“ஜமைக்காவில் மெலிசா புயல் ஏற்படுத்திய பாதிப்பு” என்று பரவும் வீடியோ உண்மையா?

சமூக ஊடகம் | Social Media சர்வதேசம் | International

ஜமைக்கா நாட்டில் மெலிசா புயல் ஏற்படுத்திய பாதிப்பு என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

புயல் பாதிப்பு வீடியோ ஒன்று ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில் ஆங்கிலத்தில், “4-5ம் நிலை புயலான மெலிசா ஜமைக்காவை இன்று தாக்கியது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. நிலைத் தகவலில், “மெல்லிசா புயல் ஜமைக்கா  நாட்டில் மணிக்கு 200 கிலோமீட்டர் வேகத்தில் வீசும் புயல் என்று கூறப்படுகிறது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

ஹைத்தி, ஜமைக்கா உள்ளிட்ட கரீபியன் தீவு நாடுகளை மெலிசா புயல் தாக்கியது. மணிக்கு 300 கி.மீ வேகத்தில் சூறாவளிக் காற்று வீசியதாக செய்திகள் வெளியானது. இந்த சூழலில் ‘ஜமைக்கா புயல்’ என்று குறிப்பிட்டு வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகின்றன. இது உண்மையில் மெலிசா புயல் ஜமைக்காவைத் தாக்கியபோது எடுக்கப்பட்டவை தானா என்று அறிய ஆய்வு செய்தோம்.

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவில் பல இடங்களில் பதிவான காட்சிகளை ஒன்று சேர்த்து ஒரே வீடியோவாக வெளியிட்டிருந்தனர். எனவே, ஒவ்வொன்றையும் தனித் தனியாக ஆய்வு செய்தோம். முதலில் கட்டிடத்தின் மேற்கூரை காற்றில் பறக்கும் வீடியோ காட்சியை புகைப்படங்களாக மாற்றி கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, அந்த வீடியோ காட்சி 2025 செப்டம்பர் 29ம் தேதியிலிருந்து சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வந்திருந்ததைக் காண முடிந்தது.

மெலிசா புயல் ஜமைக்காவில் அந்நாட்டு நேரப்படி 27 அக்டோபர் 2025 அன்று இரவு மற்றும் 28ம் தேதிதான் பாதிப்பை ஏற்படுத்தியது. அதாவது, இந்திய நேரப்படி கணக்கிட்டால் 28ம் தேதி. ஆனால், நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவோ சமூக ஊடகங்களில் 2025 செப்டம்பர் 29ம் தேதியிலிருந்து பதிவிடப்பட்டிருந்தது. 

கிட்டத்தட்ட மெலிசா புயல் ஜமைக்காவை தாக்குவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பாக வீடியோ வெளியாகி உள்ளது. எனவே, இந்த வீடியோ ஜமைக்காவை மெலிசா புயல் தாக்கிய போது எடுக்கப்பட்டது இல்லை என்பது உறுதியானது. கட்டிடத்தின் மேற்கூரை பறக்கும் காட்சி அடங்கிய வீடியோ தொகுப்பு எங்கு பதிவானது என்று அறிய தொடர்ந்து ஆய்வு செய்தோம். ஒரு பதிவில், 2025 செப்டம்பர் 29ம் தேதி வியட்நாமில் புவாலோய் புயல் (Bualoi) தாக்கியபோது எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் அதை உறுதி செய்ய முடியவில்லை.

நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவில் பெண்மணி ஒருவர் குழந்தையைத் தூக்கிக்கொண்டு வரும் காட்சி இருந்தது. அது பற்றித் தேடிய போது 2024ம் ஆண்டிலேயே அந்த வீடியோ வெளியாகி இருந்ததைக் காண முடிந்தது. அது அமெரிக்காவின் அலபாமாவில் எடுக்கப்பட்டது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. எனவே, இந்த பதிவிலிருந்த எந்த ஒரு காட்சியும் ஜமைக்காவுடன் தொடர்புடையது இல்லை என்பது உறுதியானது.

நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவில் இடம் பெற்ற காட்சிகள் எல்லாம் ஜமைக்கா மெலிசா புயல் பாதிப்புக்கு பல நாட்களுக்கு, மாதங்களுக்கு முன்பாக இருந்து சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வந்திருப்பதைத் தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் உறுதி செய்துள்ளோம். 

இந்த ஆதாரங்கள் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

பழைய புயல்- மழை பாதிப்பு வீடியோக்களை தொகுத்து ஜமைக்காவில் புயல் தாக்கிய போது எடுக்கப்பட்டது போன்று தவறாக சமூக ஊடகங்களில் பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I X Post I Google News Channel I Instagram

Avatar

Title:“ஜமைக்காவில் மெலிசா புயல் ஏற்படுத்திய பாதிப்பு” என்று பரவும் வீடியோ உண்மையா?

Fact Check By: Chendur Pandian  

Result: False

Leave a Reply