FACT CHECK: தி.மு.க ஆட்சியில் மதுரையில் பெண்களுக்கு தனி பார் திறக்கப்பட்டதா?
தி.மு.க ஆட்சியில் பெண்களுக்கு என்று தனியாக மது பார் திறக்கப்பட்டது என்று சமூக ஊடகங்களில் சிலர் பதிவிட்டு வருகின்றனர். இது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
அசல் பதிவைக் காண: Facebook I Archive
பெண் ஒருவர் மது அருந்தும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், "தமிழ் வளர்த்த மதுரையில் பெண்களுக்காக தனி பார் அமைத்து விடியல் சாதனை" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த பதிவை Balachandar Nagarajan என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்ட நபர் 2021 டிசம்பர் 4ம் தேதி பதிவிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
தமிழ்நாடு அரசு டாஸ்மாக் நிறுவனம் மூலமாகத் தமிழகத்தில் மது விற்பனை செய்யப்படுகிறது. டாஸ்மாக் நிறுவனமே மது பார் நடத்துவதற்கான உரிமத்தையும் வழங்குகிறது. இந்த சூழலில் தமிழகத்திலேயே முதன் முறையாக மதுரையில் பெண்களுக்கு என்று தனியாக பார் திறக்கப்பட்டது என்று பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
மதுரையில் பெண்களுக்கு எனத் தனியாக பார் திறக்கப்பட்டதாகப் பல ஆண்டுகளாக சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இந்த சூழலில் தி.மு.க ஆட்சி அமைந்த பிறகு பார் அமைக்கப்பட்டது என்று கூறப்படவே இது பற்றி ஆய்வு செய்தோம்.
முதலில், இது தொடர்பாக செய்தி ஏதும் வெளியாகி உள்ளதா என்று பார்த்தோம். அப்படி எதுவும் செய்தி நமக்குக் கிடைக்கவில்லை. சமூக ஊடகங்களில் பலரும் ஏதோ ஒரு அச்சு ஊடகம் வெளியிட்ட செய்தியை புகைப்படம் எடுத்து பகிர்ந்து வருவதைக் காண முடிந்தது. அதில், "மதுரை விஷால் தி மாலில் பெண்கள் மது அருந்த சிறப்பு வசதிகளுடன் மதுபார் துவங்கப்பட்டது" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. டிசம்பர் 1ம் தேதி இந்த செய்தி வெளியானதாக இருந்தது. எந்த டிசம்பர் 1 என்று வருடத்தைக் குறிப்பிடவில்லை.
பாஜக நிர்வாகியும் சினிமா பிரபலமுமான காயத்ரி ரகுராம் கூட இந்த படத்தை பதிவிட்டு, தி.மு.க அரசுக்கு எதிராக காட்டாமான கேள்வியை எழுப்பியிருந்தார். அதில், அந்த செய்தி மாலை முரசு மாலை நாளிதழில் வெளியானதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
தொடர்ந்து தேடிய போது, 2019ம் ஆண்டு இந்த செய்தி கிளிப் படத்தை ஒரு ஃபேஸ்புக் பக்கம் பகிர்ந்திருந்தது. 2019ம் ஆண்டு பகிரப்பட்ட செய்தியை வைத்து இப்போது செய்தி வெளியானது போல பலரும் பகிர்ந்து வருவது இதன் மூலம் தெரியவந்தது.
அசல் பதிவைக் காண: Facebook
முன்பும் இதே இடத்தில்தான் பார் திறக்கப்பட்டது என்று செய்தி வெளியாகி இருந்தது. எனவே. அது தொடர்பான செய்தியைத் தேடி எடுத்தோம். 2016ம் ஆண்டு தினமலர் வெளியிட்டிருந்த செய்தி நமக்கு கிடைத்தது.
அந்த ரெஸ்டாரண்டின் பொது மேலாளர் வீர ராஜேஷ் இது குறித்து கூறுகையில், "இது தொடர்பாக, வெளியான விளம்பரத்தில் டிரிங்க்ஸ் என குறிப்பிடப்பட்டுள்ளது. டிரிங்க்சிற்கு ஆல்கஹால் மட்டும் அர்த்தம் இல்லை. குடிப்பது அனைத்தும் டிரிங்க்ஸ்தான். மாக்டெயில், ஜூஸ் இப்படி எல்லாமே டிரிங்க்ஸ் வகையில்தான் வரும். குறிப்பிட்ட நேரத்தில் பெண்கள் வந்தால் அவர்களுக்கு இவ்வளவு இலவசம் என விளம்பரப்படுத்தியுள்ளோம். பெண்கள் தனியா வரமாட்டார்கள். தங்களது குழந்தை, குடும்பத்தினர் என அனைவரையும் அழைத்து வரவே விருப்பப்படுவார்கள். இதனால் தான் அந்த விளம்பரம்" என்று கூறியதாக குறிப்பிட்டிருந்தனர்.
அசல் பதிவைக் காண: dinamalar.com I Archive
தினமலரில் அந்த ரெஸ்டாரண்டின் விளம்பரமும் வெளியாகி இருந்தது. புதன் கிழமைகளில் இரவு 7 மணி முதல் 9 மணி வரை மட்டுமே இந்த சலுகை என்று குறிப்பிட்டிருந்தனர். பெண்களுக்கு தனியாக மது அருந்த பார் திறந்தார்கள் என்றால், வாரத்துக்கு ஒரே ஒரு நாள் அதவும் இரண்டு மணி நேரம் மட்டும் திறந்திருக்கும் என்று கூற மாட்டார்கள். இதன் மூலம் டாஸ்மாக் பார் திறக்கப்பட்டது என்ற வகையில் பரப்பப்படும் தகவல் தவறானது என்று தெரிகிறது.
அசல் பதிவைக் காண: asianetnews.com I Archive 1 I tamilmurasu.com.sg I Archive 2
இதே செய்தி 2019ம் ஆண்டும் வெளியாகி இருந்தது. தற்காலிகமாக தொடங்கப்பட்டுள்ளது. இதனால் மதுரைக்கு இழுக்கு என்று எல்லாம் செய்திகள் வெளியாகி இருந்தன. இப்போது, அதே கட்டிங் செய்தியை எடுத்து வந்து தி.மு.க ஆட்சியில் தொடங்கப்பட்டுவிட்டது என்று குறிப்பிட்டு பகிர்ந்து வருகின்றனர்.
உண்மையில் இது டாஸ்மாக் பார் இல்லை. எல்லா வகையான பானங்களும், ஜுஸ் விற்பனை செய்யப்படும் கடை என்று குறிப்பிட்டுள்ளனர். தமிழக அரசே டாஸ்மாக் பார் திறந்துவிட்டது போன்று தவறான செய்தியை பகிர்ந்து வருகின்றனர்.
உண்மையில் பார் எதையும் தமிழக அரசு திறந்துள்ளதா, திறக்க உள்ளதா என்பதை அறிய தமிழ்நாடு அமைச்சர் செந்தில் பாலாஜியை தொடர்புகொள்ள முயற்சி செய்தோம். அவருடைய அலைபேசி எண் சுவிட் ஆஃப் செய்யப்பட்டதாகவே பல முறையும் பதில் வந்தது. எனவே, அமைச்சரின் அலுவலகத்தைத் தொடர்புகொண்டு பேசினோம்.
நம்மிடம் பேசிய அமைச்சரின் மூத்த உதவியாளர், ‘’அப்படி எதுவும் அறிவிப்பு வெளியாகவில்லை. சமூக ஊடகங்களில் பரவும் வதந்தி தொடர்பாக அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு செல்கிறேன். அவர் உங்களுக்கு பதில் அளிப்பார்" என்றார். அதன் பிறகும் அமைச்சரைத் தொடர்புகொள்ள முடியவில்லை. அமைச்சர் பதில் அளித்தால் அதை வெளியிட தயாராக உள்ளோம்.
பெண் மது அருந்தும் புகைப்படம் எப்போது எடுக்கப்பட்டது என்று பார்த்தோம். இந்த படத்தை 2019ம் ஆண்டு தினமணி தன்னுடைய கட்டுரை ஒன்றில் பயன்படுத்தியிருப்பது தெரிந்தது. இதன் மூலம் செய்தி மற்றும் படம் இரண்டும் விஷமத்தனமானது என்று உறுதியாகிறது.
அசல் பதிவைக் காண: dinamani.com I Archive
நம்முடைய ஆய்வில், மதுரையில் பெண்களுக்கு என்று தனியாக பார் திறக்கப்பட்டது என்று 2016ம் ஆண்டில் இருந்து பரவி வரும் தவறான தகவலை 2021ல் மீண்டும் விஷமிகள் சமூக ஊடகங்களில் பரப்பி வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. பெண்களுக்கு என்று டாஸ்மாக் சார்பில் பார் எதுவும் திறக்கப்படவில்லை என்று உறுதியாகி உள்ளது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதிசெய்யப்படுகிறது.
முடிவு:
திமுக ஆட்சியில் மதுரையில் பெண்களுக்கு என பிரத்தியே மது பார் திறக்கப்பட்டது என்று பகிரப்படும் தகவல் தவறானது என்பதை ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…Facebook I Twitter I Google News Channel
Title:தி.மு.க ஆட்சியில் மதுரையில் பெண்களுக்கு தனி பார் திறக்கப்பட்டதா?
Fact Check By: Chendur PandianResult: False