FACT CHECK: ராணுவ வீரரின் இறுதிச் சடங்கில் மனைவி, மகன் பாடிய பாடல் என்று பரவும் வதந்தி!

இந்தியா | India சமூக ஊடகம் | Social சமூகம்

எல்லையில் பாதுகாப்பு பணியின் போது உயிரிழந்த ராணுவ வீரரின் இறுதிச் சடங்கில் அவரது மனைவி மற்றும் மகன் கண்ணீர் மல்க பாடிய பாடல் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என்று ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive1 I Archive 2

ஒரு இளம் பெண் மற்றும் சிறுவன் இசை நிகழ்ச்சி ஒன்றில் பாடும் பாடல் பகிரப்பட்டுள்ளது. பாடலின் நடுவே, உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் சில புகைப்படங்களை காட்டுகின்றனர். இளம் பெண்ணும், சிறுவனும் பாடிய பாடலைக் கேட்டு அரங்கில் இருந்த சிலர் உணர்ச்சிப் பெருக்கால் கண்ணீர் விடுகின்றனர்.

நிலைத் தகவலில், “ஒரு இழவயது ராணுவ வீரர் அலுவலில் இருக்கும்போது இறந்து விடுகிறார் அவரது இறுதிச்சடங்கில் அவரது மனைவியும், மகனும் அன்னாரது ஆத்மா சாந்தியடைய கண்ணீர் மல்க பாடிய பாடல்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை BJP INDIA Group என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் C Chitra Devi Bjp என்பவர் 2021 ஜூலை 17ம் தேதி பதிவிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

வீடியோவை பார்க்கும் போது ராணுவ வீரரின் இறுதிச் சடங்கின் போது எடுக்கப்பட்டது போல இல்லை. வீடியோவை பார்க்கும் போது பாடகர்களின் பாடலுக்கு நடுவர்கள் மதிப்பெண் வழங்கும் பாடகர் போட்டி போல இருந்தது. மேலும், சில மாதங்களுக்கு முன்பு இந்தி தொலைக்காட்சி ஒன்றில் மூதாட்டி ஒருவர் சிலம்பம் சுழற்றியது தொடர்பாக வதந்தி பரவியது. அந்த இந்தி நிகழ்ச்சியில் பங்கேற்ற நபர்கள் போல இருந்தனர். எனவே, இந்த வீடியோவை பற்றி ஆய்வு செய்தோம்.

வீடியோ காட்சிகளை புகைப்படமாக மாற்றி ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது இது இந்தி தொலைக்காட்சியான சோனி டி.வி-யில் ஒளிபரப்பான சூப்பர் ஸ்டார் சிங்கர் நிகழ்ச்சி என்பது தெரிந்தது. 2019ம் ஆண்டு எடுக்கப்பட்ட இந்த வீடியோவை சோனி செட் இந்தியா அவ்வப்போது யூடியூபில் பதிவேற்றம் செய்து வருவது தெரிந்தது.

அசல் பதிவைக் காண: Facebook I Archive 1 I latesttelly.com I Archive 2

சோனி லைவ் இணையதளத்தில் ஸ்னேகா மற்றும் மவுலி வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் பாடினர் என்று குறிப்பிட்டிருந்தனர்.

அசல் பதிவைக் காண: sonyliv.com I Archive

மற்றொரு தளத்தில் 2019ம் ஆண்டு சுதந்திரதின சிறப்பு பாடலாக ஸ்னேகா மற்றும் மவுலி ஆகியோர் பாடினார்கள் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

இந்த வீடியோவில் காட்டப்பட்ட ராணுவ வீரர்களின் இறுதிச் சடங்கு படங்களை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அவை உரி தாக்குதல், புல்வாமா தாக்குதல் என பல்வேறு தாக்குதல்களில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் இறுதிச் சடங்கு காட்சி என்பது தெரியவந்தது.

அசல் பதிவைக் காண: rediff.com I Archive 1 I newindianexpress.com I Archive 2 I opindia.com I Archive 3

நம்முடைய ஆய்வில், இளம் பெண்ணும், சிறுவனும் இந்தி நிகழ்ச்சி ஒன்றில் பாடல் பாடுவதும், பாடலில் இடம் பெற்ற ராணுவ வீரர்களின் இறுதிச் சடங்கு பல்வேறு காலக்கட்டத்தில் நடந்தது என்பதற்கான ஆதாரமும் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில், பாதுகாப்பு பணியின் போது உயிரிழந்த ராணுவ வீரரின் இறுதிச் சடங்கில் அவரது மனைவி மற்றும் மகன் பாடல் பாடி அஞ்சலி செலுத்தினார்கள் என்று பகிரப்படும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

ராணுவ வீரரின் இறுதி சடங்கின் போது அவரது மனைவியும் மகனும் பாடல் பாடி அஞ்சலி செலுத்தினார்கள் என்று பரவும் வீடியோ தவறானது என்பதை தகுந்த ஆதாரங்களுடன் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:ராணுவ வீரரின் இறுதிச் சடங்கில் மனைவி, மகன் பாடிய பாடல் என்று பரவும் வதந்தி!

Fact Check By: Chendur Pandian 

Result: False