நான் தோற்றால் அதற்கு காரணம் பா.ஜ.க கூட்டணிதான்: தம்பிதுரை பேசியது உண்மையா?

அரசியல் | Politics அரசியல் சார்ந்தவை | Political சமூக ஊடகம் | Social

‘’நான் கரூரில் தோற்றால் அதற்கு பா.ஜ.கவுடன் கூட்டணி வைத்ததே காரணமாக இருக்கும்,’’ – என தம்பிதுரை கூறியதாக ஒரு நியூஸ் கார்டு ஃபேஸ்புக்கில் வைரல் ஆகி வருகிறது. இதன் நம்பகத் தன்மையை ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

தகவலின் விவரம்:

கரூர் மக்களவை தொகுதி ADMK வேட்பாளர் திரு M. தம்பித்துரை அவர்கள் ஒப்புதல் வாக்குமூலம் நன்றி.

Archived link

“நான் கரூரில் தோற்றால் அதற்கு பா.ஜ.க-வுடன் கூட்டணி அமைத்ததே காரணமாக இருக்கும்” என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கூறியதாக நியூஸ்7 பிரேக்கிங் நியூஸ் கார்டு வெளியாகி உள்ளது. தேர்தல் நேரம் என்பதாலும், அ.தி.மு.க – பா.ஜ.க எதிர்ப்பு காரணமாகவும் இந்த பதிவை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

உயர் வகுப்பினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு, ரஃபேல் உள்ளிட்ட பல பிரச்னைகளில்  பா.ஜ.க-வுக்கு எதிராக மக்களவையில் குரல் கொடுத்தவர் கரூர் எம்.பி-யும் நாடாளுமன்ற துணை சபாநாயகருமான தம்பிதுரை. பா.ஜ.க-வுடன் கூட்டணி வேண்டாம் என்று தொடர்ந்து வலியுறுத்தினார்.

2019ம் ஆண்டு தொடக்கத்தில் துக்ளக் நிகழ்ச்சியில் பேசிய ஆடிட்டர் குருமூர்த்தி, தமிழகத்தில் பா.ஜ.க காலூன்ற அ.தி.மு.க-வுடன் கூட்டணி அவசியம் என்றார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தவர் தம்பிதுரை.

“பா.ஜ.க-வுடன் நல்ல நட்போடுதான் இருக்கிறோம். அதற்காக, அவர்கள் கொண்டு வரும் எல்லா திட்டங்களையும் நாங்கள் ஆதரிக்கவில்லை. அ.தி.மு.க கொள்கை உடைய கட்சி. பா.ஜ.க-வை தமிழகத்தில் காலூன்ற வைக்க அ.தி.மு.க-வுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று ஆடிட்டர் குருமூர்த்தி சொல்வது கேலியாக உள்ளது’’ என்று விமர்சித்திருந்தார். இது தொடர்பான செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

Archived link

இருப்பினும், அ.தி.மு.க – பா.ஜ.க கூட்டணி உறுதியானது. அதைத் தொடர்ந்து தன்னுடைய நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டார் தம்பிதுரை. பா.ஜ.க கூட்டணியால் மக்களுக்குத்தான் லாபம் என்றார். இதுபற்றிய செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

Archived link

இந்த சூழலில், கரூர் நாடாளுமன்ற தொகுதிக்கு அ.தி.மு.க சார்பில் போட்டியிடுகிறார் தம்பிதுரை. ஆனால், தொகுதியில் அவருக்கு எதிர்ப்பு இருப்பதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. கடந்த ஆண்டு தொகுதியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்கச் சென்ற தம்பிதுரையிடம், இப்போதுதான் வழி தெரிந்ததா, என்று கிராம மக்கள் கேட்டு சண்டைபோட்டுள்ளனர். அப்போது, இஷ்டம் இருந்தா ஓட்டு போடுங்க, என்று தம்பிதுரை டென்ஷன் ஆனார்.  விகடனில் வெளியான இந்த செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

Archived link

இப்போதும் சில கிராமங்களில் அவருக்கு எதிர்ப்பு உள்ளதாக செய்திகள் வருகின்றன. இது தொடர்பான செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

Archived link

இந்நிலையில்தான், ‘’என்னுடைய தோல்விக்கு பா.ஜ.க கூட்டணிதான் காரணமாக இருக்கும்,’’ என்று தம்பிதுரை பேசியதாக போட்டோ கார்டு வைரலாகி வருகிறது.

நியூஸ்7 பெயரிலான பிரேக்கிங் கார்டில் இப்பதிவு பகிரப்பட்டுள்ளதால் இதனை உண்மை என்றே பலரும் நம்புகின்றனர். இந்த நியூஸ் கார்டில் தேதி எதுவும் இல்லை. பொதுவாக, நியூஸ்7 கார்டில் தேதி இருக்கும். ஆனால், இதில் தேதி இல்லை. அதேசமயம், குறிப்பிட்ட நபர் ஏப்ரல் 12ம் தேதி இந்த பதிவை பகிர்ந்துள்ளார். இதனால், அந்த காலகட்டத்தில் இப்படி ஏதேனும் செய்தி வெளியாகி உள்ளதா என்று கூகுளில் தேடினோம். அப்படி எந்த ஒரு செய்தியும் கிடைக்கவில்லை.

நியூஸ்7 ஃபேஸ்புக் பக்கத்தில் ஏதேனும் நியூஸ் கார்டு உள்ளதா என்று தேடினோம். 12ம் தேதியில் இருந்து அதற்கு முன்பு 10 நாட்கள் வரை இதுபோன்ற நியூஸ் கார்டு எதுவும் வெளியாகி உள்ளதா என்று தேடினோம். அப்படி எதுவும் இல்லை. மேலும். தற்போது இந்த டிசைனில் நியூஸ்7 பிரேக்கிங் நியூஸ் கார்டு வெளியாகவில்லை என்பதும், தேர்தல் செய்திகள் அனைத்துமே ‘தேர்தல் போர்’ என்ற தலைப்பில் வெளியாவதும் தெரிந்தது. இதன் மூலம் இந்த தகவல் பொய்யானது, சித்தரிக்கப்பட்டது என்று தெரிந்தது.

(நியூஸ் 7 பிரேக்கிங் செய்தி கார்டு – உதாரணம்)

(தேர்தல் செய்திகள் போட்டோ கார்டு – உதாரணம்)

இதை மேலும் உறுதி செய்ய, தம்பிதுரையைத் தொடர்பு கொண்டு பேச முயன்றோம். அவருடைய அலுவலகத்துக்குத் தொடர்புகொண்டபோது, தம்பிதுரை தேர்தல் பிரசாரத்தில் பிஸியாக இருப்பதாக, தெரிவித்தனர். நம்மைப் பற்றி அறிமுகம் செய்துகொண்ட பின், அவருடைய உதவியாளர் முகமது ஷாதிக் என்பவர் பேசினார்.

அவர் கூறுகையில், “இந்த பதிவை முதலில் கரூர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் எதிர்க்கட்சி வேட்பாளர்தான் வெளியிட்டார். அ.தி.மு.க தொண்டர்கள் கடும் விமர்சனங்களை முன்வைத்ததும் அதை அவர் அகற்றிவிட்டார். ஆனாலும், அதற்குள்ளாக, இது நிறைய பேருக்கு பரவி விட்டது. பலரும் இதை உண்மை என்று நம்பி ஷேர் செய்து வருவது வேதனையாக உள்ளது”, என்றார். இந்த தொலைபேசி உரையாடல் நம்முடைய ஆதாரத்துக்காக பதிவு செய்யப்பட்டுள்ளது.

எனவே, மேற்கண்ட நியூஸ் கார்டு, தவறாகச் சித்தரிக்கப்பட்டது என தகுந்த ஆதாரங்களின் அடிப்படையில் நிரூபிக்கப்படுகிறது. தனிப்பட்ட அரசியல் காரணங்களுக்காக, இப்படி போலியான நியூஸ் கார்டை தயாரித்து, பரப்பி வருவதும் சந்தேகமின்றி தெளிவாகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின்படி, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட நியூஸ் கார்டு தவறான ஒன்று என உறுதி செய்யப்படுகிறது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ என எதையும் உறுதிப்படுத்தாமல், மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். அப்படி, நீங்கள் பகிர்ந்தது பற்றி யாரேனும் புகார் கொடுத்தால், நீங்கள் சட்டப்படியான நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

Avatar

Title:நான் தோற்றால் அதற்கு காரணம் பா.ஜ.க கூட்டணிதான்: தம்பிதுரை பேசியது உண்மையா?

Fact Check By: Praveen Kumar 

Result: False