
உலகின் நேர்மையான 13 நேர்மையான ஆட்சியாளர்களில் நரேந்திர மோடிக்கு முதலிடம் வழங்கப்பட்டது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ வாட்ஸ் அப் Chatbot-க்கு வாசகர் ஒருவர் பிரதமர் மோடி புகைப்படத்துடன் கூடிய பதிவு ஒன்றை அனுப்பி இது உண்மையா என்று கேட்டிருந்தார். அந்த புகைப்பட பதிவில், “ஒவ்வொரு பாஜக தொண்டனும் பெருமைப்பட வேண்டிய தருணம். உலகின் நேர்மையான 13 ஆட்சியாளர்களில் பாரதப்பிரதமர் நரேந்திர மோடிஜி முதலிடம்” என்று எழுதப்பட்டிருந்தது.

அசல் பதிவைக் காண: Facebook I Archive
ஃபேஸ்புக்கில் இதை யாராவது பகிர்ந்து வருகிறார்களா என்று பார்த்தோம். Bjp Venkatesh Mtp என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்ட நபர் உள்பட பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
உலகின் நேர்மையான ஆட்சியாளர் என்று எந்த ஒரு பட்டியலும் வெளியாவது இல்லை. உலகின் நேர்மையான ஆட்சியாளராக இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை அமெரிக்கா அறிவித்ததாக முன்பு வதந்தி ஒன்று பரவியது. ஆனால், எப்படி எந்த ஒரு அறிவிப்பையும் அமெரிக்கா வெளியிடவில்லை என்றும், மேலும் வலிமையான தலைவர், ஆற்றல் மிக்க தலைவர் என்று உலகின் முன்னணி ஊடகங்களில் பட்டியல் வெளியிடுகின்றனவே தவிர, நேர்மையான ஆட்சியாளர் என்ற பட்டியலை வெளியிடுவது இல்லை என்றும் அந்த கட்டுரையில் குறிப்பிட்டிருந்தோம். அந்த கட்டுரையைக் காண இங்கே கிளிக் செய்யுங்கள்.
இந்த நிலையில் 13 நாட்டுத் தலைவர்களில் நேர்மையான ஆட்சியாளராகப் பிரதமர் மோடி முதலிடம் பிடித்தார் என்று ஒரு பதிவு பகிரப்பட்டு வருகிறது. இந்த பட்டியலை வெளியிட்டது யார், இந்த பட்டியல் எப்போது வெளியானது என்று எந்த ஒரு தகவலும் அதில் இல்லை. இருப்பினும் பலரும் இதை ஷேர் செய்யவே அது பற்றி ஆய்வு செய்தோம்.

“13 தலைவர்கள் பட்டியலில் மோடி முதலிடம்” என்பதை அடிப்படையாக வைத்து கூகுளில் தேடினோம். அப்போது உலக தலைவர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்த நரேந்திர மோடி என்று தலைப்பிட்டு பல முன்னணி ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருப்பது தெரிந்தது. அமெரிக்காவைச் சார்ந்த ஆய்வு நிறுவனமான மார்னிங் கன்சல்ட் உலகின் 13 நாட்டுத் தலைவர்களின் செல்வாக்கு தொடர்பாக நடத்திய ஆய்வில் மோடிக்கு முதலிடம் கிடைத்ததாக அறிவித்தது என்றும். இதையொட்டி பா.ஜ.க தேசிய தலைவர் நட்டா வாழ்த்து தெரிவித்து ட்வீட் வெளியிட்டதாகவும் செய்திகள் கிடைத்தன. புதிய தலைமுறை வெளியிட்டிருந்த செய்தியில் செல்வாக்கு மிக்க தலைவர் பட்டியலில் முதலிடம் என்றே குறிப்பிட்டிருந்தது.

அசல் பதிவைக் காண: timesnownews.com I Archive 1 I puthiyathalaimurai.com I Archive 2
ஜேபி நட்டா வெளியிட்ட ட்வீட்களைப் பார்த்தோம். அதில், “அமெரிக்க நிறுவனமான மார்னிங் கன்சல்ட் நடத்திய ஆய்வில் உலகத் தலைவர்கள் மத்தியில் உயர்ந்த மதிப்பீட்டை பிரதமர் நரேந்திர மோடி பெற்றுள்ளார். கோவிட் 19 உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை மிகத் திறமையாக கையாண்டதனால் மிகப் பிரபலமான ஆட்சி அதிகார தலைவராக மோடி உருவெடுத்துள்ளார்” என்று குறிப்பிட்டிருந்தார்.
மற்றொரு ட்வீட்டில், “பிரதமர் மோடி தமது நாட்டிற்காக அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருவதன் காரணமாக இந்தியாவின் அனைத்துப் பகுதிகள், அனைத்து மக்கள் மட்டுமின்றி உலக அளவிலும் புகழ் பெற்றுள்ளார். இந்த சவாலான நேரத்தில் உலகத் தலைவர்கள் மத்தியில் நம்பர் 1 இடத்தை அவர் பிடித்துள்ளார்” என்று குறிப்பிட்டிருந்தார். இந்த பதிவில் எந்த இடத்திலும் நேர்மையான ஆட்சியாளர் பட்டியலில் முதலிடம் என்று அவர் குறிப்பிடவில்லை.
மார்னிங் கன்சல்ட் நிறுவனம் என்ன மாதிரியான ஆய்வை நடத்தி வெளியிட்டு வருகிறது என்று பார்த்தோம். அது, இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து உள்பட 13 நாடுகளின் தலைவர்களுக்கு அவரவர் நாட்டில் எத்தனை சதவிகிதம் பேர் ஆதரவு தெரிவிக்கின்றார்கள் என்பதை வாரம் தோறும் கருத்துக்கணிப்பு நடத்தி வெளியிடும் அமைப்பு என்றும் இது அந்த அந்த நாட்டு மக்களிடம் கருத்துக் கணிப்பு நடத்துவதும் தெரியவந்தது.
எவ்வளவு பேரிடம் கருத்துக்கணிப்பு நடத்துகிறார்கள் என்பது நாட்டு மக்கள் தொகைக்கு ஏற்ப மாறுபடும் என்றும் குறிப்பிட்டிருந்தனர். மேலும் 2020 ஜனவரியில் இருந்து பிரதமர் மோடிதான் இந்த பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார் என்பதும் தெரிந்தது. அப்படி இருக்கும்போது எதற்காக இந்த ஆண்டு ஜனவரியில் இதைப் பெரிய செய்தியாக பா.ஜ.க தலைவர் நட்டா வெளியிட்டார் என்று தெரியவில்லை.

அசல் பதிவைக் காண: morningconsult.com I Archive
அதே நேரத்தில் சமீப காலத்தில் மோடியின் செல்வாக்கு சரிந்து வருவதையும் காண முடிந்தது. இருப்பினும் தொடர்ந்து அவர்தான் சர்வதேச தலைவர்கள் ஆதரவு அல்லது செல்வாக்கு பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார். 2020 மே மாதத்தில் அவருக்கான புள்ளிகள் 72 வரை சென்றது. ஆனால் இந்த ஆண்டு ஜூன் மாதம் அது 37 ஆக சரிந்திருந்தது.
மற்றபடி ஃபேர்ப்ஸ், டைம், ஃபார்ச்சூன் என முன்னணி ஊடகங்கள் வெளியிட்ட ஆற்றல் மிக்க தலைவர்கள், வலிமை வாய்ந்த தலைவர்கள் போன்ற எந்த பட்டியலிலும் பிரதமர் மோடிக்கு முதலிடம் வழங்கப்படவில்லை. மார்னிங் கன்சல்ட் என்ற நிறுவனம் நடத்தி வரும் மக்கள் ஆதரவு மிக்க 13 உலக நாட்டுத் தலைவர்கள் ஆய்வில் நரேந்திர மோடி முதலிடத்தில் உள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
ஆனால், நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவோ உலகின் நேர்மையான ஆட்சியாளர் பட்டியலில் முதலிடத்தில் மோடி உள்ளார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. நேர்மையான ஆட்சியாளர்கள் பட்டியல் என்று எதுவும் நமக்கு கிடைக்கவில்லை. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உலகின் நேர்மையான தலைவர் பட்டியலில் பிரதமர் மோடிக்கு முதலிடம் வழங்கப்பட்டதாக பரவும் தகவல் தவறானது என்பதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title:உலகின் நேர்மையான ஆட்சியாளர்கள் பட்டியலில் மோடிக்கு முதலிடம் வழங்கப்பட்டதா?
Fact Check By: Chendur PandianResult: Misleading
