ராமர் கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி அயோத்தியில் ஜடாயு என்ற பறவை குவிந்து வருகிறது என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

கழுகுகள் சில மலைப் பாதை ஒன்றின் ஓரத்தில் ஒன்றாக இருப்பதை யாரோ காரில் சென்றபோது எடுத்த வீடியோவை ஃபேஸ்புக்கில் பகிர்ந்துள்ளனர். நிலைத் தகவலில், "முற்றிலும் அழிந்து விட்டதாக கருதப்பட்ட "ஜடாயு" பறவைகள் ஸ்ரீ ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு அயோத்தியில் குவிந்த வண்ணம் உள்ளது" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவானது ஜனவரி 5, 2023 அன்று ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டிருந்தது.

உண்மை அறிவோம்:

ராமாயண கால ஜடாயு பறவை இப்போது கண்டுபிடிக்கப்பட்டது, அயோத்திக்கு வந்து கொண்டிருக்கிறது என்று எல்லாம் தொடர்ந்த சமூக ஊடகங்களில் வதந்தி பரப்பப்பட்டு வருகிறது. பருந்து, கழுகுகளின் வீடியோவை எல்லாம் வைத்து இப்படி வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன.

தற்போது அயோத்தியில் வருகிற ஜனவரி 22ம் தேதி ராமர் கோவில் திறப்பு விழா, ராமர் சிலை நிறுவும் விழா நடைபெறுவதையொட்டி அயோத்திக்கு புராண கால ஜடாயு பறவை வந்துகொண்டே இருக்கிறது என்று பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். இந்த தகவல் உண்மையா என்று அறிய ஆய்வு செய்தோம்.

அயோத்தியில் எந்த இடத்தில் இந்த பறவைகள் வந்துள்ளன என்று எந்த தகவலும் இல்லை. வீடியோவை பார்க்கும் போது உயர்ந்த மலைத் தொடர் சாலை போல உள்ளது. எனவே, இந்த வீடியோவை புகைப்படங்களாக மாற்றி கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம்.

அப்போது 2021ம் ஆண்டில் இருந்தே இந்த வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வந்திருப்பதைக் காண முடிந்தது. இந்த வீடியோ எங்கு எடுக்கப்பட்டது என்ற தகவல் சரியாக இல்லை. இந்தோனேஷியா என்று குறிப்பிட்டு சிலர் இந்த வீடியோவை 2021, 2022ம் ஆண்டுகளில் சமூக ஊடகங்களில் பகிர்ந்திருந்தனர். மற்றபடி இந்த வீடியோ எங்கு, எப்போது எடுக்கப்பட்டது என்ற விவரம் கிடைக்கவில்லை. அயோத்திக்கு வந்த கழுகுகள் அல்லது ஜடாயு என்றும் எந்த செய்தி, வீடியோ பதிவும் நமக்கு கிடைக்கவில்லை.

அதே நேரத்தில் வீடியோவில் இருக்கும் பறவை இனம் அழிந்துவிட்டதா என்று அறிய தொடர்ந்து ஆய்வு செய்தோம். ஃபேஸ்புக் பதிவு ஒன்றில் இது ஹிமாலய தங்கநிற கழுகு (Himalayan Golden Eagle) என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த கழுகு இந்தியா, நேபாளம் உள்ளிட்ட நாடுகளில் மிகவும் உயர்ந்த மலைப் பகுதியில் வசிக்கும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இது அழிந்துவிட்ட இனம் அல்ல... அச்சுறுத்தல் அல்லது அழிவு நிலையில் உள்ள இனம் என்று பாதுகாப்பு பட்டியலில் உள்ளது என்று செய்திகள் கூறுகின்றன.

உண்மைப் பதிவைக் காண: Facebook

அயோத்தி ராமர் கோவில் குடமுழுக்கு என்பது 2024 ஜனவரியில் நடைபெறும் நிகழ்வாகும். ஆனால் இந்த கழுகு வீடியோ 2021ம் ஆண்டிலேயே இந்தோனேஷியா உள்ளிட்ட வெளிநாடுகளில் பதிவிடப்பட்டுள்ளது.

இமய மலை உள்ளிட்ட உயர்ந்த மலை சிகரங்களில் வாழம் கழுகு இனங்களுள் ஒன்று என்று சில செய்திகள் கூறுகின்றன. மேலும் 2024ல் நடக்கும் குடமுழுக்கை முன்கூட்டியே தெரிந்து கொண்டு 2021ம் ஆண்டிலேயே கழுகுகள் அயோத்திக்கு வந்திருக்க வாய்ப்பும் இல்லை. அப்படி வந்திருந்தாலும் இது பற்றி அப்போதே செய்தி வெளியாகி இருந்திருக்கும். நமக்கு அப்படி எந்த செய்தியும் கிடைக்கவில்லை. இதன் மூலம் 2024 அயோத்தி ராமர் கோவில் குடமுழுக்குக்கு அழிந்துவிட்டதாக கருதப்படும் ஜடாயு என்ற பறவை இனம் வந்துகொண்டே இருக்கிறது என்று பரவும் தகவல் தவறானது என்று உறுதியாகிறது.

முடிவு:

ராமர் கோவில் குடமுழுக்கையொட்டி அழிந்ததாக கருப்பட்ட ஜடாயு பறவைகள் அயோதியில் குவிந்தவண்ணம் உள்ளன என்று பரவும் தகவல் தவறானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:அயோத்தியில் குவியும் ஜடாயு என்று பரவும் வீடியோ உண்மையா?

Written By: Chendur Pandian

Result: False