
கரூரில் ஜோதிமணி நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.90 லட்சத்திற்கு கழிப்பறை கட்டப்பட்டுள்ளது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
புதிதாக கட்டப்பட்ட கட்டிடம் ஒன்றின் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “கரூரில் ஜோடிமணி எம்.பி நிதியில் கட்டப்பட்ட பொதுக்கழிவறை! அதுக்கு என்னன்னு கேக்குறீங்களா? செலவு ஜஸ்ட் 90 லட்ச ரூபாய்தான்!” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை Sujatha Rkb என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்ட நபர் 2022 ஜூலை 2ம் தேதி பதிவிட்டுள்ளார்.

உண்மைப் பதிவைக் காண: Twitter I Archive
இதே போன்று ட்விட்டரில் தினேஷ் கிருஷ்ணமூர்த்தி 🇮🇳 diMO என்ற ஐடி கொண்ட நபர் இதே போன்று பதிவிட்டுள்ளார். அதில், “நீங்க வேணும்னா 3 லட்சத்துல வீடு கட்டலாம்! நம்ம கரூர் ஜோதிமணி அக்கா MP நிதியில் வெறும் ரூ.90.0000 (90 லட்சம் ரூபாயில்) கட்டப்பட்ட கழிவறை.
அடேங்கப்பா , இதுதான் சாதனை” என்று குறிப்பிட்டிருந்தார். இதையும் பலரும் லைக் செய்து, ரீட்வீட் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
கரூரில் ஜோதிமணி எம்.பி-யின் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.90 லட்சத்தில் கழிப்பறை கட்டப்பட்டுள்ளது என்று சமூக ஊடகங்களில் பலரும் பகிர்ந்து வருகின்றனர். அந்த கழிப்பறையைப் பார்த்தால் அவ்வளவு செலவாகியிருக்க வாய்ப்பு இல்லை. எனவே, உண்மை என்ன என்று ஆய்வு செய்தோம்.
ரூ.90 லட்சத்தில் கழிப்பறை கட்டப்பட்டதா என அறிய முதலில் ஜோதிமணி ட்விட்டர் பக்கத்தை பார்வையிட்டோம். அப்போது நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவில் உள்ள புகைப்படத்துடன் கூடிய கடந்த ஜூலை 2, 2022 அன்று ஜோதிமணி வெளியிட்டிருந்த ட்வீட் பதிவு கிடைத்தது. அதில், “மாண்புமிகு தமிழக முதல்வர் @mkstalin அவர்களால் இன்னும் சிறிது நேரத்தில் திறப்புவிழா செய்யப்பட இருக்கும், கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து மேற்கொள்ளப்பட்ட பணிகளில் சில” என்று குறிப்பிட்டிருந்தார். எவ்வளவு மதிப்பில் இந்த கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன என்று அவர் குறிப்பிடவில்லை.
அதில் உள்ள படங்களைப் பார்த்தோம். ஒரு மாடியுடன் கட்டப்பட்ட தாந்தோன்றிமலை அரசு கலைக்கல்லூரி கட்டிடத்தில் மதிப்பீடு ரூ. 32.10 லட்சம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. நெரூர் என்ற இடத்தில் கட்டப்பட்ட கட்டிடத்திற்கான மதிப்பு ரூ.17.00 லட்சம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவும் சின்னதாராபுரம் பகுதியில் கட்டப்பட்ட கழிப்பறையாகும். அதன் மதிப்பு ரூ.9.00 என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த கட்டிடத்திற்கு மட்டும் இரண்டு படங்களை அவர் பதிவிட்டிருந்தார். முதல் படத்தில் 9.00 லட்சம் என்பது சரியாகத் தெரியவில்லை. அதாவது 9க்கு பிறகு புள்ளி சரியாக தெரியவில்லை. இரண்டாவது படத்தில் 9.00 லட்சம் என்பது தெளிவாகத் தெரிகிறது.
தங்களுக்கு சௌகரியமாக, தெளிவாக இல்லாத படத்தை எடுத்து தவறான தகவல் சேர்த்து பகிர்ந்திருப்பது தெரிகிறது. அதாவது , ரூ.9 லட்சத்தில் கட்டப்பட்ட கட்டிடத்தை ரூ.90 லட்சத்தில் கட்டப்பட்டது என்று தவறாக குறிப்பிட்டுள்ளனர். 9.00 என்று உள்ளதை எதன் அடிப்படையில் 90 லட்சம் என்று மாற்றினார்கள் என்று தெரியவில்லை. அதில் உள்ள ஒன்பதுக்கு பிறகு வரும் புள்ளி சரியாக தெரியவில்லை என்றால் கூட 900 லட்சம் என்றாவது குறிப்பிட்டிருக்க வேண்டும். அப்படி கூறினால் சிரித்துவிடுவார்கள் என்பதால் விஷமத்தனமாக 90 லட்சம் என்று குறிப்பிட்டு சமூக ஊடகங்களில் வதந்தி பரப்பியிருப்பது தெரிந்தது.

9 லட்சத்தில் கட்டப்பட்டது என்று படம் தெளிவாக கூறும் போது, 90 லட்ச ரூபாயில் கழிப்பறை கட்டப்பட்டுள்ளது என்று விஷமத்தனமாக பகிர்ந்துள்ளனர். இது தொடர்பாக கருத்தறிய ஜோதிமணி எம்.பி-யை தொடர்புகொள்ள முயற்சி செய்தோம். அவருக்கு சமூக ஊடகங்களில் பரவும் பதிவின் ஸ்கிரீன்ஷாட்டை அனுப்பிவைத்தோம். ஆனால் அவர் எந்த பதிலும் நமக்கு அளிக்கவில்லை. அவர் பதில் அளித்தால் அதைப் பதிவிடத் தயாராக உள்ளோம்.
முடிவு:
கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.9 லட்சத்தில் கட்டப்பட்ட கழிப்பறையின் படத்தை எடுத்து ரூ.90 லட்சத்தில் கட்டப்பட்ட கழிப்பறை என்று தவறான தகவலை சமூக ஊடகங்களில் சிலர் பகிர்ந்து வருவதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel
