
பொங்கல் தொகுப்பில் வழங்கப்பட்ட வெல்லத்தை உண்டு தனக்கு வயிற்றுப் போக்கு ஏற்பட்டதை பாலிதீன் பையில் கொண்டு வந்தது எடப்பாடி பழனிசாமி காட்டினார் என்று ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive
எடப்பாடி பழனிசாமி புகைப்படத்துடன் கூடிய புதிய தலைமுறை வெளியிட்ட நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “பொங்கல் தொகுப்பு பொருட்கள் சரியில்லை: ஈபிஎஸ். வெல்லத்தை உண்டு தனக்கு வயிற்றுப் போக்கு ஏற்பட்டதை பாலிதீன் பையில் கொண்டு வந்ததால் சலசலப்பு. பணமாகக் கொடுத்திருந்தால் இந்த சிரமம் ஏற்பட்டிருக்காது. – எடப்பாடி கே.பழனிசாமி” என்று இருந்தது.
நிலைத் தகவலில், “அட கருமம் புடிச்சவனுங்களா! வெல்லத்த தனியா சாப்ட்டா வயித்த கலக்கத்தான் செய்யும், அத கையில எடுத்து காட்றானுங்களே ! ச்சைக் வாந்திக்கு பொறந்தவனுங்களா ! சாக்கடைங்க” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
இந்த பதிவை Shali Mary என்ற ஃபேஸ்புக் ஐடி-யைக் கொண்ட நபர் 2022 ஜனவரி 11ம் தேதி பகிர்ந்துள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
தமிழ்நாடு அரசு ரேஷன் கடைகள் மூலம் விநியோகம் செய்யும் பொங்கல் தொகுப்பில் உள்ள பொருட்களின் தரம் சரியில்லை என்று பொதுவான குற்றச்சாட்டு உள்ளது. இவ்வளவு கோடி பேருக்கு இலவச பொருட்கள் வழங்கும் போது சேதம் ஏற்படுவது வழக்கம்தான். ஆனால், சேதம் அடைந்த பொருளை, கெட்டுப் போனது என்று தெரிந்தும் பொது மக்களுக்கு வழங்குவது ஏற்புடையது இல்லை என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த சூழலில் அரசு வழங்கிய வெல்லத்தைச் சாப்பிட்டதால் வயிற்றுப்போக்கு ஏற்பட்டதை, பாலிதீன் பையில் கொண்டு வந்து எடப்பாடி பழனிசாமி காட்டினார் என்று மிகவும் தரம் தாழ்ந்த வகையில் சிலர் பதிவிட்டு வருகின்றனர். இது பற்றி ஆய்வு செய்தோம்.
இந்த நியூஸ் கார்டின் தமிழ் ஃபாண்ட், டிசைன் வழக்கமாக புதிய தலைமுறை வெளியிடும் நியூஸ் கார்டில் உள்ளது போல இல்லை. எனவே, இது போலியானது என்பதை உறுதி செய்ய புதிய தலைமுறை வெளியிட்ட உண்மையான நியூஸ் கார்டை தேடி எடுத்தோம். ஜனவரி 11ம் தேதி இந்த நியூஸ் கார்டை புதிய தலைமுறை வெளியிட்டிருந்தது. அதில், “ரேசனில் தரப்பட்ட பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்கள் தரமற்றதாக இருப்பதாக மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். கமிஷன் அதிகமாக கிடைக்கும், என்பதால் ரேசன் பொருளை வெளிமாநிலத்தில் வாங்கியுள்ளனர். – அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி” என்று இருந்தது.

இந்த நியூஸ் கார்டு போலியானது என்பதை உறுதி செய்ய புதிய தலைமுறை டிஜிட்டல் பிரிவு நிர்வாகி ராசுஸ்ஸை தொடர்புகொண்டு கேட்டோம். அவரும் இது போலியான நியூஸ் கார்டு, எங்கள் நியூஸ் கார்டை பயன்படுத்தி போலியாக உருவாக்கியுள்ளனர் என்று உறுதி செய்தார்.
பொங்கல் பொருட்கள் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி கூறிய குற்றச்சாட்டு தொடர்பாகத் தேடினோம். நக்கீரனில் இது தொடர்பான செய்தி வெளியாகி இருந்தது. சேலம் மாவட்டம் ஓமலூரில் நடந்த அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று ஆலோசனை மேற்கொண்டார். பின்னர் நிருபர்களுக்குப் பேட்டி அளித்த அவர் கொடுக்கப்பட்ட பொங்கல் தொகுப்பின் தரம் மோசமாக உள்ளது. இரண்டரை டன் வெல்லம் மிக மோசமாக தரமற்று இருக்கிறது. இதை பயன்படுத்தி பொது மக்கள் எப்படிப் பொங்கல் வைக்க முடியும் என்று கேள்வி எழுப்பியதாகக் குறிப்பிட்டிருந்தனர்.
அசல் பதிவைக் காண: nakkheeran.in I Archive
இதன் மூலம், தமிழ்நாடு அரசு வழங்கிய பொங்கல் பொருட்களைச் சாப்பிட்டு வயிற்றுப்போக்கு ஏற்பட்டதாகவும், அதை பாலிதீன் பையில் பிடித்து வந்து எடப்பாடி பழனிசாமி காட்டினார் என்று பகிரப்படும் நியூஸ் கார்டு போலியானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
பொங்கல் தொகுப்பில் வழங்கப்பட்ட வெல்லத்தை சாப்பிட்டதால் தனக்கு வயிற்றுப் போக்கு ஏற்பட்டது என்று எடப்பாடி பழனிசாமி கூறியதாக பரவும் நியூஸ் கார்டு போலியானது என்பதை ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel

Title:எடப்பாடி பழனிசாமி கையில் இருப்பது என்ன? போலியான செய்தியால் சர்ச்சை…
Fact Check By: Chendur PandianResult: False
