கர்நாடக பாடப்புத்தகங்களில் சாவர்க்கர் பாடம் நீக்கப்படும் என்று டி.கே.சிவக்குமார் அறிவித்தாரா?
கர்நாடக அரசு பாடப் புத்தகங்களிலிருந்து சாவர்க்கர் பாடங்கள் கிழித்து எறியப்படும் என்று கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் கூறியதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
கர்நாடக காங்கிரஸ் கட்சித் தலைவர் புத்தகம் ஒன்றை கிழிக்கும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், கர்நாடக பாடப்புத்தகங்களில் இனி சாவர்க்கர் பாடம் கிழித்து எறியப்படும். - டி.கே.சிவக்குமார்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோ பதிவை Aravind Raja என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் 2023 மே 17ம் தேதி பதிவிட்டுள்ளார். இவரைப் போல பலரும் இந்த வீடியோவை பகிர்ந்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
கர்நாடக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. யார் அடுத்த முதல்வர் என்ற போட்டி நடந்து வந்த சூழலில், அம்மாநில காங்கிரஸ் தலைவர் பாடப்புத்தகங்களிலிருந்து சாவர்க்கர் பற்றிய பாடங்கள் கிழித்து எறியப்படும் என்று கூறியது போன்று பலரும் பதிவிட்டு வருகின்றனர். இது பற்றி ஆய்வு செய்தோம்.
உண்மைப் பதிவைக் காண: timesnownews.com I Archive
வீடியோவை புகைப்படங்களாக மாற்றி கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, கடந்த 2022ம் ஆண்டு இது தொடர்பாக செய்திகள், வீடியோக்கள் வெளியாகி இருப்பதை காண முடிந்தது. பிசினஸ் ஸ்டாண்டர்ட் வெளியிட்ட செய்தியைப் பார்த்தோம். அதில், "கர்நாடக அரசு (அப்போதைய பாஜக அரசு) பாடத் திட்டத்தை திருத்தி கலாச்சார அட்டூழியம் செய்துள்ளது. திருத்தப்பட்ட பாடப்புத்தகங்களைக் குப்பையில் போடுங்கள்" என்று ஆவேசமாக பேசினார் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
யூடியூபில் நமக்கு கிடைத்த வீடியோக்களை, கன்னடம் தெரிந்த பத்திரிகையாளர் ஒருவருக்கு அனுப்பி, சாவர்க்கர் தொடர்பான பாடப் பகுதிகள் குப்பையில் போடப்படும் என்று டி.கே.சிவக்குமார் கூறியுள்ளாரா என்று கேட்டோம். வீடியோவை பார்த்துவிட்டு, அவர்கள் டி.கே.சிவக்குமார் எதையும் பேசவில்லை. பாடத்திட்டத் திருத்தங்களுக்குப் பல தரப்பில் இருந்து எதிர்ப்பு வந்துள்ளது. இந்த திருத்தங்களைக் குப்பையில் போட வேண்டும் என்பது போல அவர் பேசினார் என தெரிவித்தார்.
நம்முடைய தேடலில், கர்நாடக பாட புத்தக திருத்தங்களுக்கு டி.கே.சிவக்குமார் எதிர்ப்பு தெரிவித்ததாக வெளியான வீடியோக்கள், செய்திகள் கிடைத்துள்ளன. சாவர்க்கர் பற்றிய பாடம் கிழித்து எறியப்படும் என்று சிவக்குமார் கூறியதாக எந்த தகவலும் இல்லை. மேலும் இது சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்கு முன்பு எடுக்கப்பட்ட வீடியோ. இதன் அடிப்படையில் பழைய வீடியோவை எடுத்து தவறான தகவல் சேர்த்துப் பகிர்ந்திருப்பது உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
கர்நாடக தேர்தலில் வெற்றி பெற்றதும் பள்ளி பாட புத்தகங்களில் இருந்து சாவர்க்கர் பற்றிய பாடம் அகற்றப்படும் என்று அம்மாநில காங்கிரஸ் தலைவர் சிவக்குமார் அறிவித்ததாக பரவும் தகவல் தவறானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel
Title:கர்நாடக பாடப்புத்தகங்களில் சாவர்க்கர் பாடம் நீக்கப்படும் என்று டி.கே.சிவக்குமார் அறிவித்தாரா?
Fact Check By: Chendur PandianResult: False