ஹாலந்தில் ஆரஞ்சு பழத்தில் விநாயகர் சிலை செய்து விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டதா?
ஹாலந்து நாட்டில் ஆரஞ்சு பழத்தை வைத்து பிரம்மாண்ட விநாயகர் சிலையை உருவாக்கி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
ஆரஞ்சு பழத்தில் பிரம்மாண்ட விநாயகர் சிலை உருவாக்கப்பட்டுள்ளது. அதை வெளிநாட்டில் புகைப்படம் எடுப்பது போன்று வீடியோ பகிரப்பட்டுள்ளது. பின்னணியில் இந்தி பாடல் ஒலிக்கிறது. நிலைத் தகவலில், "உலகெங்கும் உன் அரசாட்சியே! ஆரஞ்சு தலைநகரம் என்று அழைக்கப்படும் ஹாலந்தில் ஆரஞ்சு பழங்களால் விநாயகர் வடிவமைக்கப்பட்டு விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த பதிவை சித்தர் நெறி என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் Sathiya Narayanan என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் 2022 செப்டம்பர் 4ம் தேதி பதிவிட்டுள்ளார். இதை பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
வெளிநாட்டினரும் நம்முடைய மதத்தை, பண்பாட்டை ஏற்றுக்கொண்டார்கள் என்று காட்ட சமூக ஊடகங்களில் அவ்வப்போது வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. ஹாலந்தில் ஆரஞ்சு பழத்தால் விநாயகர் சிலையை உருவாக்கி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது என்று பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வரவே, அது உண்மையா என்று ஆய்வு செய்தோம்.
இந்த வீடியோவை புகைப்படங்களாக மாற்றி கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ ஆங்கிலம் உள்பட பல ஃபேக்ட் செக் ஊடகங்கள் ஆங்கிலத்தில் இது தொடர்பாக உண்மை கண்டறியும் ஆய்வு செய்திருப்பது தெரியவந்தது. அவற்றை ஒதுக்கிவிட்டு, தொடர்ந்து தேடினோம். அப்போது, நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவில் இருப்பது போன்று விநாயகர் சிலை படம் ஒன்று நமக்குக் கிடைத்தது.
உண்மைப் பதிவைக் காண: gettyimages.in I Archive
gettyimages.in என்ற இணையதளத்தில் நமக்கு அந்த புகைப்படம் கிடைத்தது. அந்த இணைய தளம் அந்த அந்த விநாயகர் படத்தை விற்பனைக்காக வைத்திருந்தது. அதில், 2018 பிப்ரவரி 15ம் தேதி இந்த புகைப்படம் எடுக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது. 2018ம் ஆண்டு பிரான்ஸ் நாட்டில் நடந்த எலுமிச்சை மற்றும் ஆரஞ்சு பழ திருவிழாவில் பாலிவுட் தீம் என்ற அடிப்படையில் உருவாக்கப்பட்ட பிரம்மாண்ட விநாயகர் சிலை என்று குறிப்பிட்டிருந்தனர். விநாயகர் சிலையுடன் தாஜ்மஹால், சைக்கிள் ரிக்ஷா, யானை என பல உருவங்கள் உருவாக்கப்பட்டிருந்தன. நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவில் உள்ளது போன்று விநாயகர் சிலை மற்றும் சுற்றுப்புறச் சூழல் என அனைத்தும் பொருந்திப் போயின.
இதில் உள்ள கீ வார்த்தைகளைப் பயன்படுத்தித் தேடிய போது reuters.com உள்ளிட்ட பல சர்வதேச ஊடகங்களில் இந்த புகைப்படம் 2018ம் ஆண்டில் எடுக்கப்பட்டது என்று குறிப்பிட்டுப் பகிரப்பட்டிருந்தது. அதனால், இந்த வீடியோ பிரான்சில் 2018ம் ஆண்டு எடுக்கப்பட்டதாக இருக்கலாம் என்ற முடிவுக்கு வந்தோம்.
நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ ஆங்கிலத்தில் கூடுதல் விவரம் உள்ளதா என்று பார்த்தோம். அப்போது, 2018ம் ஆண்டில் பாலிவுட் திரைப்படம் தொடர்பான ஆங்கில ஊடகம் ஒன்று இந்த விநாயகர் சிலை தொடர்பாக செய்தி வெளியிட்டிருப்பதைப் பகிர்ந்திருந்தனர். அதைக் கூடுதல் ஆதாரமாக வெளியிட்டிருந்தனர். இவை எல்லாம் இந்த வீடியோ ஹாலந்தில் 2022ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தியோடு எடுக்கப்பட்டது இல்லை என்பதையும், இது ஹாலந்தில் எடுக்கப்பட்டது இல்லை என்பதையும் உறுதி செய்தன.
முடிவு:
ஹாலந்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் என்று பரவும் வீடியோ 2018ம் ஆண்டு பிரான்சில் நடந்த எலுமிச்சை – ஆரஞ்சு பழத் திருவிழாவின் போது அமைக்கப்பட்டது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel
Title:ஹாலந்தில் ஆரஞ்சு பழத்தில் விநாயகர் சிலை செய்து விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டதா?
Fact Check By: Fact Crescendo TeamResult: False