காதலர் தினத்தில் காதல் ஜோடிகளுக்கு கட்டாய திருமணம், முதலிரவு… அர்ஜூன் சம்பத் பெயரில் போலிச் செய்தி! 

அரசியல் சமூக ஊடகம் தமிழ்நாடு

காதலர் தினம் அன்று ஜோடியாக சுற்றும் காதலர்களை பிடித்து அவர்களுக்கு திருமணம் செய்து வைப்போம் என்று அர்ஜூன் சம்பத் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

அர்ஜூன் சம்பத் புகைப்படத்துடன் கூடிய கதிர் செய்திகள் நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “முதலிரவு நடத்துவோம் எச்சரிக்கை! காதலர் தினம் அன்று ஜோடியாக சுற்றும் காதலர்களை பிடித்து அவர்களுக்கு திருமணம் செய்து முதலிரவு நடத்தி அதை வீடியோ எடுப்போம். அர்ஜுன் சம்பத் பகிரங்க எச்சரிக்கை” என்று இருந்தது.

இந்த பதிவைத் தமிழன் டா – Thamilan Da என்ற ஃபேஸ்புக் பக்கம் 2022 பிப்ரவரி 8ம் தேதி பதிவிட்டுள்ளது. இதை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

இது உண்மையான நியூஸ் கார்டு இல்லை என்பதைப் பார்த்த உடனே தெரிந்துகொள்ள முடிந்தது. திருமணம் மற்றும் முதலிரவை வீடியோ எடுப்போம் என்று அர்ஜூன் சம்பத் கூறியதாக விஷமத்தனமாக நியூஸ் கார்டு உருவாக்கி பகிர்ந்து வருகின்றனர். 

இது போலியானது என்பதை உறுதி செய்ய ஆய்வு செய்தோம். கதிர் செய்திகள் வெளியிட்ட நியூஸ் கார்டுகளை அதன் ஃபேஸ்புக் பக்கத்தில் பார்வையிட்டோம். அதில் அர்ஜூன் சம்பத் தொடர்பாக ஆய்வு செய்வது போன்று எந்த நியூஸ் கார்டும் இல்லை. கதிர் நியூஸ் ஊடகத்தைத் தொடர்புகொண்டு கேட்டோம். நம்மிடம் பேசிய ஊடகத்தின் நிர்வாகி எஸ்.ஜி.சூர்யா “இது போலியானது, இதை நாங்கள் வெளியிடவில்லை” என்று உறுதி செய்தார்.

Archive

மேலும் பொய் பரப்புரைகளை நம்ப வேண்டாம் என்று கூறி, ஃபேக் முத்திரை குத்தி ஒரு நியூஸ் கார்டையும் கதிர் தரப்பில் வெளியிட்டிருந்தனர். இவற்றின் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட நியூஸ் கார்டு போலியானது என்று உறுதியாகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட நியூஸ் கார்டு போலியானது என்பதை ஃபேக்ட் கிரஸண்டோ உறுதி செய்துள்ளோம். எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:காதலர் தினத்தில் காதல் ஜோடிகளுக்கு கட்டாய திருமணம், முதலிரவு… அர்ஜூன் சம்பத் பெயரில் போலிச் செய்தி!

Fact Check By: Chendur Pandian 

Result: False