FACT CHECK: திபெத்தில் கண்டெடுக்கப்பட்ட 201 வயது துறவியின் உடல் அருகே மோடி பற்றிய குறிப்பு என்று பரவும் வதந்தி!

அரசியல் | Politics இந்தியா | India சமூக ஊடகம் | Social

திபெத் குகையில் 200 வயதான புத்தமத துறவி ஒருவரின் உடல் கண்டெடுக்கப்பட்டதாகவும், அவர் அருகில் பிரதமர் மோடி பற்றிய குறிப்புகள் இருந்ததாகவும் ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive

புத்தமத துறவி ஒருவரின் உடலை சிலர் பிடித்திருக்கும் படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இந்த புத்த துறவி யின் வயதை 201 ஆண்டுகளாம்…அன்மையில் திபெத் மலை குகை ஒன்றில் இவரின் உடல் கண்டு பிடிக்க பட்டது. முதலில் இவரை உயிரற்ற மம்மீ என்று நினைத்தார் கள்…பிறகு மூச்சு இருப்பது கண்டு பிடித்து வெளியில் கொண்டு வரப்பட்டார்…அதை விட முக்கியமாக அவரிடம் பல எழுத்து பூர்வமான குறிப்பு கள் இருந்தனவாம்… அவற்றில் “மோதி என்ற வீரர் வருவார் ” என்று பல குறிப்பு களில் எழுதி வைத்திருந்த தாம்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. 

இந்த பதிவை Narayanan G என்பவர் 2021 நவம்பர் 26ம் தேதி பதிவிட்டிருந்தார். இவரைப் போல பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

திபெத் மலைக் குகையில் புத்தமத துறவி உடல் கிடைத்தது, அவர் அருகில் பிரதமர் மோடி பற்றிய குறிப்பு இருந்தது என்று நிலைத்தகவலில் உள்ள தகவல் ஏதோ நகைச்சுவைக்காக வெளியிட்டிருக்கிறார்கள் என்று முதலில் எண்ணத் தோன்றியது. ஆனால், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இதை ஷேர் செய்துள்ளனர், பா.ஜ.க ஆதரவு ஃபேஸ்புக் குழுக்களில் எல்லாம் இந்த பதிவு ஷேர் செய்யப்பட்டிருக்கிறது. பலரும் அருமை என்று எல்லாம் கருத்து பதிவிட்டு வரவே, இவர்கள் இது உண்மை என்று கருதி ஷேர் செய்கிறார்களா, அல்லது வேடிக்கைக்கு ஷேர் செய்திருக்கிறார்களா என்று புரியாமல் குழம்பிப் போனோம்.

முன்பு இதே படத்துடன் தாமரை மலராது என்று குறிப்பு இருந்தது என்று நையாண்டி பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டிருந்தது. அதைப் பார்த்ததுமே நையாண்டிக்காக வெளியிட்டிருக்கிறார்கள் என்று தெரிந்ததால் அது பற்றி ஃபேக்ட் செக் செய்யவில்லை. ஆனால், தற்போது, உண்மையில் துறவி உடல் கிடைத்தது என்றும், அவர் அருகில் மோடி பற்றிய குறிப்பு இருந்தது என்றும் குறிப்பிட்டு, பலரும் “அருமை”, “ஜெய் ஹிந்த்”, “பாரத் மாதா கி ஜே” என்று பதிவிட்டு வரவே இது பற்றி ஆய்வு செய்தோம்.

படத்தில் உள்ளவர்களைப் பார்க்கும் போது தாய்லாந்து, கம்போடியா போன்ற நாடுகளைச் சார்ந்தவர்களைப் போலத் தெரிந்தனர். மேலும், படத்தில் உள்ள நபரின் சட்டையில் தாய் மொழியில் எழுதப்பட்டது போல உள்ளது. எனவே, இந்த புகைப்படம் எங்கு, எப்போது எடுக்கப்பட்டது என்று ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, இந்த புகைப்படம் தாய்லாந்து நாட்டில் சில ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்டது என்று தெரியவந்தது.

அசல் பதிவைக் காண: thesun.co.uk I Archive 1 I timesnownews.com I Archive 2

தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த புத்த மத துறவி லுவாங் போர் பியான் 2017ம் ஆண்டு நவம்பர் 16ம் தேதி தன்னுடைய 92வது வயதில் உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் உயிரிழந்தார். அவரது உடல் பதப்படுத்தப்பட்டு சவப்பெட்டியில் வைக்கப்பட்டது. இரண்டு மாதங்கள் கழித்து, புத்த மத முறைப்படி இறுதிச் சடங்குகள் செய்ய அவரது உடல் சவப்பெட்டியில் இருந்து வெளியே எடுக்கப்பட்டது. அப்போதும் அவரது முகம் சிரித்த முகத்துடன் இருந்துள்ளது. மறைந்த துறவிக்கு புதிய ஆடை அணிவித்து, சிரித்தபடி இருக்கும் அவரை புகைப்படம் எடுத்தனர் என்று செய்திகள் கிடைத்தன. 

இதன் மூலம் திபெத்தில் 201 ஆண்டுகளாக குகையில் வாழ்ந்து வரும் புத்தமத துறவியின் அருகில் இருந்து பிரதமர் மோடி தொடர்பான குறிப்பு கிடைத்தது என பகிரப்படும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

திபெத்தில் கிடைத்த புத்த மத துறவியின் உடல் அருகே பிரதமர் மோடி பற்றிய குறிப்புகள் இருந்தது என்று பகிரப்படும் பதவு தவறானது என்பதை தகுந்த ஆதாரங்கனுடன் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:திபெத்தில் கண்டெடுக்கப்பட்ட 201 வயது துறவியின் உடல் அருகே மோடி பற்றிய குறிப்பு என்று பரவும் வதந்தி!

Fact Check By: Chendur Pandian 

Result: False