
ரயில் நிலைய நடை மேடையில் நின்று கொண்டிருந்த ஒருவர் வைத்திருந்த மொபைல் போன் ப்ளூடூத் ஹெட்போன் மூலம் ரயில் பாதை மின்சாரம் ஈர்க்கப்பட்டு அவர் உயிரிழந்தார் என்று ஒரு வீடியோ தகவல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
ரயில் நடை மேம்பாலத்தில் இருவர் நின்று பேசிக்கொண்டிருக்கின்றனர். திடீரென்று ஒருவர் மின்சாரம் தாக்கி, ரயில் தண்டவாளத்திற்குள் விழுகிறார். பலரும் வந்து என்ன ஆனது என்று பார்க்கும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இரயில் நிலைய நடைமேடையில் நின்று கொண்டிருக்கும் போது செல்போன் மற்றும் அதனுடன் Blue tooth device இணைத்திருந்த நிலையில் அவருக்கு இன்கமிங்க கால் வருகிறது.. அவர் போனை பயன்படுத்தவில்லை. அவருக்குதான் அழைப்பு வருகிறது. அதன் விளைவாக செல்போன் சிக்னலின் மூலமாக மின்சாரம் இழுக்கப்பட்டு இறந்துள்ளார். ஆகவே நடைமேடையில் மஞ்சள் நிற கோட்டிற்கு அருகில் சென்று போனை பயன்படுத்தும் போது flight mode போட்டு பயன் படுத்துங்கள். பிறகு தள்ளி வந்து போனை பயன்படுத்துங்கள் நமது வழியில் மின்சார இருப்புப்பாதை திருநெல்வேலி,விருதுநகா் மாா்க்கமாக சென்னை மற்றும் பெரும் நகரங்களுக்கு உள்ளது. வண்டி அந்தப்பகுதியில் அலுவல் புரிபவர்கள் மேற்கண்ட பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றுவது நல்லது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த பதிவை Vasu N என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் 2022 டிசம்பர் 25ம் தேதி பதிவிட்டுள்ளார். இவரைப் போல பலரும் இந்த பதிவைப் பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:
மொபைல் போன் மற்றும் ப்ளூடூத் ஹெட்போன் பயன்படுத்தியதால் ப்ளூடூத் வழியாக உயர் அழுத்த மின்சாரம் ஈர்க்கப்பட்டு ஒருவர் உயிரிழந்தார் என்று பகிரப்பட்டுள்ளது. ஆனால், அந்த நபர் மீது மின்சார ஒயர் விழுவது போன்று வீடியோவில் தெரிகிறது. எனவே, இந்த வீடியோ தொடர்பாக ஆய்வு செய்தோம்.

இந்த வீடியோவை புகைப்படங்களாக மாற்றி கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றி தேடினோம். அப்போது இந்த சம்பவம் மேற்கு வங்க மாநிலம் கரக்பூரில் நடந்தது என்று தெரிந்தது.

உண்மைப் பதிவைக் காண: timesnownews.com I Archive
டிசம்பர் 8ம் தேதி இந்த வீடியோவுடன் கூடிய செய்தியை பல ஊடகங்களும் வெளியிட்டிருந்தன. அதில், ரயில் டிக்கெட் பரிசோதகர் (டிடிஇ) ரயில் பிளாட்ஃபார்மில் நின்றுகொண்டிருந்தார். அப்போது மின்சார ஒயர் துண்டாகி அவர் மீது விழுந்தது. அதில் அவர் பாதிக்கப்பட்டு ரயில் தண்டவாளத்தில் விழுந்தார். அவரது பெயர் சுஜன் சிங். தீவிர காயம் அடைந்த அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்று அந்த செய்திகளில் குறிப்பிடப்பட்டிருந்தது.
தொடர்ந்து தேடிய போது அந்த நபர் உயிருக்கு ஆபத்தான நிலையைத் தாண்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்றும் வெளியான பதிவுகள் கிடைத்தன. மேலும் சுஜன் சிங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தகவலை சிலர் ஃபேஸ்புக்கில் பதிவிட்டிருந்தனர்.
அதில், “பெரும் விபத்திலிருந்து டிக்கெட் பரிசோதகர் சுஜன் சிங் உயிர் தப்பினார். கரக்பூர் ரயில் நிலைய நடைமேடையில் சுஜன் சிங் நின்றுகொண்டிருந்த போது அவரது தலையில் மின்சார ஒயர் விழுந்தது. அதில் காயம் அடைந்த சுஜன் சிங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவர் ஆரோக்கியமாக இருக்கிறார்,’’ என்று குறிப்பிட்டிருந்தனர்.
நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ மலையாளத்தில் கூட இதுதொடர்பாக ஏற்கனவே கட்டுரை வெளியாகி இருப்பது தெரிந்தது. அதில் கூடுதலாக ப்ளூடூத் போன்றவற்றின் மூலமாக மின்சாரம் பாயாது என்று குறிப்பிட்டிருந்தனர். அந்த கட்டுரையைக் காண இங்கே கிளிக் செய்யுங்கள்.
இதன் மூலம் டிக்கெட் பரிசோதகர் ப்ளூடூத் பயன்படுத்தியதால் அவர் மீது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார் என்று பரவும் தகவல் தவறானது என உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
ரயில் நிலையத்தில் தண்டவாளம் அருகே நின்று கொண்டிருந்த டிக்கெட் பரிசோதகர் செல்போன் ப்ளூடூத் வழியாக மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார் என்று பரவும் தகவல் தவறானது. மின்சார ஒயர் துண்டாகி விழுந்ததால் அவர் காயம் அடைந்தார் என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel

Title:மொபைல் ப்ளூடூத் மூலம் மின்சாரம் பாய்ந்து இறந்த ரயில் டிக்கெட் பரிசோதகர் என்று பரவும் தகவல் உண்மையா?
Fact Check By: Chendur PandianResult: False
