மக்களைப் பிச்சைக்காரர்கள் போல நடத்திய எலிசபெத் ராணி என்று பரவும் வீடியோ உண்மையா?

சமயம் சமூக ஊடகம் சர்வதேசம்

மக்களைப் பிச்சைக்காரர்கள் போல நடத்திய பெண் ஒருவரின் வீடியோவை எடுத்து, அது எலிசபெத் ராணி என்று குறிப்பிட்டு சிலர் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

பெண்மணி ஒருவர் கையில் வைத்திருக்கும் எதையோ வீசுகிறார். அதை சிலர் எடுக்கும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. வீடியோவில் உள்ள பெண்ணின் முகம் சரியாகத் தெரியவில்லை. நிலைத் தகவலில், “பேசும் காணொலி… பிச்சைக்காரர்களாக மக்களை பாவிக்கும் ராணி… மேலும் இந்தியாவின் விடுதலைக்கு முன் நடந்த அத்தனை பொருளாதாரக் கொள்கைகளுக்கும் முக்கியமாக மக்களிடம் ஏற்பட்ட பிரிவினைக்கும் இந்த இங்கிலாந்து அரச குடும்பமே காரணம்…” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

இந்த பதிவை Varamilagaai Satheesh என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் 2022 செப்டம்பர் 9ம் தேதி பதிவிட்டுள்ளார். இதை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

இங்கிலாந்தின் ராணியாக இருந்த இரண்டாம் எலிசபெத் சமீபத்தில் மரணம் அடைந்தார். அவரைப் பற்றி பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வரும் சூழலில், எலிசபெத் அரசியின் பெயரைக் குறிப்பிடாமல் மொட்டையாக மக்களை பிச்சைக்காரர்களாகப் பாவிக்கும் ராணி, இங்கிலாந்தின் அரச குடும்பம் என்று தலைப்பிட்டு வீடியோவை சிலர் பகிர்ந்து வருகின்றனர். 

சில ட்வீட் பதிவுகளில் இங்கிலாந்து அரசி ஆப்ரிக்க ஏழை குழந்தைகளுக்கு தெருவில் உணவை வீசிய காட்சி என்று குறிப்பிட்டுப் பதிவிட்டிருந்தனர். இந்த வீடியோவில் இருப்பது இங்கிலாந்து ராணியா அல்லது வேறு நாட்டின் ராணியா என்று ஆய்வு செய்தோம்.

உண்மைப் பதிவைக் காண: catalogue-lumiere.com I Archive

வீடியோ காட்சிகளைப் புகைப்படமாக மாற்றி ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது catalogue-lumiere.com என்ற பிரெஞ்சு இணையதளம் ஒன்றில் இந்த வீடியோ காட்சியுடன் கூடிய தகவல் நமக்குக் கிடைத்தது. அதில் இந்த திரைப்படம் 1899 ஏப்ரல் 28 – 1900 மார்ச் 2-க்கு இடைப்பட்ட காலத்தில் எடுக்கப்பட்டது. அப்போதைய ஃபிரெஞ்சு இந்தோ சீனா என்று அறியப்பட்ட இன்றைய வியட்நாமில் இந்த வீடியோ எடுக்கப்பட்டது. பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த இரண்டு பெண்கள் வியட்நாம் மக்களிடையே நாணயங்களை வீசியதைப் படமாக எடுத்து 1901ல் பிரான்சில் திரைப்படமாக திரையிடப்பட்டது என்று குறிப்பிட்டிருந்தனர்.

வீடியோவில் இருக்கும் பெண்களின் பெயர் திருமதி பால் டூமர், செல்வி பால் டூமர் (Miss Paul Doumer , Mrs Paul Doumer) என்று குறிப்பிட்டிருந்தனர். அவர்கள் நாணயங்களை வியட்நாம் சிறுவர்கள் மீது வீச, அதை கேப்ரியல் வேயர் (Gabriel Veyre) என்பவர் படமாக எடுத்துள்ளார் என்றும் குறிப்பிட்டிருந்தனர். அதன் அடிப்படையில் தேடிய போது சில யூடியூப் வீடியோக்களும் நமக்குக் கிடைத்தன. அவையும் இந்த வீடியோ 1900ம் ஆண்டைச் சார்ந்தது என்று குறிப்பிட்டிருந்தனர். 

இங்கிலாந்து அரசி இரண்டாம் எலிசபெத் 1926ம் ஆண்டு ஏப்ரல் 21ம் தேதி பிறந்தவர். அவர் பிறப்பதற்கு முன்பே இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ ஆங்கிலத்திலும் இது தொடர்பாகக் கட்டுரை வெளியாகி உள்ளது. இதன் மூலம் ராணி ஆப்ரிக்கா குழந்தைகள் மத்தியில் நாணயத்தை வீசினார், உணவை வீசினார் என்று பரவும் தகவல் தவறானது என்று உறுதியாகிறது.

முடிவு:

மக்களை பிச்சைக்காரர்கள் போல நடத்திய ராணி என்று பகிரப்படும் வீடியோ எலிசபெத் ராணி பிறப்பதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட திரைப்படத்தின் காட்சி என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:மக்களைப் பிச்சைக்காரர்கள் போல நடத்திய எலிசபெத் ராணி என்று பரவும் வீடியோ உண்மையா?

Fact Check By: Chendur Pandian 

Result: False

Leave a Reply