
நாடாளுமன்றத்தில் மோடியை கிழித்தெடுத்த எதிர்க்கட்சி எம்.பி என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive
சட்டமன்றம் போன்று காட்சி அளிக்கும் அவையில் ஒருவர் ஆவேசமாக பேசும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. இந்தியில் அவர் பேசுகிறார். நிலைத் தகவலில், “*பாராளுமன்றத்தில் மோடியை கிழித்து எடுத்த எதிர் கட்சி MP. தினமும் சாப்பிட உனக்கு காஸ்ட்லியான தாய்வான் காளான், 15 இலட்சத்துக்கு கோட், 3 இலட்சம் ரூபாய்க்கு கண்ணாடி, 1 இலட்சம் ரூபாய் பேனா, மேக்அப் செய்ய நாள் ஒன்றுக்கு ரூ. 50,000 பராமரிப்புக்கு தினம் 1,00,000 ரூபாய கூலி, ரூ 5 கோடியில கார், கருப்பு பூனை வளையம், இப்படி ராஜா மாதிரி வாழ்ந்துகிட்டு, தாடி வளர்த்துகிட்டு மதத்தின் பெயரில் பொய் மட்டும் சொல்ற, டீ வித்த நீ , நாட்டு மக்களை ஏமாத்தி வந்தது போதும், பெட்ரோல், டீசல் விலை விண்னை முட்டுகிறது… ஏன் இந்த நாடகம்… நீ நாசமாதான் போவாய் என்று (வாழ்த்தி) முடித்து உள்ளார்…” என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வீடியோவை Indian National Congress என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் Saravanan என்பவர் 2021 ஜூலை 21 அன்று பகிர்ந்துள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடிக்கு எதிராக பேசிய எதிர்க்கட்சி உறுப்பினர் என்று குறிப்பிட்டுள்ளனர். ஆனால் அவர் எந்த கட்சியை சார்ந்தவர் என்று குறிப்பிடவில்லை. அவருடைய பெயரைக் கூட வெளியிடவில்லை. மேலும், நாடாளுமன்றத்தில் மக்களவை, மாநிலங்களவை என இரு அவைகளின் நாற்காலி அமைப்பும் இப்படி இருக்காது. எனவே, இது ஏதோ மாநில சட்டமன்றத்தில் எடுக்கப்பட்ட வீடியோவாக இருக்கும் என்ற முடிவுக்கு வந்தோம்.

இந்த வீடியோ தொடர்பாக ஃபேஸ்புக்கில் தேடியபோது, பலரும் இந்த வீடியோவை பகிர்ந்து வருவது தெரிந்தது. பலரும் எம்.பி-யின் விமர்சனத்தால் முகம் மாறிய மோடி என்று பகிர்ந்து வருகின்றனர்.

அசல் பதிவைக் காண: Facebook I Archive
பிரதமர் மோடியை விமர்சித்து ஒருவர் பேசுகிறார் என்றால் அது கட்டாயம் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க அல்லாத கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலமாக இருக்கும். அப்படி வட இந்தியாவில் ராஜஸ்தான், பஞ்சாப், சட்டீஸ்கர், மகாராஷ்டிரா, ஜார்கண்ட் ஆகிய மாநிலங்கள் மட்டுமே உள்ளன. எனவே, இந்த மாநிலங்களின் சட்டப்பேரவை நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவில் உள்ளது போன்று இளம் பச்சை நிறத்துடன் உள்ளதா என்று பார்த்தோம்.
ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவை நம்முடைய ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவுடன் ஒத்துப்போனது. மேலும் ராஜஸ்தான் சட்டப்பேரவையில் தான் இருக்கையில் சிவப்பு நிற ரிப்பனால் அமரக் கூடாது என்று தடை ஏற்படுத்தியிருப்பது தெரியவந்தது.

அடுத்தது பேரவையில் பேசும் நபர் யார் என்ற ஆய்வைத் தொடங்கினோம். ராஜஸ்தான் சட்டப்பேரவையில் பிரதமர் மோடியை விமர்சித்து பேசிய எம்.எல்.ஏ என்று ஆங்கிலத்தில் டைப் செய்து தேடினோம். அப்போது பல எம்.எல்.ஏ-க்களின் வீடியோக்கள் கிடைத்தன. நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவும் கிடைத்தது. ஆனால் அதில் அவருடைய பெயரை குறிப்பிடாமல் பதிவிட்டிருந்தனர்.
தொடர்ந்து தேடியபோது வீடியோவில் உள்ளவர் சுயேட்சை எம்.எல்.ஏ பல்ஜீத் யாதவ் என்பது தெரிந்தது. சட்டப்பேரவையில் அவர் பேசிய பல்வேறு வீடியோ பதிவுகள் நமக்கு கிடைத்தன.
நம்முடைய ஆய்வில், இந்த வீடியோ ராஜஸ்தான் சட்டமன்றத்தில் எடுக்கப்பட்டது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. வீடியோவில் பேசுபவர் எம்.பி அல்ல ராஜஸ்தானின் சுயேட்சை எம்.எல்.ஏ பல்ஜீத் யாதவ் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் பிரதமர் மோடி முன்னிலையில் மோடியை விமர்சித்தார் என்று கூறப்படும் தகவல் தவறானது என்பது இதன் மூலம் உறுதியாகிறது. இதன் அடிப்படையில், “நாடாளுமன்றத்தில் மோடியை கிழித்தெடுத்த எதிர்க்கட்சி எம்.பி என்று பரவும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடியை விளாசிய எம்.பி என்று பகிரப்படும் வீடியோ ராஜஸ்தான் சட்டப்பேரவையில் எடுக்கப்பட்டது என்பதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel

Title:நாடாளுமன்றத்தில் மோடியை கிழித்தெடுத்த எதிர்க்கட்சி எம்.பி என்று பரவும் ராஜஸ்தான் சட்டமன்ற வீடியோ!
Fact Check By: Chendur PandianResult: False
