காவலர் சீருடையில் இருக்கும் இரண்டு பெண்களின் படங்களை பகிர்ந்து, அம்மா மகளின் காவல் பணி தொடர வாழ்த்துகள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இவர்கள் உண்மையில் போலீஸ் அதிகாரிகள்தானா என்று ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook 1 I Archive 1 I Facebook 2 I Archive 2

இரண்டு பெண் போலீஸ் அதிகாரிகள் படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், "அம்மா #மகள் இவர்களின் காவல் பணி தொடர நாமும் #வாழ்த்துவோம்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை Gopinath Natarajan என்பவர் 2021 ஜூன் 1 அன்று பகிர்ந்துள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

அம்மா, மகள் என இருவரும் போலீஸ் அதிகாரிகளாக உள்ளனர் என்று சமூக ஊடகங்களில் பலரும் பகிர்ந்து வருகின்றனர். இப்படி அம்மா, மகள் இருவரும் போலீஸ் அதிகாரிகளாக எங்காவது இருக்கிறார்களா என்று கூகுளில் தேடினோம். அப்படி எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை.

எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட படத்தை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது இந்த புகைப்படம் பல ஆண்டுகளாக சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவது தெரிந்தது. 2019ம் ஆண்டு வெளியான ஃபேஸ்புக் பதிவு ஒன்றில், "#அம்மா_மகள் இருவரும் சேர்ந்து ஏழை குழந்தைகளுக்கு மாசா மாசாம் சிறிய தொகை பணத்தை வழங்க வருகின்றார்கள்" என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

அசல் பதிவைக் காண: Facebook I Archive

தொடர்ந்து தேடிய போது, மலையாள டி.வி சீரியல் ஒன்றின் காட்சிகளும் நமக்குக் கிடைத்தன. படத்தில் இருப்பவர் கேரள டி.வி சீரியல் நடிகை காயத்ரி அருண் என்று குறிப்பிட்டு சில படங்கள் கிடைத்தன. 2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் "சிறுமியிடம் பாலியல் சில்மிஷம் செய்தவனின் ஆணுறுப்பை சுட்ட போலீஸ் அதிகாரி" என்று இவருடைய படத்துடன் பதிவு ஒன்று வைரல் ஆனது. அது பற்றி நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ ஆய்வு நடத்தியிருந்தது நினைவுக்கு வந்தது. அந்த கட்டுரையைக் காண இங்கே கிளிக் செய்யுங்கள்.

அசல் பதிவைக் காண: Facebook I Archive

படத்தில் இருப்பது பரஸ்பரம் என்ற மலையாளம் டி.வி சீரியலில் போலீஸ் அதிகாரி வேடத்தில் நடித்த காயத்ரி அருண் என்று தெரிந்தது. அவருடைய ஃபேஸ்புக் பக்கத்தை பார்த்தபோது போலீஸ் அதிகாரி வேடத்தில் இருக்கும் பல படங்களை அவர் வெளியிட்டிருந்தார். அதே நேரத்தில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட புகைப்படம் நமக்கு எங்கும் கிடைக்கவில்லை. ஆனால், அவர் தன்னுடைய அம்மாவுடன் இருக்கும் படத்தை அவர் பகிர்ந்திருந்தார்.

அதே நேரத்தில் காயத்ரி அருண் படத்தை ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட புகைப்படத்துடன் ஒப்பிட்டுப் பார்த்தபோது, இரண்டு படத்திலும் இருப்பது ஒருவரே என்ற முடிவுக்கு எளிதில் வர முடிந்தது.

நடிகை காயத்ரி அருண் படத்தை பயன்படுத்தி ஏற்பனவே சமூக ஊடகங்களில் வதந்தி பரப்பப்பட்டு வந்துள்ளது. தற்போது, மீண்டும் அவர் படத்தை பகிர்ந்து வதந்தி பரப்பி வருகின்றனர். இதன் அடிப்படையில், காவல் துறையில் பணியாற்றும் தாய், மகள் என்று பகிரப்படும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

மலையாள தொலைக்காட்சி சீரியல் நடிகை படத்தை காவல் துறையில் பணியாற்றும் தாய், மகள் என்று தவறான தகவல் சேர்த்து சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருவதை ஃபேக்ட் கிரஸண்டோ உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:காவல் துறையில் பணியாற்றும் தாய் - மகள் என்று பகிரப்படும் படம் உண்மையா?

Fact Check By: Chendur Pandian

Result: False