நாடாளுமன்றத்திற்கு முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட சாதுக்கள் 5000 பேரை இந்திரா காந்தி சுட்டுக் கொலை செய்தார் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

இந்திரா காந்தி புகைப்படத்துடன் யாரோ ஒருவர் பேசிய ஆடியோ வாய்ஸ்ஓவராக சேர்க்கப்பட்டு வீடியோ பதிவு ஒன்று ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டிருந்தது. அதில், "1966 நாடாளுமன்றத் தேர்தலின் போது தான் ஜெயிப்பது கடினமான காரியம் என்று அறிந்து ஆச்சாரியா வினோபாவையும் புகழ்பெற்ற சன்னியாசி கர்பாத்ரி சுவாமிகளையும் சந்தித்துத் தான் வெற்றி பெற ஆசி கோரினார். இந்திராவுக்கு ஆசி வழங்கிய அவர்கள், இந்திராவுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்தனர். இந்திரா ஜெயித்து பிரதமரானது பசு வதை தடை சட்டத்தைக் கொண்டு வர வேண்டும் என்றும் நாட்டில் ஒரு நாளைக்கு 15 ஆயிரம் பசுக்கள் கொல்லப்படுவதைத் தடுத்து நிறுத்திக் காப்பாற்ற வேண்டும் என்றும் வேண்டுகோள்விடுத்தனர். இந்திராவும் இதை செய்கிறேன் என்று உறுதியளித்தார். ஆனால் ஜெயித்த பிறகு கொடுத்த வாக்கை இந்திரா மறந்தார்.

இதனால் மனம் வருந்திய கர்பாத்ரி சாமியார் தன் சீடர்களையம் சாதுக்களையும் திரட்டி நாடாளுமன்றத்துக்கு எதிரே போராட்டம் நடத்தினார். ஆனால் அவர்களைக் கண்டுகொள்ளாத இந்திரா, அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்த உத்தரவிட்டார். 7 நவம்பர் 1966 அன்று கிட்டத்தட்ட 5000 இந்துக்கள் கொல்லப்பட்டனர். இதைக் கண்ட குருவுக்கு மனம் கொதித்தது. அப்பாவி இந்துக்கள் எப்படி இறந்தார்களோ அது போல நீயும் இறப்பாய் என்று வயிறு எரிய சபித்தார். இந்திரா எப்படி இறந்தார் என்பது நாம் அறிந்த ஒன்று. இந்த சம்பவம் நடந்த அன்று கோபாஷ்டமி நாள். இந்திரா இறந்ததும் கோபாஷ்டமி நாள்தான். அது மட்டுமின்றி ராஜிவ் காந்தி, சஞ்சய் காந்தி இறந்ததும் கோபாஷ்டமி நாள். தர்மத்தை அவமதிப்பவர்களைத் தர்மம் ஒரு நாளும் விட்டுவிடுவதில்லை" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

நிலைத் தகவலில், "பாரத மக்களுக்கு மறைக்கப்பட்ட உண்மை சம்பவம்::.. "மொமனா பேகம்" என்ற இந்திரா பிரதமராக இருந்தபோது கிட்டத்தட்ட 5,000 இந்து சாதுக்களை டில்லி பாராளுமன்றம் முன் சுட்டுக் கொன்ற துரோகக் கதையைப் ..பாருங்கள் " என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோ பதிவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

இந்திரா காந்தி ஒரு இஸ்லாமியர் என்று மீண்டும் மீண்டும் ஒரு பொய்யை தீவிர வலதுசாரிகள் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். அவர் இந்துதான்... அவரது திருமணம் மற்றும் இறுதிச் சடங்கு இந்து முறைப்படி நடந்தது என்று ஏற்கனவே பல முறை ஃபேக்ட் செக் கட்டுரை வெளியிட்டிருந்தோம். ஆனால், நாங்கள் பொய்தான் சொல்லுவோம் என்று தொடர்ந்து சமூக ஊடகங்களில் வதந்தி பரப்பி வருகின்றனர். தெரிந்தே பொய் சொல்பவர்களைத் திருத்த முடியாது. எனவே, மீண்டும் அந்த விவகாரத்திற்குள் நாம் செல்லவில்லை. அது தொடர்பான கட்டுரையை காண இங்கே கிளிக் செய்யுங்கள்.

அடுத்ததாக 1966ல் நாடாளுமன்றத் தேர்தல் நடந்தது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அது தவறானது. உண்மையில் 1967ல் தான் நாடாளுமன்றத் தேர்தல் நடந்தது. ஆனால், 1966ல் இந்திரா காந்தி பிரதமராக இருந்தது உண்மைதான். ஆனால், தேர்தலில் வெற்றி பெற்று அவர் பிரதமர் ஆக பொறுப்பேற்கவில்லை. 1962 நாடாளுமன்றத் தேர்தலில் நேரு வெற்றி பெற்று பிரதமராகியிருந்தார். அவர் மறைந்த பிறகு லால் பகதூர் சாஸ்திரி பிரதமர் ஆனார். அவரும் மறைந்த பிறகு 1966ம் ஆண்டு ஜனவரி மாதம் இந்திரா காந்தி பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனால், தேர்தலில் இந்து சாதுக்களின் உதவியை நாடி அவர் வெற்றி பெற்று பிரதமர் ஆனார் என்ற தகவலே தவறானது என்பது உறுதியாகிறது.

உண்மைப் பதிவைக் காண: thehindu.com I Archive

1967ல் நடந்த தேர்தலில் தான் இந்திரா காந்தி முதன் முறையாக மக்களை சந்தித்து பிரதமரானார். ஆனால் சாதுக்கள் தாக்கப்பட்ட சம்பவம் 1966 நவம்பரில் நடந்து முடிந்துவிட்டது. சாதுக்களின் கோபத்தையும் மீறி 1967ல் நடந்த தேர்தலில் இந்திரா காந்தி வெற்றிபெற்று பிரமராகவும் ஆகிவிட்டார். அடுத்ததாக பசுவதை தொடர்பாக சாமியார்களை இந்திரா காந்தி சந்தித்தாரா என்று அறிய கூகுளில் சில அடிப்படை வார்த்தைகளைப் பயன்படுத்தித் தேடினோம்.

அப்போது தி இந்து ஆங்கில நாளிதழில் வெளியான புகைப்படத்துடன் கூடிய செய்தி நமக்கு கிடைத்தது. 1971ல் பசு வதை தடை தொடர்பாக சாதுக்கள் இந்திரா காந்தியை சந்தித்து கோரிக்கை விடுத்தனர் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், இந்திய நாடாளுமன்றத்தின் மீதான முதல் தாக்குதல் என்று 1966ல் நடந்த சம்பவம் தொடர்பான கட்டுரையில் அந்த படத்தை பயன்படுத்தியிருந்தனர். இதன் மூலம் இந்திரா காந்தியிடம் கோரிக்கை விடுத்த பிறகு தாக்குதல் சம்பவம் நடந்தது என்பதும் தவறானது என்பது தெளிவாகிறது.

உண்மைப் பதிவைக் காண: thehindu.com I Archive

தொடர்ந்து தேடிய போது, நவம்பர் 8, 1966ம் ஆண்டு நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழின் சென்னை பதிப்பின் முதல் பக்கம் நமக்கு கிடைத்தது. அதில், டெல்லி வன்முறையில் 7 பேர் கொலை, 200 பேர் காயம். கோபம் கொண்ட பசுவதை தடுப்பு போராளிகள் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு என்று தலைப்பிடப்பட்டிருந்தது. மேலும், காமராஜர் வீட்டுக்கு தீ வைப்பு என்றும் அந்த பத்திரிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. 5000 பேர் கொல்லப்பட்டதாக நமக்கு எந்த ஒரு செய்தியும் கிடைக்கவில்லை. இந்த சம்பவம் நடந்து பல ஆண்டுகள் கழிந்துவிட்ட நிலையில் எந்த ஆதாரங்களின் அடிப்படையில் 5000 இந்துக்கள் படுகொலை செய்யப்பட்டனர் என்று வதந்தி பரப்புகிறார்கள் என்று தெரியவில்லை. இது தொடர்பாக நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ ஆங்கிலத்திலும் கட்டுரை வெளியாகி உள்ளது. அதை காண இங்கே கிளிக் செய்யுங்கள்.

உண்மைப் பதிவைக் காண: google.com

சரி இந்திராகாந்தி மற்றும் அவரது மகன்கள் எல்லோரும் கோபாஷ்டமி அன்று இறந்தாரா என்று அறிய ஆய்வு செய்தோம். இந்திரா காந்தி இறந்த 1984ம் ஆண்டு கோபாஷ்டமி இந்திரா காந்தி இறந்த அக்டோபர் 31ம் தேதி வந்தது. ஆனால் 1991ம் ஆண்டு கோபாஷ்டமி நவம்பர் 14ம் தேதியும் (ராஜிவ் காந்தி இறந்த தேதி மே 21, 1991), சஞ்சய் காந்தி இறந்த 1980ம் ஆண்டு (சஞ்சய் காந்தி இறந்த நாள்: ஜூன் 23, 1980) கோபாஷ்டமி நவம்பர் 15ம் தேதியும் வந்தது. எனவே, இந்த தகவலும் உண்மையும் பொய்யும் கலந்ததாக உள்ளது.

நம்முடைய ஆய்வில், இந்திரா காந்தி சாதுக்களை சந்தித்து தேர்தலில் வெற்ற பெற ஆசி பெற்று பிரதமர் ஆனார் என்று பரவும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடாளுமன்றம் மற்றும் காமராஜர் இல்லம் தாக்கப்பட்ட சம்பவத்துக்குப் பிறகு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் இந்திரா காந்தி வெற்றி பெற்ற பிறகு சாதுக்கள் அவரை சந்தித்து கோரிக்கை விடுத்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.

1966ல் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவில்லை. 1967ல் தான் தேர்தல் நடந்துள்ளது. லால் பகதூர் சாஸ்திரி மறைவைத் தொடர்ந்தே 1966ல் இந்திரா காந்தி முதன் முறையாக பிரதமராக பொறுப்பேற்றார். அதன் பிறகு 1967ல் நடந்த தேர்தலிலேயே முதன் முறையாக மக்களை சந்தித்து இந்திரா காந்தி பிரதமரானார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 7 பேர் இறந்ததாக மட்டுமே ஊடகங்களில் செய்தி வெளியாகி உள்ளது. 5000ம் பேர் கொல்லப்பட்டதற்கு எந்த ஆதாரமும் இல்லை.

இந்திரா காந்தி இஸ்லாமியர் இல்லை... அவர் இந்து என்பது ஏற்கனவே பல முறை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த ஆதாரங்கள் அடிப்படையில் டெல்லி நாடாளுமன்றத்துக்கு முன்பாக 5000 சாதுக்களை இந்திராகாந்தி சுட்டுக் கொலை செய்தார் என்று பரவும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

5000 இந்து சாதுக்களை இந்திரா காந்தி அரசு சுட்டுக்கொலை செய்தது என்று பரவும் தகவல் தவறானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:நாடாளுமன்றம் முன்பு சாதுக்கள் 5000 பேரை கொலை செய்தாரா இந்திரா காந்தி?

Fact Check By: Chendur Pandian

Result: Misleading