
மன்மோகன் சிங்கை கண்டுகொள்ளாமல் சோனியா காந்தி கடந்து சென்றது போன்ற வீடியோவை சிலர் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். இந்த வீடியோ பின்னணி தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive I Archive
மன்மோகன் சிங் மற்றும் சில தலைவர்கள் நின்றுகொண்டிருக்கிறார்கள். அப்போது காரில் இருந்து இறங்கி நடந்து வரும் சோனியா காந்தி, மன்மோகன் சிங்கை கடந்து செல்கிறார். சோனியா காந்தியை பார்த்தபடி மன்மோகன் சிங் திரும்ப, சோனியா காந்தியோ அவரை கண்டுகொள்ளாமல் செல்வது போன்று வீடியோ உள்ளது. Puppet of bar dancer என்று குறிப்பிட்டு வீடியோவை ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளனர். இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைந்த சூழலில், அவரையும் காங்கிரஸ் கட்சித் தலைவராக இருந்த சோனியா காந்தியையும் விமர்சிக்கும் வகையில் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பதிவிடப்பட்டு வருகிறது. மன்மோகன் சிங்கை காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த சோனியா காந்தி அவமரியாதை செய்தது போன்று வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
வீடியோ தெளிவில்லாமல் உள்ளது, முழுமையான வீடியோவும் இல்லை. வெறும் 15 விநாடி வீடியோவை வைத்து அவதூறு பரப்பியது போல் உள்ளது. எனவே, முழு வீடியோவையும் தேடி ஆய்வு செய்தோம். வீடியோ காட்சிகளை புகைப்படங்களாக மாற்றி கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றித் தேடினோம். அப்போது ஜீ நியூஸ் தொலைக்காட்சி லோகோவுடன் இந்த வீடியோவை சிலர் சமூக ஊடகங்களில் பதிவிட்டிருந்தனர். அதுவும் முழுமையானதாக இல்லை.
ஜீ நியூசில் இந்த வீடியோ உள்ளதா என்று தேடிப் பார்த்தோம். ரிவர்ஸ் இமேஜ் தேடல், கீ வார்த்தைகளைப் பயன்படுத்தித் தேடியும் நமக்கு அந்த வீடியோ கிடைக்கவில்லை. அந்த வீடியோவை ஜீ நியூஸ் அகற்றியிருக்க வாய்ப்பு உள்ளது என்பதால் நமக்கு அது கிடைக்கவில்லை. அதே நேரத்தில் மன்மோகன் சிங்கை விமர்சிக்கும் நோக்கில் பதிவிட்ட சில பதிவுகளில் வீடியோ தெளிவாகவும் 43 விநாடிகள் கொண்டதாகவும் கிடைத்தது.
அதில், “காங்கிரஸ் கொடியை ஏற்றுவதற்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வரவுக்காக அக்கட்சியினர் காத்துக்கொண்டிருக்கின்றனர். மன்மோகன் சிங் உள்ளிட்டோர் கொடிக் கம்பத்தைப் பார்த்தபடி நிற்கின்றனர். அப்போது, சோனியா காந்தி காரில் வந்து இறங்குகிறார். அவரை வரவேற்க காங்கிரஸ் நிர்வாகி ஒருவர் மாலையுடன் நிற்கிறார்.
அனைவருக்கும் வணக்கம் கூறியபடி வந்த சோனியா காந்தி, அந்த நிர்வாகிக்கு வணக்கம் கூறி அவர் அணிவித்த மாலையை அணிந்துகொள்கிறார். அந்த நேரத்தில் கொடிக் கம்பத்தைப் பார்த்தபடி நின்று கொண்டிருந்த மன்மோகன் சிங், சோனியாவை பார்த்தபடி திரும்புகிறார். அதே நேரத்தில் அந்த நிர்வாகி சோனியா காந்தியை கொடியேற்ற அழைத்துச் செல்கிறார். அதன் பிறகு என்ன நடந்தது என்பது தெரியவில்லை.
தொடர்ந்து தேடிய போது முகமது ஜுபைர் 2021ம் ஆண்டு வெளியிட்டிருந்த முழு வீடியோவும் கிடைத்தது. அதில், சோனியா காந்தி சென்று கொடியேற்றுகிறார். அதைத் தொடர்ந்த வந்தே மாதரம் பாடல் பாடப்படுகிறது. அதன் பிறகு சோனியா காந்தி மன்மோகன் சிங் உள்ளிட்ட தலைவர்களுக்கு வணக்கம் கூறியபடி செல்கிறார். முழு வீடியோவையும் பார்க்கும் போது எந்த இடத்திலும் மன்மோகன் சிங்கை அவமதித்தது போன்ற தோற்றம் ஏற்படவில்லை. வெறும் 15 விநாடி வீடியோவை மட்டும் வெட்டி எடுத்து அவமரியாதை செய்தது போன்று தோற்றம் ஏற்படும் வகையில் வீடியோவை பகிர்ந்திருப்பது இதன் மூலம் தெளிவாகிறது.
இந்த வீடியோ 2014ம் ஆண்டு ஜனவரி 17ம் தேதி டெல்லியில் நடந்த அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தின் தொடக்க விழாவின் போது எடுக்கப்பட்டது என்று ஃபேக்ட் கிரஸண்டோ மலையாளம் வெளியிட்டிருந்த ஃபேக்ட் செக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த ஆதாரங்கள் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறான புரிதலை ஏற்படுத்தும் வகையில் உள்ளது என்பது உறுதியாகிறது.
முடிவு:
2014ம் ஆண்டு நடந்த காங்கிரஸ் மாநாட்டின் வீடியோவில் வெறும் 15 விநாடி காட்சிகளை மட்டும் வைத்து மன்மோகன் சிங்கை அவமரியாதை செய்த சோனியா காந்தி விஷமத்தனமாக வதந்தி பரப்பியிருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I X Post I Google News Channel I Instagram

Title:மன்மோகன் சிங்கை அவமதித்த சோனியா காந்தி என்று பரவும் வீடியோ உண்மையா?
Written By: Chendur PandianResult: False
