
தமிழ்நாடு அரசு கிறிஸ்தவர் ஒருவரை புதிதாக இந்து கோவில் அர்ச்சகராக நியமித்ததாகவும், அவர் மது அருந்தியதாகவும் ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive
கோவில் குருக்கள் போல தோற்றம் அளிக்கும் ஒருவர் மது அருந்தும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “பணி நியமனம் செய்த விடியல் பார்ட்டி க்கு நன்றி.. துரசிங்க பேட்டை சிவன் கோவில் அர்ச்சகர் தாமஸ் பாஸ்கரன்..” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த பதிவை R S Shri Ram என்ற ஃபேஸ்புக் ஐடியைக் கொண்ட நபர் 2021 ஆகஸ்ட் 19ம் தேதி பதிவிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
தமிழ்நாட்டில் அனைத்து சாதியைச் சார்ந்தவர்களும் இந்து கோவில் அர்ச்சகர்கள் ஆகும் சட்டம் அடிப்படையில் 2021 ஆகஸ்ட் 14ம் தேதி பல்வேறு சாதியைச் சார்ந்தவர்களுக்கு பணி நியமனம் வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து காலம் காலமாக கோவில் அர்ச்சகர்களாக உள்ளவர்கள் பாதிக்கப்பட்டது போலவும், புதிதாக நியமிக்கப்பட்ட வேறு சாதியைச் சார்ந்தவர்கள் இந்து சாமி சிலைகளை அவமரியாதை செய்துவிட்டதாகவும் தொடர்ந்து வதந்தி பரப்பப்பட்டு வருகிறது.

அசல் பதிவைக் காண: news18.com I Archive
அந்த வகையில் துரசிங்க பேட்டை சிவன் கோவிலுக்கு கிறிஸ்தவர் ஒருவரை தமிழ்நாடு அரசு அர்ச்சகராக நியமித்தது என்றும், அந்த அர்ச்சகர் மது அருந்திக் கொண்டிருக்கிறார் என்றும் சமூக ஊடகங்களில் வதந்தி பரப்பப்பட்டு வருகிறது. இந்த புகைப்படத்தை பல ஆண்டுகளுக்கு முன்பு பார்த்த நினைவு இருந்ததால் இந்த தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.

அசல் பதிவைக் காண: YouTube
படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். ஆனால் எந்த ஒரு ஆதாரமும் நமக்கு கிடைக்கவில்லை. கோவில் குருக்கள் மது அருந்தினார் என பல கீ வார்த்தைகளை பயன்படுத்தி கூகுள், யுடியூப், ஃபேஸ்புக் என பல தளங்களிலும் தேடினோம். அப்போது 2017ம் ஆண்டு பதிவிடப்பட்ட வீடியோ நமக்கு கிடைத்தது. சாலையில் மது அருந்திக் கொண்டிருந்தவரை யாரோ சிலர் பிடித்து விசாரித்துள்ளனர்.
அதை வீடியோ எடுத்து வெளியிட்டிருப்பது தெரிந்தது. அந்த வீடியோவில், “அந்த குருக்கள் தன்னுடைய பெயர் சங்கர் என்று கூறுகிறார், சொந்த ஊர் கோடம்பாக்கம் என்று சொல்கிறார், சொந்த ஊர் கும்பகோணம் என்கிறார், முத்துமாரியம்மன் கோவிலில் பணியாற்றி வருகிறேன்” என்று கூறுகிறார்.
தமிழ்நாடு அரசு அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் சட்டத்தின் கீழ் 56 பேர் நியமிக்கப்பட்ட 2021 ஆகஸ்ட் 14ம் தேதியாகும்.
நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோ 2017 மே மாதம் யூடியூபில் பதிவேற்றம் செய்யப்பட்டு இருந்தது.
மேலும் அந்த குருக்கள் தன்னுடைய பெயர் சங்கர் என்று கூறுகிறார். முத்துமாரியம்மன் கோவிலில் குருக்களாக பணியாற்றி வருவதாக தெரிவித்துள்ளார். இதன் மூலம் 2021 ஆகஸ்ட் 14ம் தேதி தி.மு.க ஆட்சியில் இந்து கோவில் ஒன்றுக்கு கிறிஸ்தவர் அர்ச்சகராக நியமிக்கப்பட்டார் என்றும் அவர் மது அருந்தும் போது சிக்கினார் என்றும் பரவும் தகவல் தவறானது என உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
புதிதாக நியமிக்கப்பட்ட அர்ச்சகர் மது அருந்திய போது சிக்கினார் என்று பரவும் புகைப்படம் இந்த திட்டம் நடைமுறை வருவதற்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்பே எடுக்கப்பட்டது என்பதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel

Title:தமிழ்நாடு அரசு புதிதாக நியமித்த அர்ச்சகர் மது குடித்தாரா?
Fact Check By: Chendur PandianResult: False

Sorry I will not share false post very sorry