FACT CHECK: ரேஷன் பொருட்கள் பெற தகுதியானவர்கள் யார் என்று அறிவிப்பு வெளியிட்டாரா மு.க.ஸ்டாலின்?

அரசியல் சமூக ஊடகம் தமிழ்நாடு

மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு ரேஷன் பொருட்கள் பெறுவது தொடர்பான புதிய அறிவிப்பை வெளியிட்டது என்று சில படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன. இது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive

நியூஸ் 18 தமிழ்நாடு வெளியிட்ட “உணவு பாதுகாப்பு சட்ட விதிகள் வெளியீடு” என்ற செய்தியை புகைப்படமாக எடுத்து பகிர்ந்துள்ளனர். அதில், “மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கும் ரேஷன் பொருட்கள் இல்லை – தமிழக அரசு”, “தொழில் வரி செலுத்துபவரை உறுப்பினராகக் கொண்ட குடும்பத்திற்கும் ரேஷன் பொருட்கள் இல்லை”, “5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கும் ரேஷன் பொருட்கள் இல்லை – அரசு”, “ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்திற்கும் மேல் இருந்தால் ரேஷன் பொருட்கள் இல்லை – தமிழக அரசு”, “3 அறைகளுக்கு மேல் உள்ள கான்கிரீட் வீட்டை கொண்டவர்களுக்கு ரேஷன் பொருட்கள் இல்லை” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

நிலைத் தகவலில், “# வாக்களித்த மக்களுக்கு அடுத்த ஆப்பு# ஒஒஒஒஒ          தி மு க ஸ்டாலின் இன் விடியல் ஆரம்பம்” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. Edappdai Nsk Nasurudeen என்பவர் 2021 ஜூன் 16ம் தேதி இந்த பதிவை வெளியிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

தமிழக அரசு யாருக்கு ரேஷன் பொருட்கள் கிடைக்கும் என்று விதிமுறைகளை அறிவித்திருந்தால் மிகப்பெரிய செய்தியாக வெளியாகி இருக்கும். ஆனால் ஜூன் 16, 17, 2021ல் அப்படி எந்த ஒரு செய்தியும் வெளியாகவில்லை. எனவே, இந்த செய்தி எப்போது வெளியானது என்று ஆய்வு செய்தோம்.

முதலில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட ஃபேஸ்புக் பதிவில் உள்ள படங்களை பார்த்தோம். சில ஸ்கிரீன்ஷாட்களில், இந்த செய்தியை மனோஜ் பிரபாகர் என்ற நியூஸ் 18 தமிழ்நாடு செய்தியாளர் வழங்கியதாக அவருடைய புகைப்படத்தை வெளியிட்டிருந்தனர். அந்த ஸ்கிரீன்ஷாட்களில் ஜூலை 31 என்று தேதி குறிப்பிடப்பட்டுள்ளது. தி.மு.க ஆட்சிக்கு வந்து இரண்டு மாதங்கள் தான் ஆகிறது. அதனால், ஜூலை 31 என்ற தேதியை வைத்து இது அ.தி.மு.க ஆட்சியில் வெளியானது என்பதை தெரிந்துகொள்ள முடிந்தது.

அசல் பதிவைக் காண: Facebook I Archive

இது தொடர்பாக ஃபேஸ்புக்கில் தேடும்போது 2017ம் ஆண்டு ஜூலை 31, ஆகஸ்ட் 1 ஆகிய தேதிகளில் இந்த ஸ்கிரீன்ஷாட்களை பலரும் பகிர்ந்திருப்பதை காண முடிந்தது. மேலும், மனோஜ் பிரபாகரைத் தொடர்புகொண்டு கேட்டபோது “இந்த செய்தி 2016 அல்லது 17ல் வெளியாகி இருக்கலாம். சரியாக நினைவில் இல்லை. நான் தற்போது ஏபிபி ஊடக நிறுவனத்தில் பணிபுரிகிறேன்” என்றார்.

தி.மு.க ஆட்சி 2021 மே மாதம் ஆட்சிக்கு வந்தது. அப்படி இருக்கும் போது 2017ம் ஆண்டில் வெளியான செய்திக்கு தி.மு.க-வை காரணம் கூற முடியாது. இதன் அடிப்படையில் இந்த பதிவு தவறானது என்பது உறுதியானது.

அசல் பதிவைக் காண: dailythanthi.com I Archive 1 I vikatan.com I Archive 2

2017ம் ஆண்டு வெளியான செய்தியைத் தேடினோம். அப்போது ஆகஸ்ட் 1, 2017ம் ஆண்டு தினத்தந்தி வெளியிட்ட செய்தி நமக்குக் கிடைத்தது. அதில், “ரே‌ஷன் பொருட்கள் வினியோகம் தொடர்பாக தமிழக அரசு, தமிழ்நாடு உணவு பாதுகாப்பு விதிகள்–2017 என்று உருவாக்கி அதை அரசிதழில் கடந்த மாதம் (ஜூலை) 5–ந் தேதி வெளியிட்டுள்ளது. இந்த விதிகள் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் தமிழகத்தில் அமலுக்கு வரப்போவதாக சில தனியார் தொலைக்காட்சிகள் நேற்று செய்தி வெளியிட்டன. இதனை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஆனால், இதனை தமிழக அரசு மறுத்து உள்ளது” என்று குறிப்பிட்டிருந்தனர். இது தொடர்பாக அ.தி.மு.க ஆட்சியில் உணவுத்துறை அமைச்சராக இருந்த காமராஜ் மற்றும் அப்போது உணவுத் துறை செயலாளராக இருந்த பிரதீப் யாதவ் ஆகியோர் அளித்த பேட்டியும் வெளியாகி இருந்தது. 

இதன் மூலம் 2017ம் ஆண்டு நியூஸ் 18 வெளியிட்ட செய்தியின் ஸ்கிரீன்ஷாட்டை பகிர்ந்து, தி.மு.க அரசு அறிவிப்பு என்று தவறான தகவல் சேர்த்து விஷமத்தனத்துடன் பகிர்ந்திருப்பது உறுதியாகிறது. இதன் அடிப்படையில் வாக்களித்த மக்களுக்கு எதிராக ரேஷன் பொருட்கள் கிடைக்க விடாமல் தி.மு.க அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது என்று பகிரப்படும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

யாருக்கு ரேஷன் கார்டு கிடைக்கும் என்ற புதிய அறிவிப்பை ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு வெளியிட்டது என்று பரவும் ஸ்கிரீன்ஷாட்டுகள் தவறானவை என்பதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:ரேஷன் பொருட்கள் பெற தகுதியானவர்கள் யார் என்று அறிவிப்பு வெளியிட்டாரா மு.க.ஸ்டாலின்?

Fact Check By: Chendur Pandian 

Result: False

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •