கவில்லை. போப் பயன்படுத்தும் பல்லக்கிற்கு "Sedia gestatoria" என்று பெயர். கடைசியாக இதை போப் முதலாம் ஜான் பால் பயன்படுத்தினார் என்று தகவல் கிடைத்தது. அவரும் கூட இதைப் பயன்படுத்த முதலில் தயங்கினார். வாடிக்கன் நகரில் (நாடு) மக்கள் அனைவரும் பார்க்க உயரமான பல்லக்கு வசதியாக இருக்கும் என்பதால் இதை அவர் ஏற்றுக்கொண்டார். அதன் பிறகு வந்த இரண்டாம் ஜான் பால் பல்லக்கில் ஏற மறுத்துவிட்டார். அதன் பிறகு வந்த 16ம் பெனடிக்ட், பிரான்சிஸ் என யாரும் பல்லக்கைப் பயன்படுத்தவில்லை என்று தகவல் கிடைத்தது.

உண்மைப் பதிவைக் காண: smithsonianmag.com I Archive 1 I cnn.com I Archive 2

பல்லக்குக்கு பதில் மோட்டார் வாகனத்தை அவர்கள் பயன்படுத்தி வருகின்றனர் என்றும் செய்திகள் கிடைத்தன. மேலும், போப்கள் பயன்படுத்திய பல்லக்கு ரோம் நகரில் உள்ள அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கும் செய்திகளும், படங்களும் நமக்கு கிடைத்தன. இதன் மூலம், கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் தங்கள் போப்பை பல்லக்கில் வைத்து தற்போது சுமப்பது இல்லை என்பது உறுதியாகிறது. பல்லக்கில் சுமக்கும் முறை ஒழிக்கப்பட்டு 40 ஆண்டுகளுக்கு மேல் ஆவதும் உறுதியாகி உள்ளது.

இந்த சூழலில், கிறிஸ்தவர்கள் தற்போதும் பல்லக்கில் பவனி வருவது போன்று தவறாக சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். தற்போதும் போப் மனிதனை மனிதனே சுமக்கும் பல்லக்கில் பவனி செல்கிறார் என்றால் அதை கண்டித்தீர்களா என்று கேட்பதில் நியாகம் இருக்கும். 44 ஆண்டுகளுக்கு முன்பு நிறுத்தப்பட்ட விஷயத்துக்கு இப்போது கண்டனம் தெரிவிப்பதும், அந்த முறையை நிறுத்தச் சொல்லி கேட்பதும் எந்த வகையில் நியாயம் என்று தெரியவில்லை.

நம்முடைய ஆய்வில், போப் புகைப்படம் 1978க்கு முன்பு எடுக்கப்பட்டது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 1978க்குப் பிறகு அதாவது புனித 2ம் ஜான் பால் பதவியேற்றதில் இருந்து தற்போது பிரான்சிஸ் வரையில் யாரும் பல்லக்கை பயன்படுத்தவில்லை என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. 40 ஆண்டுகளுக்கு முன்பே கிறிஸ்தவம் கைவிட்ட விஷயத்தை இப்போது தடை விதிக்கப்பட்ட பட்டினபிரவேசத்துடன் தொடர்புபடுத்தி விஷமத்தனமாக பகிர்ந்திருப்பது உறுதியாகிறது.

முடிவு:

போப் பல்லக்கை பயன்படுத்தும் முறையானது 1978ம் ஆண்டில் ஒழிக்கப்பட்டுவிட்டது என்பதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:வாடிகனில் மனிதனை மனிதன் தூக்கும் பல்லக்கில் போப் பவனி வருகிறாரா?

Fact Check By: Chendur Pandian

Result: Missing Context